செவ்வாய், 21 டிசம்பர், 2010

கலைக்கப்பட்ட பட்டு வேட்டிக் கனவுகளும் களவாடப்படும் கோவணங்களும்.

நீ..முதுகை அலங்கரிக்கும்
பட்டுப் போர்வைகளுக்காக அலைந்து திரிகிறாய்.
நானிங்கு..
பருத்திக் கோவணத்தை
காப்பற்றிக்கொள்ள கஷ்டப்படுகிறேன்.
உனது கவனம்
ஆரோக்கியமான பட்டுப் பூச்சிகளின் மீதே கவிந்துள்ளது.
எமது சிரத்தை எல்லாம்
அரைநாண் அறுந்துவிடாதபடி பிடித்திருப்பதிலும்
அதையின்னும் பலப்படுத்துவதிலும் தேங்கிக் கிடக்கிறது.
நீ.. உனக்குத் தேவையான பட்டுப் பூச்சிகளை
எமது முற்றத்தின் பருத்திகளை தின்று வளரப் பணிக்கிறாய்.
நானின்னும்
அதன் வேர்களுக்கு நீர் ஊற்றி துளிர் வளர்க்கிறேன்.

நீ.. நிலவின் வட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருக்க
நானதன் குழிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இருளைக் கழுவும் நிலவொளியின்
கரையற்ற பிரகாசத்தில் நனைந்திருக்கும்
எமது முற்றத்தின் மணல்வெளியில்
இன்னும் விரிக்கப்படாதிருக்கும்
தொட்டாச்சுருங்கியின் இலைகளைப் போல
துயின்றிருக்கும்
எமது குமருகளைப் புணரவும்
குடிசைகளைப் பொசுக்கவும் என..
சாணக்கும்பிகளைப் போல இருண்ட திட்டுக்களுடன்
நீ குறிகள் விறைக்கக் குந்தியிருக்கிறாய்.
முன்பையதைப் போலொரு மலர்ச்சிக்கான
எதிர்பார்ப்புடன்
அமைதியான நிமிடமொன்றுக்கான தவிப்புடன்
இன்னும் காத்துக்கிடக்கிறேன்.
உனது பட்டுப் பூச்சிகளில் உருவி எடுக்கப்படும்
பளபளப்பான நார்களால்
எமது கோவணத்தையும் அலங்கரிப்பதற்காக.               

சனி, 27 நவம்பர், 2010

இப்படிக்கு, தாய் நிலமின்றிய அண்ணன்.

வீரம் பீறி வெந்தணல் களமாடி
வென்று
வேட்டொன்று மார்பில் தெறிக்க
வீர விதையாகியயென் தம்பி..

தாயகக் கனவுகளோடு சந்தனப்பேழையினனாக
தமிழினமின்று உரிமை வென்றிருக்குமென்று
அங்கொரு தூபியின் அடியில்
தோழரும் நீயுமாய் துயில் கொள்கிறாயா...?

இங்கு
நீறுபூக்க நீயன்று கண்ட வென்ற களங்கள்
நிலை குலைந்து கரி மேடுகளாயிற்று...
தோழரும் நீயுமாய் இளநீர் உண்டு
உடல் உறங்கிப்போன சோலை மரங்கள்
மீண்டும் முன்னரங்கக் காப்பரணில்.

அச்சம் குறையவில்லை..
இனஅடக்குமுறையும் தீரவில்லை.
ஆண்டாண்டாய் போர் செய்தோம்.
அழித்தோம். அழிந்தோம்.
விடுதலை என்பதற்கு
விளக்கம் மட்டும் கிடைக்கவில்லை.

சந்தனப்பேழையுள் நீ
விதைக்கப்பட்டதற்காய்
கல்லறை மேடுகள் தான் மீதமாகும் சான்றுகளா?

தாய் நிலம் மீது நீ 
வீரங்கொண்டெழுந்தோடி
பாதச்சுவடுகள் பதித்ததன் புண்ணியம்
களப்புதர்களுக்கு மட்டுமே கிடைத்ததா சொல்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

கண்ணனற்றுத் திரிதல்


கோபியர்களிடம் திருடிய சேலைகளைச் சேர்த்துவைத்து
கண்ணர்கள்
திரெளபதைகளைக் காத்தனர்

புதியதொரு குருசேத்திரத்தில்
பீஷ்மர்களும் துரோணர்களும் விதுரர்களுமென
சகுனிகளின் தேர்களை ஓட்டிப் போகின்றனர்.

