நான் ஒரு
சிறகுகள் நறுக்கப்பட்ட
வௌ்ளைப்புறா.
வாளேந்திய மிருகத்தால்
என்றோ
என் சிறகுகள் நறுக்கப்பட்டன.
பின்பு
முளைக்கத் துடித்த
ஒவ்வொரு முறையும்
முளையில் முனைகள்
முளைக்க முன்னமே
சிலரால் முறிக்கப்பட்டன.
அன்று
யாரோ சிலர் எனக்காக
கூண்டு மட்டும்
கொடுக்க முன்வந்தார்கள்.
தேசிய தினங்களில் மட்டும்
திறந்து விடப்பட்டேன்.
பவனிகளில் மட்டுமே
பறப்பதற்கும் அனுமதிக்கப்பட்டேன்.
கூட்டங்களிலும்
கொள்(ளை)கை பரப்பும்
மேடைகளிலும்
எனக்கு
சுதந்திரம் வழங்கப்போவதாக
வாக்களித்தார்கள்.
என்னைக் காட்சிக்கு வைத்தே
எல்லாக் கட்சிகளும் வளர்ந்தன.
ஆட்சிக்கு வந்தவர்
அனைவரிடமும்
என் கூண்டுகளை விலக்கச் சொல்லி
கூக்குரலிட்டேன்.
கடைசியில்
கதிரை மோகத்தினால்
எல்லோராலுமே கைவிடப்பட்டேன்.
இன்று...
திடீரென என் சிறகுகளை
உடைக்கத் தடை போடப்பட்டிருக்கிறது.
எவரோ
என் சிறகுகளை
இதமாகத் தடவுவதாகவும்
முதுகை சுகமாக நீவுவதாகவும் உணர்கிறேன்.
நம்புகிறேன்.
விரைவில் என் கூண்டுகள்
விலக்கப்படலாம் என்று.
இல்லை...
மீண்டும் என் குஞ்சுகளுக்கு
விலை கூட்டப்பட்டு
விற்கப்படலாம்.
அடுத்து ஆளவரும்
ஏதாவது ஒரு நிறத்திலான கட்சிக்கு.
வியாழன், 6 நவம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக