புதன், 17 டிசம்பர், 2008

மனநோயாளர்களின் பிரக்ஞையும் மாறுபடும் கருத்தியலும்

என்னிடம் நெருங்கும் சில
மனநோயாளர்களின் பிரக்ஞைகள்
வினோதமானவை.

அத்தகையவர்களிடம்
நெருங்குவதும் பழகுவதும்
துணிவுடையதும் சுவாரசியமானதும் கூட.

வாய்ப்புள்ள போதெல்லாம்
கத்தத் தொடங்கி
அர்த்தமில்லாத உளறல்கள் போல
ஏதேதோ பேசுவார்கள்.

தாம் பேசுவது எல்லாமும்
செய்வது முழுவதும்
மிகச் சரியானவை.
என்பதே அவர்களின் நம்பிக்கை.

தம்மை பெருமையுடன் பேசுவதிலும்
மற்றவர் அதை ஆமோதிப்பதிலும்
அசட்டுத்தனமான ஆனந்தம்
அவர்களுக்கு.

கையில் கிடைப்பனவற்றையெல்லாம்
தாம் விரும்புகின்றபடி
மாற்றமுடியும்.
என்ற எண்ணத்துடன் முயற்சிப்பார்கள்.

அல்லாதபோது
மாறவேண்டுமென
வரட்டுத்தனமாக அடம்பிடிப்பார்கள்.

தம் குளறுபடிகளையெல்லாம்
சகித்துக் கொள்பவர்களை
சேர்த்துக் கொள்வதும், சேர்ந்து கொள்வதும்

மாறானவர்களிடமிருந்து
விலகி நடப்பதும், விலக்குவதும்
அவர்களின் அறியாமைத் தனங்களின்
அடையாளங்களாயிருக்கின்றன.

என்னை நோக்கி நகரும்
மனநோயாளர்களின் பிரக்ஞைகளும்
கருத்தியலும் கூட
இன்னும் வினோதமானவை.

முன்பொரு தடவை ஏற்றதை
மறுத்துரைப்பதும்.
மறுத்திருந்ததை ஏற்பதும் என...
தருணத்திற்கு ஏற்ப
கருத்துக்களுடன் முரண்படுவார்கள்.

அவர்கள் மீதான நம்புதல்கள்
அசாத்தியமானதும் அசாதாரணமானதும்.

அற்புதமானவற்றை தூற்றி
தூக்கியெறிந்துவிட்டு
கழிவுகளை சிலாகித்துப் பேசுவார்கள்.

கழிவுகளோ அற்புதமானவையோ
யார் கொடுத்தார்கள் என்பதே முக்கியம்.
நாற்றம் பற்றிய
துல்லியமான பிரக்ஞையிலிருந்து
அறுந்துபோய்க் கிடக்கிறார்கள்.

அவ்வப்போது
அவர்களின் நடத்தைகள்
கேள்விக்கும், கேலிக்கும் உரியவையாகும்.

பாராட்டல்கள் பற்றிய ஏக்கங்கள்
அவர்களுக்குள்
நிறைய அமிழ்ந்து கிடக்கின்றன.

துரதிஸ்டம்...

தாம் மனநோயாளர்கள் என்பதை
அவர்களால் எப்போதும்
உணர்ந்துகொள்ள முடிவதில்லை.

செவ்வாய், 16 டிசம்பர், 2008

வாழ்தலின் நிதானம்

அடைக்கப்பட்ட ஆடுகளின் விடுதலை யாசகம்
விமர்சிக்கப்பட்டு முடிவதற்குள்ளாக
சலனமின்றி மூப்படைகிறது
சந்ததிகளின் ஆயுள்.

விடியலைப் பறைசாற்றும் நோக்கில்
ஆர்ப்பரித்த சேவல்களால்
வாழ்தலின் வேட்கை அதிகரித்து
உயிர்த்தெழுந்த போதெல்லாம்
சேவல்களின் தலைகள் பலியிடப்படுகின்றன.

சிறை மீட்பாளர்கள்
சிந்திக்கும் அவகாசத்தில்
கூண்டுக்குள் வேட்டையாடல்கள்
விஸ்தரிப்புடன் அரங்கேறி முடியும்.

கசாப்புக் கடைக்காரனின்
நீட்டப்பட்டிருக்கும் கைகளின் முடிவிலுள்ள
பிடியளவு தழைகளையும்

ருசித்துத் தின்னும் ஆட்டின்
இறுதி நிமிட வாழ்தலின்
நிதானத்திற்கு நிகரானது
ஆதிக்குடிகளின்
நம்பிக்கையும், தீர்மான நிராகரிப்பும், எதிர்ப்பும்.

