திங்கள், 24 நவம்பர், 2008

அப்பாவிகளின் சார்பாக


எல்லோருக்கும் தெரியும்.

இங்கு இருப்பவைகளையும்
இன்று நடப்பவைகளையும்
அவர்களும் இவர்களுமே உருவாக்கினார்கள்.

முற்றத்து மணலில்
மல்லாந்து உறங்கியே பழகியவர்களை
வீட்டின் உள்ளும் வெளியேயும்
ஊர் எங்கிலும்
காட்டினுள்ளும் தேடுகின்றார்கள்.

சுவடுகளை அழிக்க முடியாதவர்கள்
இப்போது
கால்களையே வெட்டியெறிய அலைகிறார்கள்.

ஏமார்ந்து

புணர்வு மயக்கத்திலிருக்கும்
ஒரு சோடி சுவர்ப்பல்லிகளை
வெட்டி வீழ்த்தி
தணிகிறது அவர்களின் வீரம்.

மண்ணை நேசித்த
எல்லோராலும் எல்லா நேரத்திலும்
மண் புழுக்களைப் போல
நிராகரிக்க முடியாதவர்களாக
மண்ணிற்குள்ளும் வெளியிலுமாக
சேமிக்கப்படுகிறோம்.

சிலர் சொல்லிக்கொண்டார்கள்.

ஒடியல் கூழினுள்
இறால்களையும், நண்டுச்சதைகளையும்
மீன் துண்டுகளையும் போல
கலந்து மிதந்தோம் என்று.

பின்பாக

மலத்தியோன் தூவப்பட்ட
கடியான்களைப் போல
அவர்கள் மயங்கிப்போனார்கள்.

ஆர்ப்பரிப்புகள் எல்லை கடக்க
கண்ணீரின் பாசனத்திலும் ரத்த உரப்பிலும்
விளைகிறது தேசம்.

அப்பாவிகளின் பகல்களின் மீது
கரியள்ளிப் பூசுகிறவர்கள்
இன்னும் வென்றுவிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்