புதன், 17 டிசம்பர், 2008

மனநோயாளர்களின் பிரக்ஞையும் மாறுபடும் கருத்தியலும்

என்னிடம் நெருங்கும் சில
மனநோயாளர்களின் பிரக்ஞைகள்
வினோதமானவை.

அத்தகையவர்களிடம்
நெருங்குவதும் பழகுவதும்
துணிவுடையதும் சுவாரசியமானதும் கூட.

வாய்ப்புள்ள போதெல்லாம்
கத்தத் தொடங்கி
அர்த்தமில்லாத உளறல்கள் போல
ஏதேதோ பேசுவார்கள்.

தாம் பேசுவது எல்லாமும்
செய்வது முழுவதும்
மிகச் சரியானவை.
என்பதே அவர்களின் நம்பிக்கை.

தம்மை பெருமையுடன் பேசுவதிலும்
மற்றவர் அதை ஆமோதிப்பதிலும்
அசட்டுத்தனமான ஆனந்தம்
அவர்களுக்கு.

கையில் கிடைப்பனவற்றையெல்லாம்
தாம் விரும்புகின்றபடி
மாற்றமுடியும்.
என்ற எண்ணத்துடன் முயற்சிப்பார்கள்.

அல்லாதபோது
மாறவேண்டுமென
வரட்டுத்தனமாக அடம்பிடிப்பார்கள்.

தம் குளறுபடிகளையெல்லாம்
சகித்துக் கொள்பவர்களை
சேர்த்துக் கொள்வதும், சேர்ந்து கொள்வதும்

மாறானவர்களிடமிருந்து
விலகி நடப்பதும், விலக்குவதும்
அவர்களின் அறியாமைத் தனங்களின்
அடையாளங்களாயிருக்கின்றன.

என்னை நோக்கி நகரும்
மனநோயாளர்களின் பிரக்ஞைகளும்
கருத்தியலும் கூட
இன்னும் வினோதமானவை.

முன்பொரு தடவை ஏற்றதை
மறுத்துரைப்பதும்.
மறுத்திருந்ததை ஏற்பதும் என...
தருணத்திற்கு ஏற்ப
கருத்துக்களுடன் முரண்படுவார்கள்.

அவர்கள் மீதான நம்புதல்கள்
அசாத்தியமானதும் அசாதாரணமானதும்.

அற்புதமானவற்றை தூற்றி
தூக்கியெறிந்துவிட்டு
கழிவுகளை சிலாகித்துப் பேசுவார்கள்.

கழிவுகளோ அற்புதமானவையோ
யார் கொடுத்தார்கள் என்பதே முக்கியம்.
நாற்றம் பற்றிய
துல்லியமான பிரக்ஞையிலிருந்து
அறுந்துபோய்க் கிடக்கிறார்கள்.

அவ்வப்போது
அவர்களின் நடத்தைகள்
கேள்விக்கும், கேலிக்கும் உரியவையாகும்.

பாராட்டல்கள் பற்றிய ஏக்கங்கள்
அவர்களுக்குள்
நிறைய அமிழ்ந்து கிடக்கின்றன.

துரதிஸ்டம்...

தாம் மனநோயாளர்கள் என்பதை
அவர்களால் எப்போதும்
உணர்ந்துகொள்ள முடிவதில்லை.

செவ்வாய், 16 டிசம்பர், 2008

வாழ்தலின் நிதானம்

அடைக்கப்பட்ட ஆடுகளின் விடுதலை யாசகம்
விமர்சிக்கப்பட்டு முடிவதற்குள்ளாக
சலனமின்றி மூப்படைகிறது
சந்ததிகளின் ஆயுள்.

விடியலைப் பறைசாற்றும் நோக்கில்
ஆர்ப்பரித்த சேவல்களால்
வாழ்தலின் வேட்கை அதிகரித்து
உயிர்த்தெழுந்த போதெல்லாம்
சேவல்களின் தலைகள் பலியிடப்படுகின்றன.

சிறை மீட்பாளர்கள்
சிந்திக்கும் அவகாசத்தில்
கூண்டுக்குள் வேட்டையாடல்கள்
விஸ்தரிப்புடன் அரங்கேறி முடியும்.

கசாப்புக் கடைக்காரனின்
நீட்டப்பட்டிருக்கும் கைகளின் முடிவிலுள்ள
பிடியளவு தழைகளையும்

ருசித்துத் தின்னும் ஆட்டின்
இறுதி நிமிட வாழ்தலின்
நிதானத்திற்கு நிகரானது
ஆதிக்குடிகளின்
நம்பிக்கையும், தீர்மான நிராகரிப்பும், எதிர்ப்பும்.

ஓர்மத்துடன்
ஒவ்வொரு கத்திவீச்சுக்கும்
தலை மறுக்கும் ஆற்றலுடன்
ஆடுகள் துணியும்.

ஓர் தினம் பட்டி உடைக்கும்.
பச்சைப் பெருவெளிகள் தேடி
படையெடுக்கும்.

பின்னாக வயிறு புடைக்க மேயும்.
வெளி முழுவதும் உலவும்.
அவ்வெளியே
பின் நாளில் பட்டியாக்கப்படும்.

ஆடுகளுக்காக..

விரட்டப்படும் அப்பாவிகளும் மீட்பர்களும்


கேளுங்கள் கிறீஸ்துவே!

உமக்குப் பின்னரும்
மீட்பர்கள் எனச் சொல்லி
யூதாஸ்கள் ஒன்றுகூடி வருகி்றார்கள்.

விரட்டவல்ல ஏவலாளிகளிடம்
கொம்புகளையும் சாட்டைகளையும்
அவர்களே ஏற்பாடு செய்தார்கள்.

முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு
மந்தைகள்போல
திசை முழுவதும் விரட்டப்பட்டவர்களிடம்
தங்களின் பாவங்களையும்
சுமக்கத் தருகிறார்கள்.

ஒவ்வொரு தொலைவுக்குப் பின்னாகவும்
தேடிப் பொறுக்கப்படும்
அழுகல்களின் உள்ளிருந்து
முள் முடிகளோடு உருவியெடுக்கப்படும்
எலும்புகளால்
சிலுவைகளை செய்து தருகிறார்கள்.

ஒவ்வொரு பலியின் போதும்
அப்பாவிகளின் தசைகளையே, ரத்தத்தையே
உண்கிறார்கள். குடிக்கிறார்கள்.

வெளி முழுவதும் குவிக்கப்படும்
அப்பாவிகளின்
மண்டை ஓடுகளை நோக்கி
கல்வாரிகள் இதுவென கை நீட்டுகிறார்கள்.

அவர்களின் உயிர்ப்பிற்காக
மீண்டும் மீண்டும் அப்பாவிகளே
மரிக்கவேண்டியதாயுளது.

இப்போது சொல்லுங்கள் !
வழி தவறிய இந்த ஏய்ப்பர்களா
மீட்பர்களும் நல்ல வழிகாட்டிகளும்?

