திங்கள், 24 நவம்பர், 2008

மாறுபாடான முகங்கள்


நிதர்சனங்களை கேள்விக்குள்ளாக்கி
முன்னுள்ள வெளி முழுவதும்
அகப்படும் வண்ணங்களை அப்பிக்கொண்டு

காலம்
தன் முகத்தை அழித்தழித்து
புதிதாய் வரைந்தடியே உளது.

அவசரத்தில்
இருளையும் ஒளியையும்
கிழித்துச் செல்வதாக
வரையப்படும் கோடுகளூடு பயணிக்கும்
நத்தையின் நகர்வொன்று
தூரத்தே தூர்ந்து புள்ளியாகித் தொலையும்.

பருவத்தை மறுதலித்துப் பெய்யும்
மேகத்தை எதிர்த்த வானம்
வறள...

சூனியப் பொழுதொன்றில்
குருத்துவனை புசிக்கும் சைவ கழுகுகளும்
பசு முலை உறிஞ்சும் பாம்புகளும் என
தத்தம் உயிர்தேற பிராயத்தனம் செய்வதாயுள.

தூரத்தெளியும் உயிர்த்தெழும்பும்
வண்ணத்திட்டுகள் இராச்சதங்களாகி
முன்னோக்கி
விசையோடு பயணித்து
இமையடிப்பில்
அப்பால் கடந்து போகின்றன
எதிர்ப்புகள் அற்றனவாக.

பின்னும்...

காத்திருப்புகள் ஏதுமற்றனவாக
காலம்
தன் முகத்தை அழித்தும் உரித்தெறிந்தும்
வண்ணமப்பி
வரைந்துகொண்டே போகிறது
சிக்கலான குறுக்குக்கோடுகளால்

போலி முகங்களை
விதவிதமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்