திங்கள், 7 மார்ச், 2011

தேர்தல் பற்றி தெளிதல்


பால்ய நண்பன் தேடி வந்தான்.

அக்காளுக்கு அருகிடத்திலொரு இடமாற்றமும்
அண்ணனுக்கு அலுவலகத்தில் பதவியுயர்வும்
அடுத்த கோட்டாவிலேயே அவனுக்கொரு வேலையும்
செய்துதருவதாக கூறிய வேட்பாளரை நம்பி..
தேர்தலின் முக்கியத்துவம் பற்றியும்
ஓட்டுக்களை செகரிப்பதெவ்விதம் செல்லுபடியாக்குவதெப்படிஎனவும்
ஏதோவொரு இலக்கத்தையும் நபரையும்
வெல்லச்செய்தால்.. வேண்டிய உதவிகள் பெறலாம்.
என எனையும் தெளிவாக்கினான்.

நானவனை அமரவைத்து பேசினேன்.

அவனது தெளிவு என்பது..
வேட்பாளனின் இலக்கத்தை தெளிவாக தெரிந்து வைப்பதிலும்
மற்றவருக்கும் தெரியப்படுத்துவதிலும்
அவருக்காக ஆள் கூட்டுவதிலும்  
அவரது அல்லது அவர்களது பொய்களையும் போலி நடத்தைகளையும்
உயர்த்தி உத்தமமாக்குவதற்கு முனைவதிலுமிருக்கிறது.

சுவரொட்டிகளுக்கு பசை பூசுவதிலும்
பிரசாரக்கூட்டங்களுக்கு கதிரை அடுக்குவதிலும்
கோணம் கோணமாக நகல் படம் எடுப்பதிலும்
தேவைக்கு ஏற்ப வன்பானம் குடிப்பதிலும்
வறுத்த சோறும் புரியானியும் உண்பதிலும்
அவர்கள் பிடித்திருக்கும் வாடகை வண்டிகளில்
ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிட்டு உலவுவதிலும்
வேட்பாளர் வீட்டையும் கட்சி பணிமனையையும்
கொடிகள் கட்டி பரபரப்பாக வைத்திருப்பதிலும்

நாட்டில் இல்லாதவர்கள் 
நான்கு நாட்களுக்கு முன் செத்தவர்கள்.
வந்து ஓட்டுப்போட வசதியில்லாதவர்களின்
வாக்காளர் அட்டைகளை செகரித்தலிலும்
வாக்களிப்பு நிலையத்தில் ஏஜண்டாக 
நாள் முழுதும் வாக்காளரை எண்ணுவதிலும்
அல்லது 
கள்ள ஓட்டு போடுவதிலும் கலக்கம் செய்வதிலும் இருக்கிறது.


மக்கள் தெளிவாயுள்ளார்கள் போலும்..
அவர்கள் நினைக்கிறார்கள்
வாக்கெடுப்புக்களே அனாவசியமானது
வாக்களித்தல் நேர மெனக்கேடு..
தாங்கள் ஓட்டு போடாவிட்டாலும்
தங்களுக்கான பிரதிநிதிகள் தெரிவாவார்கள்
அல்லது தெரிவாக்குவார்கள் என்று.

மக்கள் தங்கள் அரசியலுக்காக அவாவோடு இருக்கிறார்கள்
இவர்கள் தத்தம் அரசுக்காக அலைகிறார்கள்.
போகட்டும்
எல்லாத்தமிழனுக்கும் கிடைக்காத 
வசதியும் சுதந்திரமும்
சிலருக்காக வாய்க்கிறதே போகட்டும்.
மற்றவருக்காக ஏதும் செய்யாவிட்டாலும்
அவர்களுக்காகவாவது ஏதும் சேகரிக்கட்டும்.

இன்னுமொன்று.. 
பூனைகள் வளர்க்கிறோம் 
அவை எலியை பிடிக்காவிட்டாலும்
பண்டங்கள் நடுவே கத்தி திரிந்தாலே போதும் 
எலிகள் பண்டங்கள் பக்கம் வர தயங்கும்.
அதுபோல
நாம் பூனையோன்று வளர்ப்பதற்காவது முன்வருவோம்.
கடிக்கும் பூனை இல்லாவிட்டாலும்
கத்தி திரியும் ஒன்றையாவது.