கற்களின் காழ்ப்பும் உளிகள் மீதான விமர்சனமும்


எனக்கெதிரானவர்களே!

இதோ,
இம்முறையும்
எனது அன்பின் உங்களுக்கான பங்கை
பெற்றுக்கொள்ளுங்கள்.

உளிகள் மீதான கற்களின் கோபம்
என்மீது உங்களுடையது.

தம்மை சிதைத்தமைக்காக
இருப்பை இடம்பெயர்த்தமைக்காக
இயல்பை மாற்றியமைத்தமைக்காக
......................................
.................................................. என

நியாயத்தின்படி
சிற்பி மீதான சிலைகளின் நன்றியுணர்வே
உங்களிடமிருந்து
எனது எதிர்பார்ப்பாக உளது.

ஈர்க்கப்பட்ட நாணிலிருந்து
விரட்டப்பட்ட அம்பினுடைய
நம்பிக்கையைப் போன்றதே.

எனது நம்பிக்கை.


பயணத்தின் வெளியில்
எங்கோவொரு முடிவில்
எனக்கான இலக்கின் அடைவுண்டு.

திங்கள், 15 டிசம்பர், 2008

ரயில் சினேகம்

தீக்குச்சி விழிகளுடன்
எதிரெதி்ர் இருக்கைகளில்
அமர்ந்து கொண்டோம்.

எரிந்து கொண்டு இறங்கினோம்.
வெவ்வேறு தரிப்பிடங்களில்.

மாறுபாடுகள்

உன் கொலுசொலி ஜாடைக்கு
ஓடிச்சென்று
ஜன்னல் திறந்தேன்.

வீதியில்
கனரக வாகனத்தின்
இரும்புச் சில்லுகள்
சங்கிலியைச் சப்பிக்கொண்டு நகர்ந்தன.

புழுக்கம்


கோடையைப் பார்க்கிலும்
நீயில்லாத குளிர்காலங்களே
எனக்குள் அதிகமாக புழுக்கமெடுக்கிறது.

அரிப்பு


எனக்கு அரிப்பெடுக்கிறது.

சொறிந்துகொள்ளவும் சுதந்திரமில்லை
சோதனைச் சாவடி
அருகில்.

அடிமை


தாயின் முலை ருசிக்குப் பழகிவிட்ட
சிசுவைப் போல
உனது ஆற்றுப்படுத்தலுக்கு
ஆளாகிவிட்டதனால்

ரப்பர் உறிஞ்சியைத்
துப்பிவிட்டு
அழுகின்ற குழந்தையின் அருவருப்புடன்

உனதற்ற வேறெந்த வார்த்தைத் தூண்டலுக்கும்
காது தீட்டி துலங்க இயலாமல்
திக்கு முக்காடுகின்றேன்.

காற்றில்லாத கிரகத்தில்
சுவாசிப்பதாக.

மலட்டுச் சிந்தனையாளர்கள்


தட்டித்தட்டி எழுப்பி
இனி
மீண்டும் மீண்டும் பிணங்களையும்
சுட்டுச்சுட்டு போட்டாலும்
இவர்களுக்கு சாவுகள் சலிக்காது.

போதனைகளைப் போதிமரத்தடியிலேயே
போட்டுவிட்டு வந்து
போதை தெளிந்தவன் பேச்சாக
கருத்துக்களில் தடுமாற்றம்.

விட்டு விடுங்கள்.

இவர்கள் சாவுகளைத் பிய்த்து
சதை சப்பிச்சப்பி
சத்தியாக்கிரக(மு)ம் இருப்பார்கள்.

நிலைத்துவிட்ட எழுத்துக்காரன்

நாங்கள்
தொல்லையென்றவன் தொலைந்ததும்
தொடரெழுதி அழுபவர்கள்.

வாழும்போது வாழ்த்தாமல்
அவனது கையெழுத்துப் பிரதிகளை
கசக்கியெறிந்து காறித்துப்புபவர்கள்.

அவனது எழுத்துக்களுக்குள்
எந்தப் பொருளுமில்லையென்று
எழுத்தாணிகளை முறிக்கத்
திட்டம் போடுபவர்கள்.

அவன் கருத்துக்களுக்கு
மாற்றீடாக வேறொன்றை ஏந்தி
மறுதலித்து நிற்பவர்கள்.

இன்று
சாவு வந்ததும்
அவனுக்காக
இரங்கலுடன் குமைதலொன்றும்
இதழொன்றில் நினைத்தல் தொடரொன்றும்
எழுதவென்று முடிவெடுத்துள்ளோம்.

இன்று அவன்
எங்களுக்குள்
நிலைத்துவிட்ட பெயரெழுத்துக்காரன்.

பலியாடுகள்


நிகழ்காலங்கள் தீ மூட்டப்பட்டதில்
கொழுந்துவிட்டு எரியும்
நெருப்பில்

அவிந்து உடல்கருகி
துடிதுடிக்க
சிறுபான்மையினர் படையலிடப்படுகின்றனர்
களப்பலியில்.

நம்பிக்கைகள் குவிந்து கிடந்த
எதிர்காலம்
முன்னேற்பாடுகளுடன் சூறையாடப்பட்டு
அவசரமாகத் தீர்ந்து போகின்றன.

கேள்விகள் அடுக்கப்பட்ட சுவர்களும்
தேய்ந்து நொருங்கி
ஓட்டையாகிவிட்ட நிலையில்

முண்டாசுக்கவியின் வாய் முகூர்த்தம்
பலித்துவிடும் அதிக வாய்ப்போடு
அங்கலாய்க்கும் மனதுகள்.

“சிங்......... தீவினுக்கோர் பாலம்.”


கழுத்துப்பட்டையும் சிவப்புப்பேனாவும்



போதும்.
விட்டுவிடச் சொல்லுங்கள்.

என்னிடம் சில
சிவந்தமையுடன் கூர்முனைப் பேனாக்கள்
இருப்பது உண்மையே.

அவை
ரத்தமும் சதையும்
சிந்தப்படுதலும் சிதறுதலும் பற்றி
எழுதுவதனால்

இரத்தத்தால் நிரப்பப்பட்டவையோ என
யாரோ சில(ர)தை
தவறாக்கி சொல்லிவிட்டார்கள்.

நம்புங்கள்.

முதலில்
சட்டையின் கழுத்துப்பட்டையை
பிடித்திழுப்பவர் கைகளை
விலக்கச் சொல்லுங்கள்.

உண்மைகளை மட்டும் பறையடிக்கும்
ஊடகக்காரன் என்பதால்
எதையும் ஏன்!
நாளை இதையும் கூட..

முதலில்
என்னை விட்டுவிடச் சொல்லுங்கள்.

பிறகு...

