திங்கள், 27 செப்டம்பர், 2010

புத்தனின் பெயரால் கொல்லப்பட்ட மரங்கள்


ஏழு வருடங்களாய் அந்த பெரிய மரத்தை எனக்குத் தெரியும்.

பள்ளிக்கூட மூலை வளவில்
பருத்த கிளைகளை வீசியெறிந்து
காகமும் கொக்கும் கூடு கட்டிக் கூச்சலிட
கறுப்பு நிழல் பரப்பி வெள்ளை எச்சங்கள் பூசி
ஆண்டுகள் தோறும் ஆயிரங்களாய் காய்த்துக் கொட்டி
அதற்கான உரிமையோடு பல்லாண்டுகளாயது
தன் பாட்டில் வாழ்ந்த மரம்.

ஓர்நாள் அதை
அவசரமாகக் கொன்றார்கள்.
ஓரிலையும் ஓர் துண்டுமில்லாமல் வெட்டியெறிந்து
அடையாளம் தெரியாதிருக்க
தொலைதூரம் கொண்டு வீசிவிட்டு வந்தார்கள்.

விளக்கம் கேட்டவர்களுக்கெல்லாம்
'அதில முனி இருக்கு.. சாமத்தில விளக்கெரிக்குது..
புள்ளயள் கேட்குது.. குமருகள ஆட்டுது..” என்றெல்லாம்
குற்றஞ்சொல்லிப் போனார்கள்.
முனியைக் கொல்ல முடியாமல் மரத்தை மட்டும் கொன்றார்கள்.

நானும் கூடக் கேட்டிருந்தேன்.

ஊரவர்கள் சொன்னார்கள்
அந்த மரக்காட்டுப் பக்கம் ஆறு மணிக்கு மேலாக
துர்நாற்றம் காற்றில் வீசும்.
கருப்பு நிறத்தினிலும் விரித்த முடியோடும்
அம்மணமாய்ப் பெண்கள் அங்குமிங்கும் திரிவார்கள்.
ஆணும் பெண்ணும் கலந்தாற் போல் முனகல் சத்தம் கேட்கும்.
குப்பி விளக்கு நகரும்... சில நேரம் பெரிதாக அடுப்பெரியும்.
அந்தப் பக்கம் போவோரை கூச்சலிட்டு விரட்டிவரும்.
வெள்ளி செவ்வாய் நாள் வந்தால்
முனியின் வெறியாட்டம் கூடிவிடுமென்றும்.

உண்மையொன்று அதுபற்றி ஊகமாக மட்டுமுண்டு.

காட்டுப்புற மறைவுகளில் கள்ளக் கலவி முனகல்களும்
நிர்வாணம் மூடாமல் புணர்தலையும் பெண்களும்
முனிகளாகத் திரிகிறார்கள்.
கசிப்பு வடிக்கும் அடுப்பும்
அதன் கழிவுகளின் அழுகல் நாற்றமும்
அவர்கள் காவும் குப்பி விளக்கும்
முனியின் வேலையென்று நம்பி..
முடிவில் அரசமரத்தை பலிகொடுத்தார்கள்.

அடிவயிற்றைப் பிடித்தது போல்
ஆச்சியொருத்தி இப்படியும் சொன்னாள்.

"முன்னயும் இப்பிடி மரம் முச்சந்தியில நிண்டது..
பிக்கு வாறான்.. பாத்துப் போறான் எண்டு
பின்ன.. ராவுராவா ஆத்தில வெட்டியெறிஞ்சிற்றம்..
நேத்தும்
இந்த மரப்பக்கம் நாலு மொட்டையனுகள் சுத்திப் பாத்தத
ஆரோ கண்டு...
பொறவு
புத்தரக் கொண்டு வச்சாலுமெண்டு
ஒடனே வெட்டிப் போயிட்டானுவள்..”

இது என்ன புதுக்கதை.

