திங்கள், 24 நவம்பர், 2008

மீண்டெழும் நாளில்


செழுமையாக நுரைத்து
அலை பரவும் பெருநீர்ப்பரப்பில்
அலையடிப்பில் கரையொதுங்கும்
கிளிஞ்சல்களாகி
நிச்சயமற்ற தருணங்கள் ஒதுங்கும்.

இலைச்சுருட்டி மூடிக்கட்டியதான
கூட்டுப்புழுவின் ஒடுங்கிய ஒழிதலுடன்
வாழ்தலின் பெரும் பயணம் தொடரும்.

ஒவ்வொரு உயிர்ப்பிற்கும் நீருகுத்து
பின்னாக
முலை வரண்டுபோன சுடுகாற்றாக
காலம் சபிக்கப்பட்டதில்
மீதமாகி
கசிவெடுத்து ஒடுங்கிய கடைசி சொட்டுகளில்

காலம் பதித்த ஆழச்சுவடுகள் மீந்து வழிய
அவையும்
குடம்பிகள் தெறிக்கும் ஜீவநதியாகும்.

எங்கிருந்தோ ஏவப்படும் ஒளிச்செறிவில்
இருட்டுகள் ஓய்வெடுக்க
வைக்கோல் பழுப்பொளி பரவும் வெளியில்
எல்லா முளைகளும்
மூச்சுவிடும். உயிர்க்கும்.

நிலைத்திருக்கும் இருப்புகள் வேண்டி
முக்குகின்ற பறவைகள்
சிறகுகளை பழுதுபார்த்து
அகல விரித்து உயரப்பறக்கும்
ஒளிக்கீற்றின் திசை தேடி

மீண்டெழும் நாளொன்றில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்