சனி, 5 மார்ச், 2011

அடையாளங்களற்றிருத்தலும் அன்னியமாகித் திரிதலும்

யூதர்களைத் தழுவியதான யுத்தத்தில் இணைந்திருந்தோம் என்பதில்..
நாசிகளுக்கு நடுங்கி
உரிக்கப்பட்ட குறிநுனியின் தோலை இழுத்துப் போர்த்தி
தன்னை பாதுகாத்துக் கொள்ளத் தவித்த
யூத இளைஞனைப் போல
தமிழர்களின் அடையாளங்களுடன் பயந்து நடுங்கி
தவித்து ஒடுங்கி.. ஒதுங்கி ஒழிந்த
துரதிஸ்ட துன்பியல் காலங்கள் முன்னே நகர்ந்து போயின.

தமிழினை பேசுவோரெல்லாம் தமிழராயிருந்த அடையாளம் போக
பயங்கரவாதிகளெல்லாம் தமிழர்கள் எனும்
அடையாளமிடுதலின் பின்
எங்களினது சகோதரர்கள் போரிடப் புகுந்த போது
புறநானூற்றுத் தமிழனென்று புகழ்ந்தவர்களும்
சகோதரிகளிடம் ஆயுதங்களைக் கொடுத்து
குட்டையாக வெட்டிய தலைமுடியுடனும்
நீளக்காற்சட்டையும் கனத்த சப்பாத்துக்கால்களோடும்
பொட்டிட்டிராத நெற்றிகளோடும்
போராளிகளாயுலவவிட்ட பொழுதுகளில்..
தமிழர் நிலமெங்கும் பால்நிலை சமத்துவம் தலையெடுத்துள்ளதாக
தொடை தட்டியவர்கள்
பிறகு கள நிலங்களில்
தமிழச்சியின் நிர்வாணத்தையும் தமிழனின் சாவையும்
ஊர்வலமாக்குகையில் ஊமைகளானார்கள்.
பெரும்பான்மைகளென்றுரைக்கும் சிறுமை குணத்தார்
குமைந்து ரசித்து சிரித்து மகிழ்தனர்.

போராளிகளெல்லொரும் எப்போதோ இறந்துவிட்டனர்.


அப்பாவிகள் அதிகமாய் அழிந்து போயினர்
அரைகுறை முண்டங்களாயினர்
நிலம் பறிக்கப்பட்டு நீர்ப்புழுக்களுடன் வாழ பழக்கப்பட்டனர்
மறச்சிகள் மானமிழந்தனர்
வாழ்வை ருசிக்கவென்றில்லாது சாவைத் தவிர்க்கவே
சதை விற்கவும் துணிந்தனர்.

வரலாறுகள் பேசுகின்றன
உரோமப் பேரரசில் கிறீஸ்துவின் மீதான குற்றம்..
ஏரோது மன்னனுக்கெதிரான பேரரசை நிறுவ முயன்றதான
அரச குற்றமவாளி என்பதே
விடுதலை கேட்டவர்கள் விமர்சிக்கப்பட்டு குற்றவரளிகளாயினர்
ஆயுதங்களை பிடிகொடுத்தவர்கள்
ஏரோது வகை அரசொன்றில் ஆளுகையில் அமர்ந்தனர்
சந்தர்ப்பவாதிகள் தலையாட்டித் தப்பினர்
காட்டிக் கொடுத்தவரெல்லாம் கௌரவம் பெற்றனர்
முடமான போராளிகள்
முன்னாள் போராளி சான்றிதழ்களுடன் வீடுகளில் முடங்கினர்.

