குறைந்தபட்சக் கோரிக்கைகள் (2006) தொகுப்பிலிருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறைந்தபட்சக் கோரிக்கைகள் (2006) தொகுப்பிலிருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 நவம்பர், 2008

எல்லோர் கைகளிலும்


எங்கள் தலைவிதியை
எழுதவல்ல பேனா

எங்களைத் தவிர
மற்றைய எல்லோர்
கைகளிலும் உண்டு.

ஏன்...
அதில் ஒன்று
எழுதத்தெரிந்திடாதவர்
கைகளிலும் கூட.

சகோதரத்துவம்


சகோதரர்களாய்
வாழப்போவதாய் தான்
ஆங்கில சாம்ராஜ்ஜியத்திடம்
அன்று சொன்னோம்.

பின்
பங்காளிகளாகிச் சண்டையிட்டுக்
கடைசியில்
பயங்கரவாதிகளுடன் சேர்க்கப்பட்டோம்.

உரிமைகளை தாரைவார்த்து விட்டு
பின்
உருப்படாமல் போனோம்.

நீலவர்ணத்தின் கீழ்
இன்பத்திற்கு எல்லையில்லை என்றார்கள்.
தமிழர் எல்லை வரை
துயரம் தான் நீண்டது.

பின்னர்
பச்சைநிறம் வந்ததும்
வாழ்வு பசுமையாகும் என்றார்கள்.
நம்ப நட
நம்பி நடவாதே என்பார்கள்.

ஜனவரி முதல் தேதி
நாட்டின்
சகோதரர்கள் தினமாம்.
ஜனவரி முதலில்
மட்டும் தானா?

எந்தச் சகோதரர்கள்
ஆளுக்கொரு தாய்மொழியைப்
பேசுகிறார்கள்? ம்...?

என் ஊரில் 07.07.90 இல்...


என் நெஞ்சுக்குழியில்
நெருப்பெரித்த 07.07.90 இல்...
காடையர்களிடம் இருந்து
காப்புத் தேடிய போது

எனக்கு பாதுகாப்புத் தந்த
என்னூரின்
பரட்டையாய் பரந்து கிடந்த
பற்றைக்காடுகள்.

அம்மா மடிக்குப் பிறகு
என்னை
பாதுகாப்பாக அரவணைத்து
உறங்க வைத்த
அந்த சருகுப்படுக்கை.

முள் கிழித்து
முதுகின் இரத்தக் கசிவுகள்.
கைரேகைக்குப் பின் என்னுடலில்
அதிக கோடுகளை
அப்போது தான் பார்த்தேன்.

அன்று
என்னவரின் பிணம் எரித்த
தீயின் மீதமும்
காடையரின் செருப்புகளின்
கால் மிதித்த மீதமும்

அந்தக் கொடுமைக்கு
சுவடுகளாய் கிடந்தன.

அப்பனைச் சுட்டதற்காகவும்
அம்மாவை அடித்ததற்காகவும்
அண்ணனைப பிடித்ததற்காகவும்
அக்காவையும் சட்டையையும் கிழித்ததற்காகவும்

ஆத்திரப்பட்டு...
அன்று ஆயுதம் தூக்கிப்போய்விட்ட
என் வயதுக்காரர்கள் தான்
எத்தனை பேர்.

அப்போதெல்லாம்
கோழைகளாய்த் தான்
நானும் சிலரும் இருந்துவிட்டோம்.

அவர்களின்
அத்தனை முகங்களும்
நெஞ்சின் பதிவாயும்
கல்லறையின் ஆழத்திலும்.

உண்மையில் நேற்றையதை எண்ணி
என்னூரில்
அம்மாவைப் போலவே
இன்னும் நிறையப்பேர் அழுகிறார்கள்.

காந்தி







அரசியல்வாதிகளே...
ஆடை(யை) கொடுங்கள்
அரை நிர்வாணமாய்
காந்தி

மறுபடியும் மலியும் மரணம்.


இப்போதெல்லாம்
என் முற்றத்து நிலா காணாமல் போய்
பதிலுக்காய்
ஓரிரு நிமிட மத்தாப்பு.

மரணங்களுக்காய்
அழுது பயந்து
சிரிப்புகள் எல்லாமாய் செலவழிந்துபோய்

இனிபோதும்.

போர் வேட்டுமழை
பொது உடைமையழிப்பு
பஸ் இறக்கம்
பாஸ் நடைமுறைகள் வேண்டாம்.
என்றிருந்தபோது

ஆள் பிடித்தல்.
ஆங்காங்கே இனமறியாத
அவசரக் கொலைகள்.