திங்கள், 24 நவம்பர், 2008

மாறுபாடான முகங்கள்


நிதர்சனங்களை கேள்விக்குள்ளாக்கி
முன்னுள்ள வெளி முழுவதும்
அகப்படும் வண்ணங்களை அப்பிக்கொண்டு

காலம்
தன் முகத்தை அழித்தழித்து
புதிதாய் வரைந்தடியே உளது.

அவசரத்தில்
இருளையும் ஒளியையும்
கிழித்துச் செல்வதாக
வரையப்படும் கோடுகளூடு பயணிக்கும்
நத்தையின் நகர்வொன்று
தூரத்தே தூர்ந்து புள்ளியாகித் தொலையும்.

பருவத்தை மறுதலித்துப் பெய்யும்
மேகத்தை எதிர்த்த வானம்
வறள...

சூனியப் பொழுதொன்றில்
குருத்துவனை புசிக்கும் சைவ கழுகுகளும்
பசு முலை உறிஞ்சும் பாம்புகளும் என
தத்தம் உயிர்தேற பிராயத்தனம் செய்வதாயுள.

தூரத்தெளியும் உயிர்த்தெழும்பும்
வண்ணத்திட்டுகள் இராச்சதங்களாகி
முன்னோக்கி
விசையோடு பயணித்து
இமையடிப்பில்
அப்பால் கடந்து போகின்றன
எதிர்ப்புகள் அற்றனவாக.

பின்னும்...

காத்திருப்புகள் ஏதுமற்றனவாக
காலம்
தன் முகத்தை அழித்தும் உரித்தெறிந்தும்
வண்ணமப்பி
வரைந்துகொண்டே போகிறது
சிக்கலான குறுக்குக்கோடுகளால்

போலி முகங்களை
விதவிதமாக.

தொலை வெளியிலிருந்து


மண்ணுக்கும் சமாந்தரமாக
முள்ளந்தண்டைக் கிடத்தி
நிலவொளி வெளியின் மண்சூட்டில்
அயர்ந்துறங்கி
காமங்கிளைத்து மென்மை தழுவ
சாவகாசமாகப் புணர்ந்து கிடக்கயில்

மேலான விடுதலையை பெற்றுவிட்டதாக
வெறுப்படைந்து காறித்துப்பி
தொலைவெளியில் யாரோ
பரிகசித்து கூச்சலிட்டு
உறுக்குவதாகத் தோன்றும்.

இடை(வெளி)விட்டு விலகி
தோலையிழுத்துப் போர்த்த
வேலிகளாகச் சூழும் மேலெழும்
மறுக்கப்படுவதான சுதந்திரமும் கட்டும்.

நடுநடுங்கும் இலையை
அலைவுறச்செய்வதான காற்றை முகர்ந்து
உயிர்த்தலுடன்
ஒவ்வொரு எல்லைவரையுமாக
எறியப்பட்டுத் திரும்பி

இயங்குதலுடனாகவுள்ள
எல்லா நீட்டங்களையும்
ஆமையின் உள்ளிழுப்புகளுடன் அடக்கி
முழுவதையும் ஊதாரித்தனம் செய்து

எதுவுமற்றதான சூனிய இருப்புகளோடேயே
நாளைய வாழ்வும் பிறவும்
எஞ்சிக் கிடக்கின்றன முன்னே.

அப்பாவிகளின் சார்பாக


எல்லோருக்கும் தெரியும்.

இங்கு இருப்பவைகளையும்
இன்று நடப்பவைகளையும்
அவர்களும் இவர்களுமே உருவாக்கினார்கள்.

முற்றத்து மணலில்
மல்லாந்து உறங்கியே பழகியவர்களை
வீட்டின் உள்ளும் வெளியேயும்
ஊர் எங்கிலும்
காட்டினுள்ளும் தேடுகின்றார்கள்.

சுவடுகளை அழிக்க முடியாதவர்கள்
இப்போது
கால்களையே வெட்டியெறிய அலைகிறார்கள்.

ஏமார்ந்து

புணர்வு மயக்கத்திலிருக்கும்
ஒரு சோடி சுவர்ப்பல்லிகளை
வெட்டி வீழ்த்தி
தணிகிறது அவர்களின் வீரம்.

மண்ணை நேசித்த
எல்லோராலும் எல்லா நேரத்திலும்
மண் புழுக்களைப் போல
நிராகரிக்க முடியாதவர்களாக
மண்ணிற்குள்ளும் வெளியிலுமாக
சேமிக்கப்படுகிறோம்.

சிலர் சொல்லிக்கொண்டார்கள்.

ஒடியல் கூழினுள்
இறால்களையும், நண்டுச்சதைகளையும்
மீன் துண்டுகளையும் போல
கலந்து மிதந்தோம் என்று.

பின்பாக

மலத்தியோன் தூவப்பட்ட
கடியான்களைப் போல
அவர்கள் மயங்கிப்போனார்கள்.

ஆர்ப்பரிப்புகள் எல்லை கடக்க
கண்ணீரின் பாசனத்திலும் ரத்த உரப்பிலும்
விளைகிறது தேசம்.

அப்பாவிகளின் பகல்களின் மீது
கரியள்ளிப் பூசுகிறவர்கள்
இன்னும் வென்றுவிடவில்லை.

கவிதை


வெண்விரிப்பின் வெளியில்
பேனா புணர்ந்தெழுந்து கடக்கையில்
மல்லாந்து
தொடை விரித்துக் கிடக்கின்றன
கவிதைகள்.

உணர்வுகளை பிரசவித்துவிட்டு.

வெருளிகளோடான வாழ்வில்




வேட்டை மிருகங்களுக்கு
இப்போது வேறென்ன வேலை.

இழுத்துப் பிய்த்து... சப்பித்துப்பி
நன்றாக கோலோச்சி
வேட்டையாட முடிகிறது.

பாவம் சனங்கள்...

எலும்பையும் கொஞ்சம் சதையையும்
வைத்துக்கொண்டு
எத்தனைக்கென்று பகிர்வது.

எல்லா முகங்களும் வெறிபிடித்தே திரிவதால்
மிரண்டு வெருண்டோடி
எங்கென்று வாழ்வது.

எதிர்த்து குரலெழுப்ப
முக்குகின்ற முனகுகின்ற காவல் வெருளிகளோடு
எவ்வாறு பலம் பெறுவது.

வாய்பொத்தும் கைகளும்
தீ மூச்சுவிடும் சுடுகுழல் முனைகளும்
சுதந்திரமாக நீள்கையில்

பாவம் சனங்கள்.

எலும்பையும் கொஞ்சம் சதையையும்
வைத்துக்கொண்டு.

சதுரக் கண்ணாடி முட்டை

காக்கைகளால் சூழப்பட்டுள்ளது
எனது வெளி.
நீ
ஒரு குயிலின்
எல்லாத் தவிப்புகளுடனும் உள்ளாய்.

 கையில்
ஒரு சதுரக் கண்ணாடி முட்டையைப் போல்
 காதலைத் தந்துள்ளாய்.