சாப்பிடக் கொடுத்தவர்களென்றும்
மரியாதை அழைப்புக்களில் மாலையிட்டவர்களென்றும்
மக்களின் கூட்டங்களில் உரத்துப் பேசியவர்களும்
பலசரக்கு சாமான்கள் வாங்கிக் கொடுத்தவர்களென்றும்
கசிப்பு வடித்த குற்றத்தில் தண்டிக்கப்பட்டு பங்கர் வெட்டியவர்களும்
மண்பொதிகள் அடுக்கியவர்களும்
தங்களிடமிருந்த மாட்டு வண்டிகளிலும் கூட
ஆயுதங்களை எடுத்துச்செல்ல இடமளித்தனரென்று சந்தேகிக்கப்பட்டவர்களும்
முன்னரங்கின் முன்வீட்டுக்குரியவரும் முகாம்கள் அமைந்திருந்த நிலக்காரரும்
பதுங்கியிருந்து சுட்டோடிய பின் பற்றைகள் வளர்ந்திருந்த காணிக்காரரும்
வீதிச்சோதனையின் போது வீதியில் போனதாலும்
சுற்றி வளைப்புகளில் ஓடியொழியாது வீட்டிலிருந்த நோயாளிகளும்
தற்பாதகாப்புக்கென முன்னே அழைத்துச்செல்லப்பட்ட வயதாளிகளும்
முக்காட்டுக் காட்டிகளால் தலையசைத்தவர்களும்
விசாரணையின் பின்னாக விடுவதாக அழைத்துப்போனவர்களுமென..

சிறையில் செத்தவர்கள் போக..
சந்தேக கைதானோர்களேயின்னும் அடைக்கப்பட்டிருக்கின்றனர்
பயங்கரவாத தடுப்புச் சிறைகளில்

இன்றெங்கள் தேசியம்
தாய் நிலமற்றது. தனிக் கலாச்சாரமற்றது. தொன்மங்களைத் தொலைத்தது.
தோற்றும் போனது.
தமிழைப் பேசுவதனால் மட்டுமே தமிழர் என்றுமானது
ஆதனால்
பலரின்று முன்னாள் தமிழராயும் ஆயினர்.

குர்தீஸ்களைப் போலவே
நாமுமின்று நாடற்று நாடுகள் முழுவதிலுமுள்ளோம்.
டொலர்களையும் பவுண்களையும் யூரோக்களையும் பிறவும் சேகரிக்க
நாடோடிகளாகி இரவல் சுகதாரிகளாயுமுள்ளோம்.
தத்தம் அடையாளங்களை விரும்பாமலும்
அதை மறந்தும் மறுத்தும் மாறியும் இன்னொன்றாயும் வேறுமாயும்
இலங்கைக் குடியேற்றவாசிகளென்றும் ஈழத்தமிழகதிகளென்றும்
யுத்தமில்லாத யுத்தகாலத்தில்
தமிழராயும் முன்னாள் தமிழராயும் தங்ளிஸ்களாயும்
வேறொன்றான அடையாளங்களோடும் அடையாளங்களற்றும் இருக்கின்றோம்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

யுத்தமில்லாத யுத்தகாலத்திலிருந்து விடுபடுதலின் பின்னாக




புலிகளும் பிரபாகரனும் பயங்கரமேதும்
மற்றும்
பயங்கரவாதிகளென்றழைக்கப்பட்டவர்களெவரும்
இல்லையென்றாகி
நாடு முழுவதும்
குண்டு வெடிப்புக்கான சாத்தியங்களும்
குண்டுகளை வைப்பதற்கான தேவைகளும்
வெடிக்க செய்யும் போராளிகளும்
வைத்திருந்தாலும் வெடித்தாலும் கண்டெடுத்தாலும்
புலிகள் வைத்ததற்கும்
சந்தேக நபர்களைப் பிடிப்பதற்கும் சாத்தியங்களினியிராது.

சுற்றிவளைக்கவும்
குடும்ப அட்டைகளை சரிபார்க்கவும்
நிழற்படங்களை சேகரிக்கவும் தலையாட்டி வைக்கவும்
விசாரணைக்கு அழைத்துச் செல்லவும்
கைது செய்ய.. காவலில் வைக்க..
இனியும் அவசியமற்றதாம்.

நாடு சுதந்திரமடைந்துவிட்டது
பயங்கரவாதம் தோற்று 
சுமுகநிலையொன்றும் வந்தாயிற்று.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழரை அழித்து
அநாதைகளாக்கி அகதிகளாக்கி 
குடிலில் வைத்த நிலங்களை 
சுற்றி உலவி பார்த்துவர
சுதந்திர தேசத்திலுள்ள எவருக்கும் இயலுமாயிருக்கிறது.