பாரதர்கள் பகடைகளை எறிந்து
பண்டை நிலங்களை
சகுனிகளிடம் விட்டுப் போயினர்.

துச்சாதனர்கள் பார்த்திருக்க
சகுனிகளிடம் துகில்களைக் களைந்தெறிந்து
கண்ணனற்றுத் திரிகின்றனர்

திரெளபதைகள்.

ஆளற்றுத் தனித்த வெளிகள்

விரும்புகின்றவைகளை கொடுப்பதும்
தருவதையெல்லாம் ஏற்பதும்
மிக கடினமாயுளது எப்போதும்.

ஆயுள் வரை
தாய்நிலத்தில் தாய்மடியில் உறங்குதலின் வரம்
எப்போதும் எல்லோர்க்கும் சித்திப்பதில்லை தான்.

நம்பிக்கைகள் தூர்ந்த புள்ளியில்
வெளிக்கிறது எனது நிலம்.
மலட்டு முலைகளை இழுத்து உறிஞ்சி
சாகின்றனர் சிசுக்கள்.

கொலைக்கள பூமியின்
ஆளற்றுத் தனித்த வெளிகளில்
அலைந்து
மொட்டைச் சுவர்களை  முட்டித் திரும்புகிறது
 எனது காற்று.

யுத்தத்தை வென்றவர்கள்
இப்போது இடுகாடுகளைக் காக்கின்றனர்.
மரணத்தை வென்று
மண்ணைக் களவு கொடுத்தவர்கள்
கண்ணீரில் உயிர்க்கின்றனர்
வெளிகள் முழுவதும்.. 

நேற்றும் கூட பெருமழை பெய்தது..
இன்னும் முளைக்கவில்லை
மண்ணுக்காக  விதைக்கப்பட்ட மனிதர்கள்.

புதன், 17 நவம்பர், 2010

போராளிகளான அப்பாவிகளையும் அடிமைகளான பயங்கரவாதிகளையும் பற்றி பேசுதல்

தேசங்கள் பலதும் தேசங்களாயிராத பொழுதுகளில்..

தேசமாக்குவதற்கும் முடியாத போது
உருவாக்குவதற்குமென
அடிமைகள் எழுவர்.
அடிமைகள் என்பவர் எப்பொழுதும்
அடிப்படையுரிமைகளுமில்லாத
அப்பாவிகள் என்பதே உண்மை.

ஆட்சியாளர்கள் அடக்குமுறையாளர்களாவதும்
அதிகாரமுள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாவதும்
அப்பாவிகளை அடிமைப்படுத்துவதும்
அடிமைகள் விடுதலை கேட்பதும் நாளடைவில்
அடிமைகள் போராளிகளாவதும்
போராளிகளான அப்பாவிகள்
பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுவதும்
பின்பு
பயங்கரவாதிகள் என்றழைக்கப்பட்ட
அப்பாவி அடிமைகள் அழிக்கப்படுவதுமென..

இதற்கு
நீண்ட வரலாறும் உதாரணங்களுமுண்டு
உலகமெங்கும்.

பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டவர்கள்
அவர்களை ஆக்கியவர்களையும்
அவர்களும் இவர்களுமாக தேடியலைந்து
அவர்களும் இவர்களுமல்லாதவர்களையும்
கொல்வர்.

அப்பாவிகளில் சிலர்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிமைகளாகி
துரோகிகளென்று முச்சந்தியில் முண்டங்களாக கிடப்பதும்
பயங்கரவாதி என்றானவர்களும் என்றாக்கியவர்களும்
செய்யும் செய்யத பயங்கரங்களால்
அப்பாவிகளின் வாழ்வும் பயங்கரமாவதுண்டு.

இடையிடையில்
அப்பவிகளுள்ளிருக்கும் போராளிகள்
தமக்குள் போரிட்டுக் கொள்வர்.
போராளிகள்  பயங்கரவாதிகளாகவும் ஆக்கிரமிப்பளர்களாகவும் எட்டப்பன்களாகவும் ஆகி..பயங்கரவாதம் செய்வர்.

