திங்கள், 24 நவம்பர், 2008

தொலை வெளியிலிருந்து


மண்ணுக்கும் சமாந்தரமாக
முள்ளந்தண்டைக் கிடத்தி
நிலவொளி வெளியின் மண்சூட்டில்
அயர்ந்துறங்கி
காமங்கிளைத்து மென்மை தழுவ
சாவகாசமாகப் புணர்ந்து கிடக்கயில்

மேலான விடுதலையை பெற்றுவிட்டதாக
வெறுப்படைந்து காறித்துப்பி
தொலைவெளியில் யாரோ
பரிகசித்து கூச்சலிட்டு
உறுக்குவதாகத் தோன்றும்.

இடை(வெளி)விட்டு விலகி
தோலையிழுத்துப் போர்த்த
வேலிகளாகச் சூழும் மேலெழும்
மறுக்கப்படுவதான சுதந்திரமும் கட்டும்.

நடுநடுங்கும் இலையை
அலைவுறச்செய்வதான காற்றை முகர்ந்து
உயிர்த்தலுடன்
ஒவ்வொரு எல்லைவரையுமாக
எறியப்பட்டுத் திரும்பி

இயங்குதலுடனாகவுள்ள
எல்லா நீட்டங்களையும்
ஆமையின் உள்ளிழுப்புகளுடன் அடக்கி
முழுவதையும் ஊதாரித்தனம் செய்து

எதுவுமற்றதான சூனிய இருப்புகளோடேயே
நாளைய வாழ்வும் பிறவும்
எஞ்சிக் கிடக்கின்றன முன்னே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்