செவ்வாய், 4 நவம்பர், 2008

இன்னொரு விடுதலைக்காக


அங்கெல்லாம்
அட்டைப்புழுக்களுக்கும்
அவர்களின் அரசியல்வாதிகளுக்கும்
அதிக பேதம் இல்லை.

வடிக்கும் வியர்வைக்கும்
வடியும் ஒட்டுப்பாலுக்குமாக

வேலிக்குள் கூலி.
மனிதத்தை விடவும்
மலிவான விலைக்கு உழைப்பு.

ஏய், ஏழைத்தோழனே...
இன்னும் எத்தனை நாள்
நாட்கூலியாகவும்

இன்னும் எத்தனை தடவை
குட்டுப்படுபவனாகவும்
உனக்கு இருக்கச் சம்மதம்?

இந்த தேசத்தின் சிகரமாக
உயர்ந்த மலைகளையும்
தேடியும் கிடைக்காத
மாணிக்க மண்ணையும்
உன் சொத்துக்களாய் வைத்திருந்தும்...

பார்க்கும் இடமெல்லாம்
பனிச்செடி மலையின்
பசுமையும் செழுமையும்
பரந்து கிடக்கும் மண்ணில்...

பாவம்.
நீ மட்டும்
எப்படி உணர்ச்சியற்ற
உயர்ச்சியற்ற வரண்ட சமூகமாய்...

நீ மாறத்துணிவது எப்போது?
மலை முகடுகளில்
உன் குரல் மார்தட்டி
எதிரொலிப்பது எப்போது?

ஓ...
மலையக இளைஞனே
உன் தலைவிதியை துணியும்
தலைமைத்துவம் புதுப்பி.
நீ விழித்துக் கொண்டதாய்
அவர்களிடம்
விடுதலை முழக்கத்துடன் அறிவி.

முடியும்...
முதலில் உன் முன்னோரின்
அடிமைச் சுவடுகள்
படிந்து பதிந்து கிடக்கும்

உன் பாதச்சுவடுகளைத் தூக்கி
இனியேனும்
முயற்சியும் முதுகெலும்புமுள்ள
சமூகமாய் முன்னேற

புதிதான பாதையில்
அடிவைக்க விரைந்து முடிவெடு.

ஏய்...
இன்னும் எத்தனை தடவை
குட்டுப்பட உனக்குச் சம்மதம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்