அக்கிரமிப்பாளர்களாக விரும்பும் போராளிகளை அழிப்பதற்காக
போராளிகள் போரிட்டும்
ஆக்கிரமிப்பாளர்கள் போராளிகளெனும்
பயங்கரவாதிகளைக் கொல்லப் போரிட்டும்
அப்பவிகளைக் கொல்வர்.

அப்பாவிகள் போராளிகளை ஆதரிப்பர்.
போராளிகளில் சிலர்
உண்ணக் கொடுத்த தட்டில் கழிந்து வைத்தது போல
காட்டிக்கொடுப்பர்.

அடிமைகளாயிருந்த அப்பாவிகள்
அடிப்படையுரிமைகளுமில்லாமல் அழிவர்.
நிலமிழந்து..வெளிகளில் அலைந்து..நாடு கடப்பர்.
அகதிகளாவர்..அனாதைகளாவர்..அரை முண்டமாவர்..
அடைக்கப்படுவர்.

கடைசியில்
அப்பாவிகளுடனிருந்த போராளிகளான பயங்கரவாதிகளும்
ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைகளாவர்.
அதிகாரமற்ற ஆட்சியாளர்களாவர்.

அப்பாவிகள் மீண்டும் மீண்டும்
அடிமைகளாகவே வாழ்வர்..
குர்தீஷியர்களைப் போலவும் பலஷ்த்தீனர்களைப் போலவும்..
உலகமெங்கும்.

திங்கள், 15 நவம்பர், 2010

முகம் மாறி மாறி வந்த அசூரர்கள்

   01
அப்பாவிகளை வதைக்கும் அசூரர்களை
அவதரித்துக் கொல்லும் கடவுளர்கள் எங்களது.
நூற்றாண்டுகள் முன்பிருந்து
அசூரர்கள் முகம் மாறி மாறி வருவர்.
அம்மனாகியும் முருகனாகியும் சிவனாயும்
திருமாலாய் கணபதியாய் கடவுளர் உருவெறிக் கொல்வர்.

ஆன பின்னும்..

யுகம் யுகமாய் அசூரர்கள் வருவர் அப்பாவிகளை வருத்துவர்.
கடவுளர் அவதரிப்பர் கொல்லுவர்.
மீண்டும் மீண்டும் அசூரர்கள் வருவர்.
கடவுளர் அவதரிக்க..கொல்ல...

 02
புத்தியறிந்த முப்பது வருடங்களில்
ஆண்டுதோறும் அசூரர் பலர் வந்தனர்.
முகம் மாறி மாறி
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும்
கடா முகத்தோடுமென

எதிர்த்துப் போரிட முருகர்கள் வந்தனர்.
அசூரரைக் கொன்றனர்.
முருகர்களை வெல்லமுடியதென அசூரர்கள் பயந்தொதுங்கினர்.
அசூரர்களின் துன்பத்திலிருந்து
நின்மதி வருமென அப்பாவிகள் காத்திருந்தனர்.

மீண்டும் மீண்டும்
அசூரர்கள் போரிட வந்தனர்.
முருகர்கள் உருவேறிப் பாய்ந்து 
விரட்டி விரட்டி கொன்றனர்.
முருகர்கள் நினைத்தனர்
அசூரர்கள் எப்போதும்
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும்
கடா முகத்தோடுமே வருவர் என்று.
  
03
இம்முறை அசூரர்கள்
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும்
கடா முகத்தோடு மட்டுமின்றி...
நரியின் குள்ள முகத்தோடும்
ஒட்டகம்,பசுவின் கருணை முகத்தோடும்
ஓநாயின் விசன முகத்தோடும்
நடு நடுவே
கடவுளர்களின் அகோர முகத்தோடுமென..
ஒரு தொகை முகங்கொண்டிணைந்து
எட்டுத் திக்குகளிலுமிருந்து
நவீன வாகனங்களில் ஜாலம் காட்டி .
பலமாகவலியவர்களாக வரம் பெற்று போரிட வந்தனர்.
கடவுளர்களில் பலரும்
அசூரர் பலம் பெற வரமளித்தபடியுமிருந்தனர்.

மாறாக                                                                 
முருகர்களினது புராதனமான மரபுகளோடிருந்தன.
பரிவாரங்களை நம்பிய முருகர்கள்
மயிலையும் சேவலையும் வேலையும்
கொடியையுமே..இழக்கவேண்டியதாயிற்று.
  