இப்போது
அஜாக்கிரதையாக என்னால்
இருந்துவிட முடிவதில்லை.
உறங்குகையில்..வீதிவலம் போகையில்..

மடியில் கட்டிக்கொண்டே தான்
மலங்கழிக்கவும்
வேண்டியதாயிருக்கிறது.

பாதியில் விழித்துக்கொண்ட
பின்சாமத்து
நிர்வாணக் கனவைப் போல
ஒரே இரவில்
அதை அவசரமாக கலைத்துவிட
யாரையும் அனுமதிக்க முடியாது.

அவித்த முட்டையைப் போல
இனியதை
ஒருபொழுதின் உணவில் சேர்க்கவோ
பலருமதைப் பகிரவோ முடியாது.

அதை நானே சினைப்படுத்தி
எனதன்பை
உயிர்ப்பிக்க விரும்புகிறேன்.

மழைக்கால முற்றத்தில் குமிழும்
நீர்க்குமிழிகளைப் போல
நீளக்கண்ணாடிக் குவளையில்
நிறைந்து வழியும்
பியரின் நுரையைப் போல
எனக்கது மிக அழகானதும்.
விருப்பமானதும்.

பிச்சைக்காரனின்
கோவணத்தைப் போல
இன்னும்
பெண்மை பேசும் பெண்ணின்
சுருங்காத வயிறைப் போல
அதை நான் பாதுகாப்பேன்.

பின்பொரு தடவை

பல வண்ணக் காட்டுண்ணிப் பூக்களின்
சாயம் பூசிய பட்டாம்பூச்சியாகவோ
சிறு பராயத்து வெள்ளை முயலாகவோ

வாய்க்கும் ஒரு நாளில்

குழந்தை பருவத்து
என்னைப் போலவோ அதை அன்பளிப்பேன்.

புலர்வுகள்

நகரும் முண்டங்களை விடவும்
நகராத பிண்டங்களே
பார்வையைத் திருப்புகின்றன
வழிமுழுவதும்
நாய்கள் இழுத்துவரும்
அழுகல்களின் மீதிகளை
தேடிச்சுமக்கின்றனர் மிஞ்சியவர்கள்.

இமையடிக்கும் ஒவ்வொரு இடைவெளியிலும்
சாவுக்காக நேரமொதுக்கி
எல்லா நடைப்பிணங்களும்
அதற்கான வரவேற்புடன் நகர்கின்றன.

தனித்தவொன்றான பிரக்ஙை ஏதுமற்று
வன்மங்களின் சுட்டுதல்களை
வழிமொழிந்து ஆதரித்து
இன்னுமொரு நாளுக்கான இருத்தல்
உறுதி பெறுகிறது.

கவடுகளுக்கிடையே தலைசெருகி
வானை வாசித்து இகழ்ந்து
தம் பற்களை தாமாகவே கடித்துச் சப்பி

வலிய நகங்களை பிடுங்கி எறிந்து
இறைச்சியால் மட்டுமேயான விரல்களால்
இரத்தம் கசிய

முன்னுள்ளவர் முதுகு சொறிந்து தடவ
முடியுமானவர்களின் வாழ்தலுக்கான
தகமைகளோடேயே புலர்கிறது.

ஒவ்வொரு
சூரிய சந்திர புலர்வும்.

மீண்டெழும் நாளில்


செழுமையாக நுரைத்து
அலை பரவும் பெருநீர்ப்பரப்பில்
அலையடிப்பில் கரையொதுங்கும்
கிளிஞ்சல்களாகி
நிச்சயமற்ற தருணங்கள் ஒதுங்கும்.

இலைச்சுருட்டி மூடிக்கட்டியதான
கூட்டுப்புழுவின் ஒடுங்கிய ஒழிதலுடன்
வாழ்தலின் பெரும் பயணம் தொடரும்.

ஒவ்வொரு உயிர்ப்பிற்கும் நீருகுத்து
பின்னாக
முலை வரண்டுபோன சுடுகாற்றாக
காலம் சபிக்கப்பட்டதில்
மீதமாகி
கசிவெடுத்து ஒடுங்கிய கடைசி சொட்டுகளில்

காலம் பதித்த ஆழச்சுவடுகள் மீந்து வழிய
அவையும்
குடம்பிகள் தெறிக்கும் ஜீவநதியாகும்.

எங்கிருந்தோ ஏவப்படும் ஒளிச்செறிவில்
இருட்டுகள் ஓய்வெடுக்க
வைக்கோல் பழுப்பொளி பரவும் வெளியில்
எல்லா முளைகளும்
மூச்சுவிடும். உயிர்க்கும்.

நிலைத்திருக்கும் இருப்புகள் வேண்டி
முக்குகின்ற பறவைகள்
சிறகுகளை பழுதுபார்த்து
அகல விரித்து உயரப்பறக்கும்
ஒளிக்கீற்றின் திசை தேடி

மீண்டெழும் நாளொன்றில்.

வெள்ளி, 21 நவம்பர், 2008

நிலைத்திருத்தலின் பாடுகள்


வாழ்வின் இச்சைவால்
நீண்டு செல்கிறது.

வார்த்தையும் சில நொடிநேர
மௌனமான புன்னகையும் கூட
வெளியை விரிக்கிறது
நம்மிடையே.

இருத்தலுக்கான
நிச்சயத்தை உணரும் வரை
நிலைப்பு என்பது ஊசலாடியபடியே
காலத்தைக் கெஞ்சுகிறது.

மண்ணின் மீது
ஏர்க்கால்களைப் போல
ஆழப் பதிந்த உணர்வுகளை
இன்னும் ஆழத்தில் புதைக்கிறார்கள்.

இப்போது
மரணத்தின் பின்னர்.

தனித்ததான உடன்பாடுகள்

எனக்கு உன் மீதான
எந்தவொரு உடன்பாடுமில்லை.

உன் மொழி

என்னில் சிறு மயிரைத்தானும்
உதிர்த்தாது. உறுதியாக்காது.
சிரைக்காது. செப்பனிடாது.

சிலவேளை...
உன்னிலும் அதுவாகவே.

உனக்கான தனித்துவமுண்டு.
அது எனக்கும் கூட.

உனதான முன்மொழிவுகளை
முன்னிறுத்த
உனக்கும் எனக்கும் முன்பாகவொரு
பெருவெளி அனுமதிக்கப்பட்டிருக்கிறது
நம்மால்.

அதிலெதையும் விட்டுச்செல்ல
உனக்கு உரித்துண்டு.
அது எனக்கும் கூட.

அதிலெதையேனும்
மாற்றம் செய்யவும் மறுப்பேதுமில்லை
எவருக்கும்.

ஆனாலும்...

எனக்கு உன் மீதான
எந்தவொரு உடன்பாடுமில்லை
தனித்ததாக.