வீதியெங்கும்
மின் கம்பங்களுக்கு அதிகமாய்
ஆயுத மரங்கள்.
இதற்குள்

பொதுக்கட்டமைப்பு முன்மொழிவு
அதற்காயும்
கண்டன ஆர்ப்பாட்டம்.
ஹர்த்தால் கருத்தரிப்பு.

கண்துடைப்பு எதிர்ப்பறிக்கை.
கூடவே
கண்காணிப்புக் குழுவிடமும்
மனுநாடகம்.

கூட்டு அமைப்பு கூடு கலைவு.
கடைசியில் நமக்கு
கட்டமைப்பும் கைநழுவும் நிலை.

மேடைவரை சமாதானம்.
மேசைவரை இணக்கம்.
மிஞ்சியதெல்லாம்
அம்மணமாய் நின்றது போலொரு
அவமானம்.

என்ன கண்டோம்?

மூளைசாலிகள்.
ஊடகத்தில் முதுகெலும்புள்ள தமிழன்.
முக்கியஸ்தர் என
முழுவரையும் தினமும் தின்றோம்.

மனம் வெறுத்தோம்.
மறுபடியும் மானம் காக்க
ஒரு யுத்த(மே)மா வேண்டும்?

சிங்களச் சிநேகிதி

அதைச்
சோதனைச்சாவடி என்றுதான்
எல்லோரும் சொன்னார்கள்.

கூட்டத்தில் உள்ளவர்களுடன் சேர்த்து
நானும்
வரிசையில் அடுக்கப்படுகிறேன்.

அங்கே
நீர்க்காக்கைக்குள் தலைநீட்டிய
சில்லுப்புறா ஒன்று
எங்களை நோக்கி நகர

துருதுருப்பான விழிகள்.
துண்டாடும் பார்வை.
விரலிடுக்கில் அவள்
வில் பூட்டியிருந்தாள்.

கலியுகத்துக் கண்ணகியோ
கேட்கத் தோன்றும்.
உருவத்தில்
அவளும் பெண்தான்.
உள்ளுக்குள் அவளும் மனுசி தானா?

எனக்குள்ளே ஏராளம் கேள்விகள்.
மெல்ல மெல்ல வரிசை ஊர்கிறது.
இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக அவளை நோக்கி
நெருங்குகிறேன்.

அவள் கண்ணில் தெறித்த
அத்தனை கிரணமும்
என் மீதே குவிகிறது.

ஒவ்வொரு தீண்டலிலும்
என் உயிர்க்குலை நடுங்குகிறது.
பர்சைத் தடவுகிறேன்.
ஏதோ பாசை தேடுகிறேன்.

அதிசயம்.

என் முகம் பார்த்துச்
சிரிக்கின்றாள்.

ஆ... அவள் தான்.

அன்று உடலையும்
உள்ளத்தையும்
காக்கிச் சீருடையில் மூடியிருந்தவள்.

என் சிங்களத்தோழி.

தமிழர் யாருமே...


இப்போதும்
மரநிழலில் இருந்தபடியே
என் ஆச்சி
சருகு பொறுக்கிச் சேர்ப்பாள்.

கேட்டால்
பயிர் வளர உரம் இடுவாளாம்.
சிரிப்புவரும்.

அவள் வாழ்வது
அகதி முகாம் என்பது
எப்போதும்
அவளுக்கு நினைவில் வராது.

கைக்குத்து அரிசியோ?
கடைந்த குப்பைக்கீரைக்கறி இல்லையோ?
வீட்டு முற்றத்தில் காற்று வீசல்லையோ?
ஆச்சி அறியாமல் கேட்பாள்.

அவள் கண்ணுக்கு வெளிப்படாது.
வண்டு அரித்த ஊறல் அரிசிதான்
வயிற்றை நிரப்புதென்று.

நீட்டிக் களையாற
வேம்பு மரநிழலும்
பனை ஓலைப் பாயும் தான்
அவளுக்கு இப்பவும் வேணும்.

அவளுக்கு உரிமை இருந்தது.
தாய் நிலத்தில்
ஆசுவாசமாய் வாழ.

எங்கள் நிலை
இன்று அப்படி இல்லை என்றால்...
வருத்தப்படுவாள்.

அவளோ...
தமிழர்கள் எவருமோ...

அகதிகள் இல்லை.
என்றே
அவள் எப்போதும் நினைக்கிறாள்.