ரோந்து நடக்கத் தேவையும்
வீதியில் போய் வருவோரை முறைக்கவும்
விசாரிக்கவும் தாமதப்படுத்தவும் தடுத்து நிறுத்தவும்
காரணமேதுமின்றிப்போயிற்று.
கண்ணி வெடிக்காது கைக்குண்டு வீச்சிராது
இனி
காணாமற்போவோரும் கடத்தப்படுவோருமிரார்.
மறைந்திருந்து சுடுவதும் சுடுபடுவதும்
வீதியில் டயர்களுடன் சேர்ந்து கருகுவதும்
நிகழவே நிகழாது.

பிள்ளை பிடிப்பாரில்லை
வெள்ளை வாகனங்களில் ஏற்றுவாரில்லை
குமருகள் மாலையில் தொலைந்து 
புளை சிதைய மற்றோரிடத்தில்
மறுகாலையில் மீள்தலும் இயல்பாயிராது.
இளந்தாய்களை இரவுகளில் 
இனமறியாதோரெல்லாம் வன்புணர்தலும்
இளந்தாரிகள் இரக்கமின்றி
தெருவோரம் சுடப்பட்டழுகிக் கிடப்பதும்
இனியயினிய இந்நாட்டில் இராதென்றே சொல்கிறார்கள்

பத்திரிகைகள் செய்பவர் செய்திகளை சேகரிப்போர்
பக்கக் கட்டுரைகள் பத்தி எழுத்துக்காரர் 
பட்டப் பகலில் சுடப்படுவதுமிராது.
கட்சியுறுப்பினர்கள் மக்களின் மரியாதைக்குரியவர்கள்
உரத்து மறுத்து எதிர்த்து கண்டித்து
குரல் கொடுப்பவர்கள் என..
நள்ளிரவுகளில் குடும்பத்தினர் முன்பாகவே 
அழைத்துச்செல்லப்படுவதும்
அவர்களது நிலை
பின்நாளில் அறியக்கிடைக்காததும்
அங்கு எங்கேனும் ஆற்று வாய்களில்
அலங்கோலப் பிணங்களாவதும் 
ஜனநாயக நாட்டில் இனியறிய முடியாது.

அடையாள அட்டைகளில்லாதிருப்பதும்
தொலைத்தலும் வீட்டில் விட்டு வருதலும்
"பயங்கரவாதிகளின் அடையாளங்களில்லை"
என்றுரைக்கும் சட்ட நடைமுறையும்..
இருக்கும் தமிழர் அனைவருமே
பயங்கரவாதிகளென்னும்
காரண காரியங்களும் இல்லாதொழியும்.
வேட்டுக்குத் தப்பி சரணடைந்தால்
சுதந்திர நாட்டில் தொழில் பயில முகாமுண்டு.
ஆண்டு பலவாய் தடுப்பு சிறைகளில் 
சந்தேகப் பெயர்களுடன் சாவதும் இனிமாறும்.

தனி நாடும் கோருவதற்கு யாரும்
தமிழர் தனியினமாக வழுமிடங்களும்
சின்ன வன்னி, குட்டி யாழ்ப்பாணம் எனும்
வடக்குப் பெயர்கள் வழக்கிலும் இல்லாது போக..
அநேக தமிழருக்கு சொந்த வாழ்நிலங்களே 
அனுமதிக்கப்படாதும்
அகதிகள், அநாதைகள், அடிமைகள், ஏழைகள்
இழிச்சவாயர்கள், ஏமாளிகள், அடிவருடிகள்,
துரோகிகள் எனும் மறுபெயர்கள்
பல்லாண்டுக்கு அடையாளமாவதும்
புலிகள்
என்றவொரு பெயருக்கிருந்த மரண பயமும்
புல்லுருவிகளிடமிருந்தும் தேசியக்கள்ளர்களிடமிருத்தும்
அப்பாவிகளுக்கிருந்தவொரு பாதுகாப்பும் கூட..
எப்போதுமே இனியிராது போகட்டும்.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

கைகள் உள்ளவரெல்லாம் கவனிக்கவும்


அதிமேதகு, மேதகு கெளரவ, அதியுயர், மரியாதைக்குரிய, 
    *இதில்   ஏதேனும் ஒன்றினையோ அல்லது பலதையோ
     பெயரின் முன்னாக இட்டுக்கொள்ளலாம். 


