வியாழன், 6 நவம்பர், 2008

குறைந்தபட்சக் கோரிக்கைகள்


வீரத் தமிழர்கள்...
என்றெல்லாம்
எங்களைப் போற்றச் சொல்லவில்லை.

முடிந்தவரை
எங்களையும் மனிதர்கள் தான்
என்று சொல்ல
முயலுங்கள் என்கிறோம்.

அரசியலில்
முதற்குடிமகனாய் ஆளவேண்டும்
என்றெல்லாம் கோரவில்லை.

முதலில்
நாங்கள் அகதிகள் என்றல்லாமல்
வாழவிடுங்கள் என்கிறோம்.

புதிதாய் வீட்டுக்கூரைகள்
கொடுத்து உதவுங்கள்
என்று எதுவும் கேட்கவில்லை.

எங்கள் அத்திவாரங்களைத்
தோண்டியெறிவதை
நிறுத்துங்கள் என்கிறோம்.

நீங்கள் மட்டும்
கட்சியும் ஆட்சியும்
மாறிக்கொண்டிருந்தால் போதாது.

எங்கள் தேவைகளை
அடையாளம் கண்டு
தீருங்கள் என்கிறோம்.

காட்டுமிராண்டித் தனமான
உங்கள் கலவரங்களையும்
கண்டணப் பேரணிகளையும்
நிறுத்திவிட்டு

நாட்டின் நிலவரம் பற்றியும்
கொஞ்சம் சிந்தியுங்கள் என்கிறோம்.

நீங்கள் விரும்பாதபடியே
தனித் தாயகம்
கொடுக்கவேண்டாம்.

குறைந்தபட்சம்...

இடைக்காலத் தன்னாட்சி
அதிகாரத்தையாவது
விரைவாகத் தந்துவிடுங்கள் என்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்