என் சுயசரிதையில்


அவசர அவசரமாக
எழுதி முடிக்கும் சுயசரிதையில்
சில வெற்றிடங்களையும்
விட்டுச் செல்கிறேன்.

நிதானமாக...
உன்னைப்பற்றிய தீர்மானங்களை
இட்டு நிரப்புவதற்காக.

வெள்ளி, 14 நவம்பர், 2008

இருளும் உலகம்






இருளின் கைகள் வலியன போலும்
கூரையென அகல விரிகிறது.

சிரிக்கும் மனிதர்களின் உலகம்
இருள்கிறது.
சிவப்பாக மஞ்சளாக கறுப்பாக.

நெருப்பால் நீரால்
புகையாக இரத்தமாக
ஒளியின் வாலில் தொங்கியபடி
இருள்கிறது.

எல்லா மனிதர்களின் கைகளும்
குறண்டு போயிற்று.
யாரையும் யாராலும்
நிறுத்த முடியவில்லை.

எல்லோரின் முதுகெலும்புகளும்
முறிந்து நொருங்கிப் போயிற்று.
எவரையும் எவராலும்
சுமக்கவும் இயலாது போய்விட்டது.

சிரிக்கும் மனிதர்களின் உலகம்
சூனியமாகிறது.
ஜீவிதம் அர்த்தமற்றதாகிவிட்டது.

நீண்டு இசையும்
வாழ்க்கைப் பாடலில் குரல்
தழுதழுத்து முக்குகிறது.

மிஞ்சியிருக்கும் பாடலின்
ஒழுங்கற்ற வரிகளை சுமந்து கொண்டு
ஒவ்வொருவரும் தத்தம் வண்டிகளை
இழுத்துப் போகின்றனர்.

ஏழைகளின் வயிறுகளை அடகுவைத்து
நிர்மாணிக்கப்பட்ட
மைதானம் நோக்கி.

சிரிக்கும் மனிதர்களின் உலகம்
இருள்கிறது.
பச்சையாக நீலமாக சிவப்பாக சாம்பலாக.

அதோ!

தூரத்து நிலாவெறிப்பில்
அவர்களது நிழல் அவர்களுக்குள் ஒடுங்க
இராக்கால யாசகர்கள்

தமக்கான பாடலை
பாடிக்கொண்டு போகின்றார்கள்.

துர்சகுணங்கள் மிக்கதான இரவில்
அவர்களது குரல்
ஏதோவொரு அர்த்தமுடைய பாடலை
பாடுவதாக உளது.

தமக்கான தொனியுடன்
தமக்குகந்த சுதந்திரத்துடன்
இருளை விழித்து
நிலவை நோக்கிய பாடலை
பாடிக்கொண்டு போகின்றார்கள்.
அவர்களுக்கான உரிமையுடன்.

சிரிக்கும் மனிதர்களின் உலகம்
இருள்கிறது.
சிவப்பாக கறுப்பாக.

வாக்(கு)கெடுப்பு




நீங்களும் நாங்களுமாக
வாக்களிக்க கூடினோம்.

நாக்கில்லாதவர்களுக்காக.

ஊர் வாங்கப்போனவர்கள்




ஊர் வாங்கப்போனவர்கள்
திரும்பி வந்தார்கள்.

கனவுகள் உடைந்த
கல்லோடும் மண்ணோடும்.

தேசத்தின் வரைபு




முகத்திலறையும் காற்று
அழுகிய பிணங்களின்
அடையாளங்களைக் கூவிச்செல்கிறது.
பலதடவை அது ஏக்கங்களின்
சுடுமூச்சையும் காவி வருகிறது.

அவ்வப்பொழுதுகளில்
மரணத்தின் அழைப்புகளையும்
அழுகைகளையும்
அருகிலும் தொலைவிலிருந்துமாக
கொணர்ந்து தொலைகிறது.

அடையாளப்படுத்தலற்ற
சாவுகளின் தரவுகளை
சேமக்காலைச் செய்திகளாக
வானொலிகள் உச்சரிக்கின்றன.

நல்லிணக்கம் பற்றிய
பாடல்களின் இடையிடையே.

தினசரி தொலைக்காட்சி
திரைகளின் முகங்கள்
குருதி வடியும் சம்பவங்களையே
மீண்டும் மீண்டும் மேலெழுப்புகின்றன.

காகிதமுகங்களையும்
விடுதலை வேண்டுதல்களையும்
கைகளால் உயர்த்திப் பிடித்தபடியுள்ள
பெண்களதும் முதியவர்களதும்
கவலை தோய்ந்த முகங்களாக
அவை திரையிடப்படுகின்றன.

பெரியவர்கள் தொலைவதும்
சிறியவர்கள் தேடுவதுமாக
நடைமுறை மாறிவிட்டது.

தெருவில் நடக்கையிலும்
பலர் அழைத்துப்போனவர்களாலும்
தொலைக்கப்பட்டதாக வாக்களிக்கிறார்கள்.

வாழ்வதற்கானவர்களையும்
வாழவைக்கும் எல்லாவற்றையும்
சிதைத்து

புதைவுகளின் மேடுகளில்
கோபுரங்களைக் கட்டியெழுப்புவதாக உளது
தேசத்தின் வரைபு.

இன்னும் பிடிக்கிறது.



நாகரிகத்தின் அழுத்தங்களை
இப்போது ஆசுவாசிக்க முடியவில்லை.

திசைக்கொன்றான அதன் நாக்குகள்
மூக்கில் வாய்வைத்துறிஞ்சி
திணறடிக்கின்றன.

அவசர உலகம்
கண்ணிமைக்கும் நொடியில்
இமை பிடுங்கிப் போய்விடுகிறது.
புருவம் உயர்த்துகையில்
புதியன நுழைவாயிலில்.

பருத்திக்கு பதிலீடாக
எதை மாற்றினாலும்
கோவணத்தை மாற்றிடாத
எனது தாத்தாவை
இப்போது மிகவும் பிடிக்கிறது.

வாழ்க்கையின் வெளி

கூடியழும் காகங்களின் அலறலும்
தனித்திருக்கும் இன்னொன்றின் கேவலும்
முழுக்கவனத்தையும்
அதன் வழியே இழுத்துப் போகிறது.

ஜன்னலால் பிரிக்கப்பட்ட
எனக்கிடையிலான
அதன் வெளி
நீண்ட அன்னியத்தை மேலும் விரிக்கிறது.

ஒரு வேலை நாளின்
காலை நேர பரபரப்பைப் போல
ஆரவாரத்துடன் தொடங்கும் ஒவ்வொன்றும்
மேலெழும்பும் பூனையினதும்
கவடு இடுக்கில் சுருளும்
நாயினதும்
பணிவு வால்களைப் போல

மிக அமைதியான மௌனத்துடன்
புதைந்தும்
அமிழ்ந்தும் போகின்றன.

