செவ்வாய், 4 நவம்பர், 2008

ஏய் அலையே...


அலைகளுக்கும் அழுகைகளுக்கும் நடுவே
ஆச்சரியமும் தான்.

ஆண்டவன்
பிரித்துவைத்த மனிதனை
அலைகள் வந்து
மனம் பிணைத்துச் சென்றதால்...

திக்கற்று
நிர்க்கதியானவர்களைக் கண்டபோதும்
நெஞ்சடைப்பையும் தாண்டி
நெஞ்சின் மூலையில்
ஏதோ கொஞ்சமாய் நிம்மதி.

எங்கள் குச்சி வீடுகளை
குலைத்தெறிய முடிந்த உன்னால்...

உறவுகள் எல்லாமாய்
குழந்தை என்றும் பாராமல்
வளர்த்த நாய்க்குட்டி என்றும்
விலக்காமல்
கும்பிட்ட கடவுளர்களையும் சோ்த்து
குதறிப்போட முடிந்த உன்னால்...

சொத்துக்களைத் தின்று
சோற்றுக்கின்றி எம்மை
அலைய விடவும் அலையே
முடிந்தது உன்னால்...

தவிர

இத்தனை நாளும்
உன் அழகையே இரசித்த
எங்களின் ஆடைகளை இழுத்து
உன்னைப் போல் அம்மணமாக
ஓடவிடவும் முடிந்தது உன்னால்.

ஆனால்... ஆனால்...

பிணம் விழுங்க முடிந்த உன்னால்...
மரணங்களை மலையாக
குவிக்க முடிந்த உன்னால்...
எங்கள் மனிதநேயத்தை
சிதறடிக்க முடிந்ததில்லையே.

மாடிகளை, மதிற்சுவர்களை
இழுத்து இடித்துப் போட
முடிந்த உன்னால்...
எங்கள் மனஉறுதியை மட்டும்
உடைத்து அடித்துப்போக முடிந்ததில்லையே.

உன் துரோகம் கூட
எங்களுக்குள் துணிவையே
தூவிப்போயுருக்கிறது.

அழுகிறோம் உண்மை.
ஆனால்... துடைப்போம்.
மீண்டும் எழுவோம்.

உன் முதுகில் மீனவன் படகேற்றி
வலைவீசி
உன் அலைக்கூந்தலுக்கு
மீண்டும் உச்சிபிரிப்போம்.

மீண்டும்
உன் கரைக்கு வருவோம்.
கால் நனைப்போம்.

தெரியும். அப்போது...
பொங்கியழித்த
உன் அலைக்குஞ்சுகள்

புதிதாயப் பிறப்பெடுத்து வந்து
எங்கள் கால்களில்
நுரைப்பூக்கள் தூவி
நிச்சயம் மண்டியிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்