04
இம்முறை
கடவுளர்களை படைத்த எல்லோருமாக
அசூரர்களிடம் முருகர்களை தோற்றோம்.
மாங்காய்களை பறித்துத் தின்றும்
இலைகளை காதில் சூடியும்
திருப்திப்பட்டுக் கொண்டோம்.

இனி..
முருகர்கள் போரிட வராது விடினும்
அப்பாவிகளை வதைக்கவென அசூரர்கள் வருவர்.
ஆண்டுதோறும்
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும் கடா முகத்தோடும்
மாறி மாறி...முகம் மாறி மாறி.

திங்கள், 27 செப்டம்பர், 2010

புத்தனின் பெயரால் கொல்லப்பட்ட மரங்கள்


ஏழு வருடங்களாய் அந்த பெரிய மரத்தை எனக்குத் தெரியும்.

பள்ளிக்கூட மூலை வளவில்
பருத்த கிளைகளை வீசியெறிந்து
காகமும் கொக்கும் கூடு கட்டிக் கூச்சலிட
கறுப்பு நிழல் பரப்பி வெள்ளை எச்சங்கள் பூசி
ஆண்டுகள் தோறும் ஆயிரங்களாய் காய்த்துக் கொட்டி
அதற்கான உரிமையோடு பல்லாண்டுகளாயது
தன் பாட்டில் வாழ்ந்த மரம்.

ஓர்நாள் அதை
அவசரமாகக் கொன்றார்கள்.
ஓரிலையும் ஓர் துண்டுமில்லாமல் வெட்டியெறிந்து
அடையாளம் தெரியாதிருக்க
தொலைதூரம் கொண்டு வீசிவிட்டு வந்தார்கள்.

விளக்கம் கேட்டவர்களுக்கெல்லாம்
'அதில முனி இருக்கு.. சாமத்தில விளக்கெரிக்குது..
புள்ளயள் கேட்குது.. குமருகள ஆட்டுது..” என்றெல்லாம்
குற்றஞ்சொல்லிப் போனார்கள்.
முனியைக் கொல்ல முடியாமல் மரத்தை மட்டும் கொன்றார்கள்.

நானும் கூடக் கேட்டிருந்தேன்.

ஊரவர்கள் சொன்னார்கள்
அந்த மரக்காட்டுப் பக்கம் ஆறு மணிக்கு மேலாக
துர்நாற்றம் காற்றில் வீசும்.
கருப்பு நிறத்தினிலும் விரித்த முடியோடும்
அம்மணமாய்ப் பெண்கள் அங்குமிங்கும் திரிவார்கள்.
ஆணும் பெண்ணும் கலந்தாற் போல் முனகல் சத்தம் கேட்கும்.
குப்பி விளக்கு நகரும்... சில நேரம் பெரிதாக அடுப்பெரியும்.
அந்தப் பக்கம் போவோரை கூச்சலிட்டு விரட்டிவரும்.
வெள்ளி செவ்வாய் நாள் வந்தால்
முனியின் வெறியாட்டம் கூடிவிடுமென்றும்.

உண்மையொன்று அதுபற்றி ஊகமாக மட்டுமுண்டு.

காட்டுப்புற மறைவுகளில் கள்ளக் கலவி முனகல்களும்
நிர்வாணம் மூடாமல் புணர்தலையும் பெண்களும்
முனிகளாகத் திரிகிறார்கள்.
கசிப்பு வடிக்கும் அடுப்பும்
அதன் கழிவுகளின் அழுகல் நாற்றமும்
அவர்கள் காவும் குப்பி விளக்கும்
முனியின் வேலையென்று நம்பி..
முடிவில் அரசமரத்தை பலிகொடுத்தார்கள்.

அடிவயிற்றைப் பிடித்தது போல்
ஆச்சியொருத்தி இப்படியும் சொன்னாள்.

"முன்னயும் இப்பிடி மரம் முச்சந்தியில நிண்டது..
பிக்கு வாறான்.. பாத்துப் போறான் எண்டு
பின்ன.. ராவுராவா ஆத்தில வெட்டியெறிஞ்சிற்றம்..
நேத்தும்
இந்த மரப்பக்கம் நாலு மொட்டையனுகள் சுத்திப் பாத்தத
ஆரோ கண்டு...
பொறவு
புத்தரக் கொண்டு வச்சாலுமெண்டு
ஒடனே வெட்டிப் போயிட்டானுவள்..”

