வியாழன், 6 நவம்பர், 2008

அன்னை உன்னை...

சொத்தென்ன பெரிதோ
உலக சுகமென்ன அரிதோ

என்னைப் பத்து திங்கள் சுமந்த
உன் பாதங்களை
என் தலைமேல் சுமப்பதிலும்

செத்திடினில் உன் மடியில்
அல்லால்
செரிக்காது என் உடலும்.

அத்தன்மை ஆனாலும்
என் ஆவி உன் கருவில்

உத்தமியே
உதித்திடனும் மற்றொரு நாள்
உன் மகனாக.

எப்படிச் சொல்லியென்ன
பெத்தகடன் தீர்ப்பேனோ?
என் வயிற்றில் ஒருநாள்
அன்னையே உன்னைப்
பெற்றெடுக்கும் நாள் வரையில்.

பள்ளிகளில் என் பாடங்களைப்
பரிசுக்குரியதாக்கியவள்.
பத்து நபர் மத்தியிலே
என் பகுத்தறிவை
பாராட்டிட வைத்தவள்.

நான் அள்ளி அள்ளிப்
புள்ளிபெற வேண்டுமென்றே
கண்விழித்து உயிர் சுருங்கி
புள்ளியாகிப் போனவள்.

உன் மடிக்குப் பின்னே
எனக்கு எதுவும்
உறக்க சுகம் தந்ததில்லை.

உன் இடுப்பைவிடவும்
வேறு நல்ல இதமான இருக்கையும்
கிடைத்ததாய் இல்லை.

உன் கைப்பிடிக்குள்
வாழ்ந்ததைப்போல
எனக்கு வேறு காப்பரண்கள்
கிட்டவுமில்லை.

எனக்காகவே வருந்தி
பால் சுரந்த உன் மேனி
அன்பால் குழைத்த மொழி வருடல்
பண்பால் கோடிட்ட வழிகாட்டல்
என் வாழ்வை விரித்து
வாழ்வளித்த கருணை

எல்லோரும் சொன்னார்கள்.

உனக்கொரு தினம் படைத்து
உன்னை ஒரு நாளில் நினைத்து
கொடி சூடிக்கொண்டாடுவாராம்.

மேடை முன்
கூடிக் குழுமிக் குமைந்து
மெய் சிலிர்க்கப் பேசுவாராம்.

இதுவெல்லாம் போதுமோ
என் ஈழ வீரத்தாயே...
உன் ஈகைக்குணம் போற்றி மகிழ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்