வெள்ளி, 14 நவம்பர், 2008

வாழ்க்கையின் வெளி

கூடியழும் காகங்களின் அலறலும்
தனித்திருக்கும் இன்னொன்றின் கேவலும்
முழுக்கவனத்தையும்
அதன் வழியே இழுத்துப் போகிறது.

ஜன்னலால் பிரிக்கப்பட்ட
எனக்கிடையிலான
அதன் வெளி
நீண்ட அன்னியத்தை மேலும் விரிக்கிறது.

ஒரு வேலை நாளின்
காலை நேர பரபரப்பைப் போல
ஆரவாரத்துடன் தொடங்கும் ஒவ்வொன்றும்
மேலெழும்பும் பூனையினதும்
கவடு இடுக்கில் சுருளும்
நாயினதும்
பணிவு வால்களைப் போல

மிக அமைதியான மௌனத்துடன்
புதைந்தும்
அமிழ்ந்தும் போகின்றன.

நெடுஞ்சாலையில் செல்லும்
பேரூந்துப் பயணியின்
எச்சில் துப்ப முடியாத அதிருப்தியுடன்
அரைவட்ட அளவான
ஒவ்வொரு பகலின் ஓய்விலும்

நிரம்புகிறது
வாழ்க்கையின் சிறுவெளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்