இது என்ன புதுக்கதை.

பெருத்த நிழல் தருகின்றதென்று புத்தர் கீழே குந்தினாரோ..
வேறு மரம் கிடைக்காமல் அரசின் கீழே அமர்ந்தாரோ..
 புத்தரிருக்க புண்ணியம் செய்த மரம்
பாவம்..
தமிழன் பூமியில் அச்சுறுத்தலுக்கானது.

இந்த மரம் வாழ்வதற்கு எந்த சுதந்திரமும் இல்லைதானா?

பிள்ளையார் வைத்தார்கள் என்று
இனி எவரும்
வேம்புகளையும் வெட்டி எறிவார்கள்
.

வென்றவர்களும் இன்னும் வெல்லாதவர்களும்

கூடிக்கலைவதும்
கும்பலாய் கூச்சலிடுவதுமாகவேயிருக்கும்
எங்கள் கூட்டங்கள்.

இருப்பற்றவர்களும்
உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களும்
அரசியல் அநாதைகள் என்றவர்களும்..
இருப்பைப் பற்றிப் பேசி விவாதிக்கவும்
எங்களுக்கு
நாங்களே ஆதரவளிக்கவும் கூடினோம்.

ஊரை வாங்கவேண்டும் என்றும்
ஊரில்லாத போதும்..
ஊரிலில்லாத
ஊமைகளாயிருக்கும் சாமிகளுக்கும்
உடுக்கையடிக்க வேண்டும்
என்றும்.............
….......................... முடிவெடுத்தோம்.

தத்தம் வேண்டுதலுக்காக
அரசியல் பேய்களுக்கு
ஊம்பித் திரிந்தவரை உதறிப்போட்டோம்.

மக்களோடு வாழ்வோர்க்கும்
சொந்த மண்ணை நேசிப்பவர்களுக்கும்
தலை கொடுப்பதாக முடிவானது.

எங்கள் குழுவின் போசகர்
இறுதியாக
எழும்பிச் சொன்னார்..
“ போராடுவோம்!  போராடித் தோற்போம்”

உரத்துச் சொல்வதற்கு
மனதுக்குள் நாக்கு சுழன்று வந்தது

'தோற்றவர்களில்லை
நாங்கள்
வென்றவர்கள் மத்தியில் இருக்கும்
இன்னும் வெல்லாதவர்கள்.'

நெடுநாள் பழகிய நண்பனைப் போல மரணம் அழைத்துச் செல்லும்

நீங்கள் எதிர்பாத்திராத தருணத்தில்
நான் விரும்பும் அதுவர
எனக்காகவும் காத்திருக்கிறது.

உறவினரைப்போல விலகியிராமலும்
மனைவியை விடவும் மிக நெருக்கமாகவும்
தொலைவிலிருந்து அறிவிக்காது வரும்
நெடுநாள் பழகிய நண்பனைப் போல
அது என்னை அழைத்துச் செல்லும்.

அப்போது
யாரும் என்னை பின்தொடர வேண்டாம்.
என்னை ஒத்திருக்கும் உங்களை
நான் நிராகரிக்கலாம்.

நிழலைப் பிரதி செய்து
காகிதங்களைப் பறக்கவிடும் செயலையும்
செய்யாதிருங்கள்.

முடியுமானால்
அடையாளங்களை தொலைத்துவிடுங்கள்
தசைகளைக் கொண்டு
நாய்களையேனும் கொஞ்சம் பசியாற்றுங்கள்.

மரணத்தின் பின்னான வாழ்வில்
நம்புதலைக் கொண்டில்லை
இதைப்போலவே அதுவும்
சலிப்பானது விருப்பற்றது

என்னால் நேசிக்கப்படும் மரணம்
நியாயமானதும் கூட.

எப்போதும் உதவும்
எனது நண்பர்களைப் போல
அது அரவணைத்துக் கூட்டிச் செல்லும்

மிக அமைதியாக ஓர் நாள்.