ஓர்மத்துடன்
ஒவ்வொரு கத்திவீச்சுக்கும்
தலை மறுக்கும் ஆற்றலுடன்
ஆடுகள் துணியும்.

ஓர் தினம் பட்டி உடைக்கும்.
பச்சைப் பெருவெளிகள் தேடி
படையெடுக்கும்.

பின்னாக வயிறு புடைக்க மேயும்.
வெளி முழுவதும் உலவும்.
அவ்வெளியே
பின் நாளில் பட்டியாக்கப்படும்.

ஆடுகளுக்காக..

விரட்டப்படும் அப்பாவிகளும் மீட்பர்களும்


கேளுங்கள் கிறீஸ்துவே!

உமக்குப் பின்னரும்
மீட்பர்கள் எனச் சொல்லி
யூதாஸ்கள் ஒன்றுகூடி வருகி்றார்கள்.

விரட்டவல்ல ஏவலாளிகளிடம்
கொம்புகளையும் சாட்டைகளையும்
அவர்களே ஏற்பாடு செய்தார்கள்.

முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு
மந்தைகள்போல
திசை முழுவதும் விரட்டப்பட்டவர்களிடம்
தங்களின் பாவங்களையும்
சுமக்கத் தருகிறார்கள்.

ஒவ்வொரு தொலைவுக்குப் பின்னாகவும்
தேடிப் பொறுக்கப்படும்
அழுகல்களின் உள்ளிருந்து
முள் முடிகளோடு உருவியெடுக்கப்படும்
எலும்புகளால்
சிலுவைகளை செய்து தருகிறார்கள்.

ஒவ்வொரு பலியின் போதும்
அப்பாவிகளின் தசைகளையே, ரத்தத்தையே
உண்கிறார்கள். குடிக்கிறார்கள்.

வெளி முழுவதும் குவிக்கப்படும்
அப்பாவிகளின்
மண்டை ஓடுகளை நோக்கி
கல்வாரிகள் இதுவென கை நீட்டுகிறார்கள்.

அவர்களின் உயிர்ப்பிற்காக
மீண்டும் மீண்டும் அப்பாவிகளே
மரிக்கவேண்டியதாயுளது.

இப்போது சொல்லுங்கள் !
வழி தவறிய இந்த ஏய்ப்பர்களா
மீட்பர்களும் நல்ல வழிகாட்டிகளும்?

கற்களின் காழ்ப்பும் உளிகள் மீதான விமர்சனமும்


எனக்கெதிரானவர்களே!

இதோ,
இம்முறையும்
எனது அன்பின் உங்களுக்கான பங்கை
பெற்றுக்கொள்ளுங்கள்.

உளிகள் மீதான கற்களின் கோபம்
என்மீது உங்களுடையது.

தம்மை சிதைத்தமைக்காக
இருப்பை இடம்பெயர்த்தமைக்காக
இயல்பை மாற்றியமைத்தமைக்காக
......................................
.................................................. என

நியாயத்தின்படி
சிற்பி மீதான சிலைகளின் நன்றியுணர்வே
உங்களிடமிருந்து
எனது எதிர்பார்ப்பாக உளது.

ஈர்க்கப்பட்ட நாணிலிருந்து
விரட்டப்பட்ட அம்பினுடைய
நம்பிக்கையைப் போன்றதே.

எனது நம்பிக்கை.


பயணத்தின் வெளியில்
எங்கோவொரு முடிவில்
எனக்கான இலக்கின் அடைவுண்டு.

திங்கள், 15 டிசம்பர், 2008

ரயில் சினேகம்

தீக்குச்சி விழிகளுடன்
எதிரெதி்ர் இருக்கைகளில்
அமர்ந்து கொண்டோம்.

எரிந்து கொண்டு இறங்கினோம்.
வெவ்வேறு தரிப்பிடங்களில்.

மாறுபாடுகள்

உன் கொலுசொலி ஜாடைக்கு
ஓடிச்சென்று
ஜன்னல் திறந்தேன்.

வீதியில்
கனரக வாகனத்தின்
இரும்புச் சில்லுகள்
சங்கிலியைச் சப்பிக்கொண்டு நகர்ந்தன.

புழுக்கம்


கோடையைப் பார்க்கிலும்
நீயில்லாத குளிர்காலங்களே
எனக்குள் அதிகமாக புழுக்கமெடுக்கிறது.

அரிப்பு


எனக்கு அரிப்பெடுக்கிறது.

சொறிந்துகொள்ளவும் சுதந்திரமில்லை
சோதனைச் சாவடி
அருகில்.