பெருத்த நிழல் தருகின்றதென்று புத்தர் கீழே குந்தினாரோ..
வேறு மரம் கிடைக்காமல் அரசின் கீழே அமர்ந்தாரோ..
 புத்தரிருக்க புண்ணியம் செய்த மரம்
பாவம்..
தமிழன் பூமியில் அச்சுறுத்தலுக்கானது.

இந்த மரம் வாழ்வதற்கு எந்த சுதந்திரமும் இல்லைதானா?

பிள்ளையார் வைத்தார்கள் என்று
இனி எவரும்
வேம்புகளையும் வெட்டி எறிவார்கள்
.

வென்றவர்களும் இன்னும் வெல்லாதவர்களும்

கூடிக்கலைவதும்
கும்பலாய் கூச்சலிடுவதுமாகவேயிருக்கும்
எங்கள் கூட்டங்கள்.

இருப்பற்றவர்களும்
உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களும்
அரசியல் அநாதைகள் என்றவர்களும்..
இருப்பைப் பற்றிப் பேசி விவாதிக்கவும்
எங்களுக்கு
நாங்களே ஆதரவளிக்கவும் கூடினோம்.

ஊரை வாங்கவேண்டும் என்றும்
ஊரில்லாத போதும்..
ஊரிலில்லாத
ஊமைகளாயிருக்கும் சாமிகளுக்கும்
உடுக்கையடிக்க வேண்டும்
என்றும்.............
….......................... முடிவெடுத்தோம்.

தத்தம் வேண்டுதலுக்காக
அரசியல் பேய்களுக்கு
ஊம்பித் திரிந்தவரை உதறிப்போட்டோம்.

மக்களோடு வாழ்வோர்க்கும்
சொந்த மண்ணை நேசிப்பவர்களுக்கும்
தலை கொடுப்பதாக முடிவானது.

எங்கள் குழுவின் போசகர்
இறுதியாக
எழும்பிச் சொன்னார்..
“ போராடுவோம்!  போராடித் தோற்போம்”

உரத்துச் சொல்வதற்கு
மனதுக்குள் நாக்கு சுழன்று வந்தது

'தோற்றவர்களில்லை
நாங்கள்
வென்றவர்கள் மத்தியில் இருக்கும்
இன்னும் வெல்லாதவர்கள்.'

நெடுநாள் பழகிய நண்பனைப் போல மரணம் அழைத்துச் செல்லும்

நீங்கள் எதிர்பாத்திராத தருணத்தில்
நான் விரும்பும் அதுவர
எனக்காகவும் காத்திருக்கிறது.

உறவினரைப்போல விலகியிராமலும்
மனைவியை விடவும் மிக நெருக்கமாகவும்
தொலைவிலிருந்து அறிவிக்காது வரும்
நெடுநாள் பழகிய நண்பனைப் போல
அது என்னை அழைத்துச் செல்லும்.

அப்போது
யாரும் என்னை பின்தொடர வேண்டாம்.
என்னை ஒத்திருக்கும் உங்களை
நான் நிராகரிக்கலாம்.

நிழலைப் பிரதி செய்து
காகிதங்களைப் பறக்கவிடும் செயலையும்
செய்யாதிருங்கள்.

முடியுமானால்
அடையாளங்களை தொலைத்துவிடுங்கள்
தசைகளைக் கொண்டு
நாய்களையேனும் கொஞ்சம் பசியாற்றுங்கள்.

மரணத்தின் பின்னான வாழ்வில்
நம்புதலைக் கொண்டில்லை
இதைப்போலவே அதுவும்
சலிப்பானது விருப்பற்றது

என்னால் நேசிக்கப்படும் மரணம்
நியாயமானதும் கூட.

எப்போதும் உதவும்
எனது நண்பர்களைப் போல
அது அரவணைத்துக் கூட்டிச் செல்லும்

மிக அமைதியாக ஓர் நாள்.
 

விழியோடல்கள்