நெடுஞ்சாலையில் செல்லும்
பேரூந்துப் பயணியின்
எச்சில் துப்ப முடியாத அதிருப்தியுடன்
அரைவட்ட அளவான
ஒவ்வொரு பகலின் ஓய்விலும்

நிரம்புகிறது
வாழ்க்கையின் சிறுவெளி.

காத்திருப்பு



தூரத்திலொரு வெள்ளி நட்சத்திரம்
தூர்ந்து
ஒளிமங்கித் தெரிகிறது.

வீதியோர
நியோன் விளக்குகள்
அணைக்கப்படாதிருக்கிறது.

அதிகாலை வீதி
மிக மென்மையாகப் புலர்கிறது.
அளவோடு வாகனங்கள்
போகின்றன. வருகின்றன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக
பலதின் குரல்கள்.

பஸ் தரிப்பிடத்தில்
பிச்சைக்காரியும் நானும் காத்திருக்கின்றோம்.
ஏதோவொன்றிற்காக.

இப்போது...
இன்னும் சிலரும்.

அவளின் தட்டின் ஓசைகளுக்கிடையே
அதோ!
எனது...இல்லை.
எங்களில் சிலரின் தூரத்திற்கான
வண்டி இரைகிறது.

அவள்
தரிப்பிடத்தில் காத்திருக்கிறாள்.
இன்னும்.................
....................................
....................................
பயணிகள் வரும் வரை.

உன் காதல்


ஒரு இலையுதிர்கால மரத்தின்
முதல் துளிர்ப்பைப் போன்றது

என்மீதான உன் காதல்.

இனி மல்லாரத் தேவையில்லை

பல நிமிட
அவஸ்தைகளுக்குப் பின்

ஒரு சில நிமிடங்கள்
ஆசுவாசமாக
சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன்.

இனி மல்லாரத் தேவையில்லை.
நீ மறுபுறம்
சுருண்டு கொண்டிருக்கிறாய்.

நம் காதல்


சூடாக
ஒரு குவளைத் தேனீர்
குடித்து ஓய்ந்து
நாம் எழுந்து கொண்டதுடன்

ஆறிப்போனது நம் காதலும்.

அர்த்தங்களுக்காக.


இன்னும்
பல நூறு வரிகளை
மேலெழுப்பி வாசிக்கிறேன்.

என்னை எதிர்கொள்ளவரும்
பலகோடி கேள்விகளின்
அர்த்தங்களுக்காக.

திங்கள், 10 நவம்பர், 2008

எல்லோர் கைகளிலும்


எங்கள் தலைவிதியை
எழுதவல்ல பேனா

எங்களைத் தவிர
மற்றைய எல்லோர்
கைகளிலும் உண்டு.

ஏன்...
அதில் ஒன்று
எழுதத்தெரிந்திடாதவர்
கைகளிலும் கூட.

சகோதரத்துவம்


சகோதரர்களாய்
வாழப்போவதாய் தான்
ஆங்கில சாம்ராஜ்ஜியத்திடம்
அன்று சொன்னோம்.

பின்
பங்காளிகளாகிச் சண்டையிட்டுக்
கடைசியில்
பயங்கரவாதிகளுடன் சேர்க்கப்பட்டோம்.

உரிமைகளை தாரைவார்த்து விட்டு
பின்
உருப்படாமல் போனோம்.

நீலவர்ணத்தின் கீழ்
இன்பத்திற்கு எல்லையில்லை என்றார்கள்.
தமிழர் எல்லை வரை
துயரம் தான் நீண்டது.

பின்னர்
பச்சைநிறம் வந்ததும்
வாழ்வு பசுமையாகும் என்றார்கள்.
நம்ப நட
நம்பி நடவாதே என்பார்கள்.

ஜனவரி முதல் தேதி
நாட்டின்
சகோதரர்கள் தினமாம்.
ஜனவரி முதலில்
மட்டும் தானா?

எந்தச் சகோதரர்கள்
ஆளுக்கொரு தாய்மொழியைப்
பேசுகிறார்கள்? ம்...?

என் ஊரில் 07.07.90 இல்...


என் நெஞ்சுக்குழியில்
நெருப்பெரித்த 07.07.90 இல்...
காடையர்களிடம் இருந்து
காப்புத் தேடிய போது

எனக்கு பாதுகாப்புத் தந்த
என்னூரின்
பரட்டையாய் பரந்து கிடந்த
பற்றைக்காடுகள்.

அம்மா மடிக்குப் பிறகு
என்னை
பாதுகாப்பாக அரவணைத்து
உறங்க வைத்த
அந்த சருகுப்படுக்கை.

முள் கிழித்து
முதுகின் இரத்தக் கசிவுகள்.
கைரேகைக்குப் பின் என்னுடலில்
அதிக கோடுகளை
அப்போது தான் பார்த்தேன்.

அன்று
என்னவரின் பிணம் எரித்த
தீயின் மீதமும்
காடையரின் செருப்புகளின்
கால் மிதித்த மீதமும்

அந்தக் கொடுமைக்கு
சுவடுகளாய் கிடந்தன.

அப்பனைச் சுட்டதற்காகவும்
அம்மாவை அடித்ததற்காகவும்
அண்ணனைப பிடித்ததற்காகவும்
அக்காவையும் சட்டையையும் கிழித்ததற்காகவும்

ஆத்திரப்பட்டு...
அன்று ஆயுதம் தூக்கிப்போய்விட்ட
என் வயதுக்காரர்கள் தான்
எத்தனை பேர்.

அப்போதெல்லாம்
கோழைகளாய்த் தான்
நானும் சிலரும் இருந்துவிட்டோம்.

அவர்களின்
அத்தனை முகங்களும்
நெஞ்சின் பதிவாயும்
கல்லறையின் ஆழத்திலும்.

உண்மையில் நேற்றையதை எண்ணி
என்னூரில்
அம்மாவைப் போலவே
இன்னும் நிறையப்பேர் அழுகிறார்கள்.

காந்தி







அரசியல்வாதிகளே...
ஆடை(யை) கொடுங்கள்
அரை நிர்வாணமாய்
காந்தி

மறுபடியும் மலியும் மரணம்.


இப்போதெல்லாம்
என் முற்றத்து நிலா காணாமல் போய்
பதிலுக்காய்
ஓரிரு நிமிட மத்தாப்பு.

மரணங்களுக்காய்
அழுது பயந்து
சிரிப்புகள் எல்லாமாய் செலவழிந்துபோய்

இனிபோதும்.

போர் வேட்டுமழை
பொது உடைமையழிப்பு
பஸ் இறக்கம்
பாஸ் நடைமுறைகள் வேண்டாம்.
என்றிருந்தபோது

ஆள் பிடித்தல்.
ஆங்காங்கே இனமறியாத
அவசரக் கொலைகள்.