சனி, 14 ஆகஸ்ட், 2010

நாயாக மட்டுமே இருப்பதன் சாத்தியம்


கதவோரம் தாழ்வாரம் அடுப்படிச் சாம்பல் மேடு.. என
சுருண்டு கிடந்த நாய்கள்
ஒன்றாய்க் கூடி குமைந்து கிடந்தன

ஒன்றைச் சினைப்படுத்த..

தமக்குள் தாமே.. தம்மை முறைத்தும்
தமக்குள்ளே தம்மையே கடித்தும்
ஒன்றை ஒன்று விரட்டியும் முந்தியடித்தும்
முதன்மைப்படவும் முதலில் ஏறவும்

போராடுவது போலவும்
போட்டியிடுவதாகவும்
தமது உரிமையை விடாது தாமே காப்பதாகவும்
அதற்காய்
முழுவதையும் இழந்தாயினும் புணர்வது
எனவும் போல
தம்மையே முறைத்தும் கடித்தும் விரட்டியும்
குறிகள் விறைத்து குமையும்
ஒன்றையே புணர.

சினைக்குள் சாத்தியம்
நிமிர்ந்த வாலுடனோ
சுருளும் விதமாகவோ
குரைக்கக் கூடியதாகவோ
உறுமிக் கடிக்கத் தக்கதாகவோ
வேட்டைத் தனத்தோடோ
வெகுளியாகவோ
சில நாய்கள்.


நாயாக மட்டுமே இருப்பது சாத்தியம்.

இனியவை
விரும்புவதும்
ஏற்பதுவும்
எவரும் பல்லிடுக்கிலிருந்து கிளறி துப்பும்
எச்சில் இறைச்சித் துண்டாயிருக்கலாம்.
ஏப்பங்களின் பின்னாக தூக்கிப் போடும்
எலும்பு மீதமாக இருக்கலாம்.

இந்த நாய்கள் காத்திருக்கும்.

சொச்சமாகவேனும்
எதை வீசினாலும்
கவ்விக் கொள்ளும்.
விருந்தெனச் சண்டையிட்டு
அதையும் சகதியில் வீசும்.
பின்

வீராப்போடு வெறுங்குடலைக் கழியும்.
கடைசியில் எச்சிலூறி
எவரேனும் கால்களை நக்கிக் கிடக்கும்.
நாய்கள்.

வேட்டைப் பற்களிருந்தாலும்
விரல் நகம் நீண்டிருந்தாலும்
அவ்வப்பொழுதுகளில் உறுமினாலும்
எலும்புகள் தானென்றில்லை 
எது கிடைத்தாலும்
நாக்கொழுகித் தின்னும்.

தமக்குள் தாமே
முந்தும்..கடிக்கும்..
இவை
நாய்கள்.. நாய்கள்.. நாய்கள்.

இனி நாய்கள் மட்டுமே.

நிரந்தரமில்லாத இருப்போடு எச்சில் உமிழும் எனது சுதந்திரம்

ஆயுதங்களோடு புறப்பட்டுப் போனோம்.
எங்களுக்கான
இடுகுழிகளை வெட்டிக்கொள்வதற்காகவும்.

நிரந்தரமில்லாமல்
பெயர்ந்த எல்லா இடங்களிலும்
காலடியின் கீழுள்ள நிலம் சொந்தமானது.

சுவாசத்தை எல்லா வெளியும் அனுமதித்தது.
கைவீச்சுக்கு குப்பை கிளறும் நாய் கூட
சிறு நகர்வும் சலனமும் கொண்டது.

சாகத்தெரிந்தது.
கொல்லத் தெரியவில்லை.
எச்சில் விழுங்கி
வாழ்வின் எதிர்த் திசையில்
மரணத்திற்கு ஆதரவளித்தோம்.

விடாய்த்துத் தணிந்து போனது
தகிப்பு.
பயணப் பொதியினுள் வெறுமையாகிக் கிடந்தன
புட்டிகள்.

இனி..

எனது நில அடைப்பின்
படலை பிரித்து நுழைகையில்..
வேலிகடக்கையில்..
வீட்டின் கதவு யன்னல் திறந்து
காற்று நுகர்வதில்..
முற்றத்து வெளியில் மல்லாந்து கிடப்பதில்..

நினைத்த பொழுதில் எச்சில் உமிழ்வதில்..
உணர்வேன்.
எனது சுதந்திரத்தை..
 

விழியோடல்கள்