செவ்வாய், 4 நவம்பர், 2008

வயிறு வாங்கினேன்.


கடைத்தெரு போனேன்.

தெருக்கடை ஓரமாய்
குங்குமம் இல்லாத ஒருத்தி
குழந்தை விற்கிறாள்.

குழந்தை முகவரி கேட்டேன்.
முந்தானை என்றாள்.
முழுப்பெயர் சொல்லவும்
முடியாதென்றாள்.

வசிப்பிடம் வறுமை.
வாழ்வது கடமை.
வயிறுபிழைக்கச் செய்தேன்
என்றாள்.

வயிறு பிழைக்கச் செய்த தொழில்
அவள் வயிற்றைக் கழுவ
போதவில்லை.

அதனால்...

இன்று
இரண்டு வயிறுகள் பசியோடு...

புரிந்தது.
அவள் வயிறு வளர்ப்பதும்,
வயிற்றை வளர்த்ததும்
ஒரே தொழிலில் தான் என்று.

அது சரி...
குழந்தை விற்று
குங்குமம் வாங்குவாளா?
இல்லை...
வேறு முந்தானை வாங்கி
முகவரி மாற்றுவாளா?

புரியாதவனாய்
அந்தக் குழந்தை வயிற்றை
வாங்கினேன்.

அதன்
வாழ்க்கையை வளர்க்கவும்...
அவள்
வயிறு பிழைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்