வீதியெங்கும்
மின் கம்பங்களுக்கு அதிகமாய்
ஆயுத மரங்கள்.
இதற்குள்

பொதுக்கட்டமைப்பு முன்மொழிவு
அதற்காயும்
கண்டன ஆர்ப்பாட்டம்.
ஹர்த்தால் கருத்தரிப்பு.

கண்துடைப்பு எதிர்ப்பறிக்கை.
கூடவே
கண்காணிப்புக் குழுவிடமும்
மனுநாடகம்.

கூட்டு அமைப்பு கூடு கலைவு.
கடைசியில் நமக்கு
கட்டமைப்பும் கைநழுவும் நிலை.

மேடைவரை சமாதானம்.
மேசைவரை இணக்கம்.
மிஞ்சியதெல்லாம்
அம்மணமாய் நின்றது போலொரு
அவமானம்.

என்ன கண்டோம்?

மூளைசாலிகள்.
ஊடகத்தில் முதுகெலும்புள்ள தமிழன்.
முக்கியஸ்தர் என
முழுவரையும் தினமும் தின்றோம்.

மனம் வெறுத்தோம்.
மறுபடியும் மானம் காக்க
ஒரு யுத்த(மே)மா வேண்டும்?

சிங்களச் சிநேகிதி

அதைச்
சோதனைச்சாவடி என்றுதான்
எல்லோரும் சொன்னார்கள்.

கூட்டத்தில் உள்ளவர்களுடன் சேர்த்து
நானும்
வரிசையில் அடுக்கப்படுகிறேன்.

அங்கே
நீர்க்காக்கைக்குள் தலைநீட்டிய
சில்லுப்புறா ஒன்று
எங்களை நோக்கி நகர

துருதுருப்பான விழிகள்.
துண்டாடும் பார்வை.
விரலிடுக்கில் அவள்
வில் பூட்டியிருந்தாள்.

கலியுகத்துக் கண்ணகியோ
கேட்கத் தோன்றும்.
உருவத்தில்
அவளும் பெண்தான்.
உள்ளுக்குள் அவளும் மனுசி தானா?

எனக்குள்ளே ஏராளம் கேள்விகள்.
மெல்ல மெல்ல வரிசை ஊர்கிறது.
இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக அவளை நோக்கி
நெருங்குகிறேன்.

அவள் கண்ணில் தெறித்த
அத்தனை கிரணமும்
என் மீதே குவிகிறது.

ஒவ்வொரு தீண்டலிலும்
என் உயிர்க்குலை நடுங்குகிறது.
பர்சைத் தடவுகிறேன்.
ஏதோ பாசை தேடுகிறேன்.

அதிசயம்.

என் முகம் பார்த்துச்
சிரிக்கின்றாள்.

ஆ... அவள் தான்.

அன்று உடலையும்
உள்ளத்தையும்
காக்கிச் சீருடையில் மூடியிருந்தவள்.

என் சிங்களத்தோழி.

தமிழர் யாருமே...


இப்போதும்
மரநிழலில் இருந்தபடியே
என் ஆச்சி
சருகு பொறுக்கிச் சேர்ப்பாள்.

கேட்டால்
பயிர் வளர உரம் இடுவாளாம்.
சிரிப்புவரும்.

அவள் வாழ்வது
அகதி முகாம் என்பது
எப்போதும்
அவளுக்கு நினைவில் வராது.

கைக்குத்து அரிசியோ?
கடைந்த குப்பைக்கீரைக்கறி இல்லையோ?
வீட்டு முற்றத்தில் காற்று வீசல்லையோ?
ஆச்சி அறியாமல் கேட்பாள்.

அவள் கண்ணுக்கு வெளிப்படாது.
வண்டு அரித்த ஊறல் அரிசிதான்
வயிற்றை நிரப்புதென்று.

நீட்டிக் களையாற
வேம்பு மரநிழலும்
பனை ஓலைப் பாயும் தான்
அவளுக்கு இப்பவும் வேணும்.

அவளுக்கு உரிமை இருந்தது.
தாய் நிலத்தில்
ஆசுவாசமாய் வாழ.

எங்கள் நிலை
இன்று அப்படி இல்லை என்றால்...
வருத்தப்படுவாள்.

அவளோ...
தமிழர்கள் எவருமோ...

அகதிகள் இல்லை.
என்றே
அவள் எப்போதும் நினைக்கிறாள்.

நாம் சுமக்கும் ஆயுதம்


கண்ணில் பட்டுத் தெறிக்கும்
அத்தனை கிரணங்களும்
அது ஆகத்தான் தெரிகிறது.

இன்று கைகளும் தோளும் கூட
விரும்பியும் விரும்பாமலும்
அதைத்தான் சுமந்திருக்கின்றன.

ஏன் ஊரில்
இப்போது எல்லோருமே
அதைத்தான் கைகளில்
தினமும் சுமந்து திரிகின்றனர்.

என் தந்தையும் தாயும்,
அவர் முந்திய முழுவரும்
வந்து பிறந்து குலாவி
மண், கரி தின்று

நடைகற்று எழுந்து
சீர்ப்படி நெல் விதைத்து
புழுதிமணம் மாறாத
புதுநெல்லுச் சோறுண்டு

புகழாய் மகிழ்வாய்
வாழ்ந்த மண்
இந்த மண்.

அந்த மண்ணிலேயே
நல்வாழ்விற்காக
எத்தனை நாள் ஏங்குவோம்?

அதுவும் இளைஞர்கள்
எதற்காக ஏங்கவேண்டும்?

அதனால் தான்
அதை சுமப்பதற்காக
உறுதியெடுத்தோம்.

இப்போது
எங்கள் ஊரின்
எல்லோர் கைகளும் தோள்களும்
மண்வெட்டி என்(ற)று
அதைத்தான் சுமக்கின்றன.

புரியாமல் சில.


இதுமட்டும்
இன்னும் எனக்கு புரியாமல்.

குண்டுகளை ஏற்கவும்
குருதியில் நனையவும்
நாங்கள் மட்டும் தான்
இம் மண்ணில் சபிக்கப்பட்டோமா?

எங்கள் நடைபாதைகள் முட்களாகவும்.
சறுக்கி விழுவது குருதிச் சேறாகவும்.
இருக்கைகள்
மண்டையோடுகளாகவும் தான்
இருக்கவேண்டுமா?

எங்கள் சூரிய விடியல்கள்
இன்றும்
காப்பரண்கள் முன் தான்
விடியவேண்டுமா?

இந்த தேசத்திற்கு நாங்களும்
இந்த தேசம் எங்களுக்கும்
எப்போதுமே எதிரானதா?

ஆயுதங்களை ஏந்தவும்
ஆட்சியாளர்களுடன் பேசவும்
எங்களுக்கு ஆசையா?

எங்களுக்கு மரணங்களை மட்டுமே
பிடிக்கும் என்று
உங்களிடம் சொல்லியவர்கள் யார்?

தமிழர் என்று சொல்வதால்

எந்தவொரு தடை முகாமிலும்
எங்களுக்கு
மதிப்புக் கிடைக்காதா?