அடிமை


தாயின் முலை ருசிக்குப் பழகிவிட்ட
சிசுவைப் போல
உனது ஆற்றுப்படுத்தலுக்கு
ஆளாகிவிட்டதனால்

ரப்பர் உறிஞ்சியைத்
துப்பிவிட்டு
அழுகின்ற குழந்தையின் அருவருப்புடன்

உனதற்ற வேறெந்த வார்த்தைத் தூண்டலுக்கும்
காது தீட்டி துலங்க இயலாமல்
திக்கு முக்காடுகின்றேன்.

காற்றில்லாத கிரகத்தில்
சுவாசிப்பதாக.

மலட்டுச் சிந்தனையாளர்கள்


தட்டித்தட்டி எழுப்பி
இனி
மீண்டும் மீண்டும் பிணங்களையும்
சுட்டுச்சுட்டு போட்டாலும்
இவர்களுக்கு சாவுகள் சலிக்காது.

போதனைகளைப் போதிமரத்தடியிலேயே
போட்டுவிட்டு வந்து
போதை தெளிந்தவன் பேச்சாக
கருத்துக்களில் தடுமாற்றம்.

விட்டு விடுங்கள்.

இவர்கள் சாவுகளைத் பிய்த்து
சதை சப்பிச்சப்பி
சத்தியாக்கிரக(மு)ம் இருப்பார்கள்.

நிலைத்துவிட்ட எழுத்துக்காரன்

நாங்கள்
தொல்லையென்றவன் தொலைந்ததும்
தொடரெழுதி அழுபவர்கள்.

வாழும்போது வாழ்த்தாமல்
அவனது கையெழுத்துப் பிரதிகளை
கசக்கியெறிந்து காறித்துப்புபவர்கள்.

அவனது எழுத்துக்களுக்குள்
எந்தப் பொருளுமில்லையென்று
எழுத்தாணிகளை முறிக்கத்
திட்டம் போடுபவர்கள்.

அவன் கருத்துக்களுக்கு
மாற்றீடாக வேறொன்றை ஏந்தி
மறுதலித்து நிற்பவர்கள்.

இன்று
சாவு வந்ததும்
அவனுக்காக
இரங்கலுடன் குமைதலொன்றும்
இதழொன்றில் நினைத்தல் தொடரொன்றும்
எழுதவென்று முடிவெடுத்துள்ளோம்.

இன்று அவன்
எங்களுக்குள்
நிலைத்துவிட்ட பெயரெழுத்துக்காரன்.

பலியாடுகள்


நிகழ்காலங்கள் தீ மூட்டப்பட்டதில்
கொழுந்துவிட்டு எரியும்
நெருப்பில்

அவிந்து உடல்கருகி
துடிதுடிக்க
சிறுபான்மையினர் படையலிடப்படுகின்றனர்
களப்பலியில்.

நம்பிக்கைகள் குவிந்து கிடந்த
எதிர்காலம்
முன்னேற்பாடுகளுடன் சூறையாடப்பட்டு
அவசரமாகத் தீர்ந்து போகின்றன.

கேள்விகள் அடுக்கப்பட்ட சுவர்களும்
தேய்ந்து நொருங்கி
ஓட்டையாகிவிட்ட நிலையில்

முண்டாசுக்கவியின் வாய் முகூர்த்தம்
பலித்துவிடும் அதிக வாய்ப்போடு
அங்கலாய்க்கும் மனதுகள்.

“சிங்......... தீவினுக்கோர் பாலம்.”


கழுத்துப்பட்டையும் சிவப்புப்பேனாவும்



போதும்.
விட்டுவிடச் சொல்லுங்கள்.

என்னிடம் சில
சிவந்தமையுடன் கூர்முனைப் பேனாக்கள்
இருப்பது உண்மையே.

அவை
ரத்தமும் சதையும்
சிந்தப்படுதலும் சிதறுதலும் பற்றி
எழுதுவதனால்

இரத்தத்தால் நிரப்பப்பட்டவையோ என
யாரோ சில(ர)தை
தவறாக்கி சொல்லிவிட்டார்கள்.

நம்புங்கள்.

முதலில்
சட்டையின் கழுத்துப்பட்டையை
பிடித்திழுப்பவர் கைகளை
விலக்கச் சொல்லுங்கள்.

உண்மைகளை மட்டும் பறையடிக்கும்
ஊடகக்காரன் என்பதால்
எதையும் ஏன்!
நாளை இதையும் கூட..

முதலில்
என்னை விட்டுவிடச் சொல்லுங்கள்.

பிறகு...
 

விழியோடல்கள்