மதிப்புக்குரிய கனவான்களே!
(எனதல்ல)

உங்களது வசதிகளை அதிகப்படுத்தும்
வழக்கமானதும்  வளமானதுமான உங்களது கடமை வருகிறது.
வேறென்ன 
மீண்டுமொருமுறையுங்களது திருவிழா. 
எங்களது வரிப் பணத்தில் நீங்கள் கொண்டாடும் கொள்ளையிடும் 
சண்டையிடுவதற்குமான  நாட்கள்.

முன்னைய நாட்களில் தேவைப்பட்டது.
பிரதிநிதிக்கான போட்டியின்போது தகமைகள்
சிறு தொகையினரின் நன்மதிப்பும் செல்வக்குமென...
மேலும்
வாயும் நாக்கும் பேச்சாற்றலும்ஆளுமையும் 
தைரியமும் கடமையுணர்வும் கருணையுள்ளமும் 
கண்ணியமும் ஒழுங்கும் பண்பும் பணித்திறனும்   கூட.

இனியது அவசியமற்றதாகிறது.

நினைத்தவரெல்லாம் முன்வரலாம் 
சண்டியர்கள் சந்திப்பெடியங்கள் செல்வாக்கும் 
செல்வமும் உள்ளவர்கள்
இறால் போட்டு சுறா பிடிக்கத் தெரிந்தவர்கள்
சுத்துமாத்து குள்ளத்தனம்
குடிகாரக் கும்பல்களின் தலைவர்கள்
மற்றும் 
முன்னைய தேர்தலில் பிரசாரம் செய்யும்
கட்சி ஊர்திகளில் அலைந்தவன்
சுவரொட்டிகளை ஒட்டியவர்கள்
வீரப் பாடல்களை ஒலிக்கச் செய்தவர்
பந்தல் கதிரைகளை ஒழுங்குபடுத்தியவன் 
இவர்களில் யாரும் வாக்குக்கேட்டு முன்வரலாம்.

இம்முறை  மக்களை  ஏமாற்ற மட்டும் முடியாது. 
அவர்களிடம்  எதிர்பார்ப்புகளில்லை 
எதுவித நம்பிக்கையுமில்லை
ஆகவே
ஏமாறாமல் வாக்குப் பதிவு செய்வர் 

அது காரணமாக 
வழமைபோல வாய்கிழிய பேசவோ 
வாக்குக்கேட்டுக் கும்பிடவோ வேண்டாம்.
வாக்குறுதி என்னும் வாக்கியங்களை அச்சடிக்கவோ 
அவசரப்பட்டு விதி எங்கும் வீசவோ  அவசியமில்லை

உங்களிடம் வாயிருக்க வேண்டியதில்லை
ஏனெனில்
நீங்கள் ஒன்றையும்பேசி சாதிக்கப்போவதில்லை
பேச்சும் எவரிடமும் எங்கும் எடுபடப்போவதுமில்லை 

அதனால் 
கைகளில் மட்டும் பலமிருந்தால் போதும் 
வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்
அரசியல்/அரசு 
தலைவர்களுக்கு கும்பிடு போடலாம். 
கால்களில் விழுந்து கழுவியும் பிடித்து அமுக்கியும்  விடலாம்
சண்டித்தனம் செய்யவும் 
சக வேட்பாளரை அடித்து முறிக்கவும் முடியும்.

வெற்று அறிக்கைகளை எழுதலாம் 
வீரவசனசுவரொட்டிகளை ஓட்டலாம்
வேண்டியளவு கையூட்டுகளையும் வாங்கித் தொலையலாம்
கட்சி ஆதரவளர்களுடன் கைகுலுக்க நன்கொடைகளைப்பெற
கொந்தராத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட
ஏழைகளுக்கு ஏதேனும் ஒதுக்கீடு வந்தால் எடுத்து
வீடுகளில் பதுக்க 

எப்போதாவது
வாக்களித்த மக்களை அனர்த்த நிலையங்களில் கண்டுவிட்டால் 
கையசைத்துக்காட்டவென

ஆதலால்
கையிருப்பவர்களெல்லாம் கவனிக்க
உடனடியாக
இம்முறை தேர்தலில் குதிக்கவும்.

 

விழியோடல்கள்