செவ்வாய், 4 நவம்பர், 2008

விடிவுக்கான சமூகம்

சரிந்துகிடக்கும்
மலைச்சாரல் அறிவிக்கும்.
சரிந்துபோன ஆயிரம் சாவுகளையும்
அதன் சரித்திரங்களையும்.

துன்பத்திலும் துணிந்து போராடவே
தூரத்தில் குரலெழுப்பும்
பிஞ்சு முகங்களை
தன் முதுகுக்கூடையால் முடக்கி
மடுவத்தில் விட்டுச்செல்லுமொரு
தாய்.

இருந்தும்
துன்பத்தின் விளிம்பில்
சென்று திரும்பும்
பனிச்செடிகளைத் துளாவும்
அவளின் கண்ணீர் பனித்த விழிகள்.

ரொட்டிகளாய் ஒட்டி
வெயிலில் கருகிய உடலைக் கசக்கி
உழைப்பை வியர்வையாக்கும்
மலைகளை நம்பி
மண்டியிடும் மரத்த கைகள்.

பனிமலைக் குளிரையும்
பசித்த வயிற்றுச் சூட்டில் தணித்து
சிறு இலயத்திலும் இலயித்துவாழும்
வேட்டைவாளிகளின் வாழ்வு
மேலோங்கி விடிவது எப்போது?

கொழுந்து கிள்ளும்
குழந்தைகளின் கல்வி
தழைப்பது எப்போது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்