திங்கள், 24 நவம்பர், 2008

புலர்வுகள்

நகரும் முண்டங்களை விடவும்
நகராத பிண்டங்களே
பார்வையைத் திருப்புகின்றன
வழிமுழுவதும்
நாய்கள் இழுத்துவரும்
அழுகல்களின் மீதிகளை
தேடிச்சுமக்கின்றனர் மிஞ்சியவர்கள்.

இமையடிக்கும் ஒவ்வொரு இடைவெளியிலும்
சாவுக்காக நேரமொதுக்கி
எல்லா நடைப்பிணங்களும்
அதற்கான வரவேற்புடன் நகர்கின்றன.

தனித்தவொன்றான பிரக்ஙை ஏதுமற்று
வன்மங்களின் சுட்டுதல்களை
வழிமொழிந்து ஆதரித்து
இன்னுமொரு நாளுக்கான இருத்தல்
உறுதி பெறுகிறது.

கவடுகளுக்கிடையே தலைசெருகி
வானை வாசித்து இகழ்ந்து
தம் பற்களை தாமாகவே கடித்துச் சப்பி

வலிய நகங்களை பிடுங்கி எறிந்து
இறைச்சியால் மட்டுமேயான விரல்களால்
இரத்தம் கசிய

முன்னுள்ளவர் முதுகு சொறிந்து தடவ
முடியுமானவர்களின் வாழ்தலுக்கான
தகமைகளோடேயே புலர்கிறது.

ஒவ்வொரு
சூரிய சந்திர புலர்வும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்