நாங்கள் காண ஏங்கும் தேசம்
எப்போதுமே மலராதா?

இது மட்டும் புரியாமல்.

இன்னொருத்தி




நிஜங்கள் எல்லாம் போலியானதால்
எனக்குள் இருக்கும்
நிஜமான நினைவுகள் மட்டும்
போதும்.

வண்ண நிறங்களில் வாழ்த்துதலும்.
வரிவரியாகக் கவிதைகளும்.
வெறும் வண்ணமும்
வல்லின இடையின மெல்லினமுமா?

நெருக்கமான வியர்வை வாடை.
விரல் பிடித்த நகக்கீறல்.
உன்விரசத்திற்கு மட்டுமா?
இன்று பார்த்தால் சிரிக்கும்
நினைவுகள் கூட
உனக்குள் அற்றவனா நீ.

உன் பக்கத்தில் பாவம்
யார் இன்னொருத்தி.

அவளும்...

வியர்வை


மார்கழியில் வியர்த்தது
மேகத்திற்கு.

இரவு


எல்லா நிறங்களும்
கறுத்தன
இரவில்.

படகுப் பயணம்.


முகம் மூடு்ம் உப்புக்காற்றின்
முந்தானை கிழித்து
கடல் நீரின் அலைக்கூந்தலுக்கு
அழகாய் உச்சி பிரிக்கும்
படகில்

சீற் இல்லாத போதும்
பயணச்சீட்டு கொடுக்கும்
நடத்துனருக்கும்
சிலவேளைகளில் சில்லறை மீதிகளை
ரிப்ஸ் ஆக விட்டு

படகுப் பயணம் போவோம்
திருமலை - மூதூர் படகுச்சேவையில்.

ஓடி ஓடி வந்தும்
வரிசையில் ஒழுங்குடன் இடம்பிடித்தும்
இருக்கை இல்லாமல்
இடித்துக்கொண்டும் தொங்கிக்கொண்டும்

வாந்திக்கு மத்தியில்
வயிற்றுக் குமட்டலுடன் வந்துபோனாலும்

பால் சுரக்காத தாய்மடியில்
பால் உறிஞ்சும் குழந்தை போல
சில நாட்கள் படகில்லாமல் பதறுவதுண்டு.

அரச சேவை என்பதாலோ என்னவோ
அதுவும் தராளமாய்
விடுமுறை எடுப்பதுண்டு.
அந்த நாட்களில் தனியார் விசைப்படகில்
வீடு நோக்குவோம்.

புட்டிப்பாலை நேசிக்கும்
நெல்லிவிருட்சக் குழந்தைபோல.

அப்போதும்
ஊர் சேரும் வரையில்
படகினுள்ளே
உப்புச்சத்தியாக்கிரகம் இருப்போம்.
கோரிக்கைகள் ஏதும் இல்லாமல்

அரசசேவகன் மீண்டும்
ஆயத்தமாகும் நாள்வரையில்.

குமிழ் உடைந்த பேனா


முழுச்சூரியனை
விழுங்கிச் செரித்த இறுமாப்பு.
அழகாய் நிலவைப்
பெற்றெடுத்த பூரிப்பு.
கோடி நட்சத்திரங்கள்
துணைக்கு வந்த தெம்பு.

இப்படியே கட்டி இருளைக்
கக்கிக்கொண்டே
ஒரு இரவின் உறக்கம்.

சட்டென எஜமான் போட்ட
மொத்த உப்பின் உரப்பையும் திரட்டி
விசுவாசத்தின் வெளிப்பாட்டுடன்
ஊர் நாய்களின் மிரட்டும் அதட்டல்.

எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு.
மனித நடமாட்டங்கள் இன்றி
இப்படி உணர்வு
ஊர் நாய்களுக்கு வராது.

காதுகள் விரிந்து கிடந்தன.
இன்னும் சில நிமிடங்களில்...

ஏதோ ஒரு திசையில்
வேட்டு ஒலி கேட்கலாம்.
எங்கோ ஒரு வீட்டில் அழுகுரல் முனகலாம்.

குப்பி விளக்கொன்று
வீட்டுப் படலை நோக்கி கண்சிமிட்ட
சில முண்டங்கள்
சிணுங்கலுடன் நகர்ந்தன.

தழுதழுத்த குரலில்
அடுத்த வீட்டு அம்மா.
என்னுடைய மகனை
எவரோ வந்து கூட்டிப்போராங்கள்.

கதவோரம் நசுங்கிய விரலாய்
பதற்றத்துடன் அழுதாள்.

எங்கோ ஒரு திசையில்
சில வேட்டொலிகள்.
எல்லோருக்கும் நெஞ்சுக்குள் கனத்தது.

ஞாபகத்திற்கு வந்தது.

எப்போதும் அவர் கையில்
பேனா இருக்கும்.

நடைமுறை

ஊருக்குப்
போய்வந்தேன்.

மரங்கள் இன்னும்
பச்சையாகவே.

சிலுவையில் ஏற்றிய சமூகம்




பேசாமல் போ.
இது வல்லூறுகள் வட்டமிடும்
வடக்கு... கிழக்கு... தேசம்.

வாய் திறந்தால்...
உன் தலையும் துண்டிக்கப்பட்டு
தசைகள் கிழிபட்டு
இரை தூவப்படலாம்.
பேசாமல் போ.

உனக்கு வாக்களிக்கும்
உரிமை மட்டுமே.
நாட்டில் வாழும் அருகதையோ
வாய் பேசும் சுதந்திரமோ இல்லை.

பேசாமல் போ.
மீண்டும் மீண்டும்
கல்லறைகளையே எண்ணிக்கொண்டிரு.

கவனமாய் இரு.
இன்றிரவே உன் கதவும்
தட்டப்படலாம்.

தட்ட திறபடவும்
கேட்க கொடுபடவும்
தேடியது கிடைக்கவும்
இது கிறிஸ்து வாழும் பூமியல்ல.

என்றாலும்
அவரை சிலுவையில் ஏற்றிய
சமூகத்துடன்
நீ உறவு கொண்டிருக்கின்றாய்
ஞாபகத்தில் வைத்திரு.

அதனால் பேசாமல் போ.

உன் முன்னோர்கள்
சொல்லியிருக்கக்கூடும்.
அன்று நடுநிசியிலும்
பயமின்றி தனியே
வீதியில் இறங்கினோம் என்று.

சுதேசிகளாய்
தாய் நிலத்தில்
அவர்களின் ஜீவிதம் தாய்மடி சுகம்.

இப்போது அப்படி
தெருநாய்களால் கூட
நடமாட முடியாது என்று
அவர்களிடம் கூறு.

விளக்கம் எதுவும் சொல்லாதே.
நம்மைப் போலவே
அவர்களுக்கும் விளங்காது.

பேசாமல் போ.
 

விழியோடல்கள்