நாம் சுமக்கும் ஆயுதம்


கண்ணில் பட்டுத் தெறிக்கும்
அத்தனை கிரணங்களும்
அது ஆகத்தான் தெரிகிறது.

இன்று கைகளும் தோளும் கூட
விரும்பியும் விரும்பாமலும்
அதைத்தான் சுமந்திருக்கின்றன.

ஏன் ஊரில்
இப்போது எல்லோருமே
அதைத்தான் கைகளில்
தினமும் சுமந்து திரிகின்றனர்.

என் தந்தையும் தாயும்,
அவர் முந்திய முழுவரும்
வந்து பிறந்து குலாவி
மண், கரி தின்று

நடைகற்று எழுந்து
சீர்ப்படி நெல் விதைத்து
புழுதிமணம் மாறாத
புதுநெல்லுச் சோறுண்டு

புகழாய் மகிழ்வாய்
வாழ்ந்த மண்
இந்த மண்.

அந்த மண்ணிலேயே
நல்வாழ்விற்காக
எத்தனை நாள் ஏங்குவோம்?

அதுவும் இளைஞர்கள்
எதற்காக ஏங்கவேண்டும்?

அதனால் தான்
அதை சுமப்பதற்காக
உறுதியெடுத்தோம்.

இப்போது
எங்கள் ஊரின்
எல்லோர் கைகளும் தோள்களும்
மண்வெட்டி என்(ற)று
அதைத்தான் சுமக்கின்றன.

புரியாமல் சில.


இதுமட்டும்
இன்னும் எனக்கு புரியாமல்.

குண்டுகளை ஏற்கவும்
குருதியில் நனையவும்
நாங்கள் மட்டும் தான்
இம் மண்ணில் சபிக்கப்பட்டோமா?

எங்கள் நடைபாதைகள் முட்களாகவும்.
சறுக்கி விழுவது குருதிச் சேறாகவும்.
இருக்கைகள்
மண்டையோடுகளாகவும் தான்
இருக்கவேண்டுமா?

எங்கள் சூரிய விடியல்கள்
இன்றும்
காப்பரண்கள் முன் தான்
விடியவேண்டுமா?

இந்த தேசத்திற்கு நாங்களும்
இந்த தேசம் எங்களுக்கும்
எப்போதுமே எதிரானதா?

ஆயுதங்களை ஏந்தவும்
ஆட்சியாளர்களுடன் பேசவும்
எங்களுக்கு ஆசையா?

எங்களுக்கு மரணங்களை மட்டுமே
பிடிக்கும் என்று
உங்களிடம் சொல்லியவர்கள் யார்?

தமிழர் என்று சொல்வதால்

எந்தவொரு தடை முகாமிலும்
எங்களுக்கு
மதிப்புக் கிடைக்காதா?

நாங்கள் காண ஏங்கும் தேசம்
எப்போதுமே மலராதா?

இது மட்டும் புரியாமல்.

இன்னொருத்தி




நிஜங்கள் எல்லாம் போலியானதால்
எனக்குள் இருக்கும்
நிஜமான நினைவுகள் மட்டும்
போதும்.

வண்ண நிறங்களில் வாழ்த்துதலும்.
வரிவரியாகக் கவிதைகளும்.
வெறும் வண்ணமும்
வல்லின இடையின மெல்லினமுமா?

நெருக்கமான வியர்வை வாடை.
விரல் பிடித்த நகக்கீறல்.
உன்விரசத்திற்கு மட்டுமா?
இன்று பார்த்தால் சிரிக்கும்
நினைவுகள் கூட
உனக்குள் அற்றவனா நீ.

உன் பக்கத்தில் பாவம்
யார் இன்னொருத்தி.

அவளும்...

வியர்வை


மார்கழியில் வியர்த்தது
மேகத்திற்கு.

இரவு


எல்லா நிறங்களும்
கறுத்தன
இரவில்.

படகுப் பயணம்.


முகம் மூடு்ம் உப்புக்காற்றின்
முந்தானை கிழித்து
கடல் நீரின் அலைக்கூந்தலுக்கு
அழகாய் உச்சி பிரிக்கும்
படகில்

சீற் இல்லாத போதும்
பயணச்சீட்டு கொடுக்கும்
நடத்துனருக்கும்
சிலவேளைகளில் சில்லறை மீதிகளை
ரிப்ஸ் ஆக விட்டு

படகுப் பயணம் போவோம்
திருமலை - மூதூர் படகுச்சேவையில்.

ஓடி ஓடி வந்தும்
வரிசையில் ஒழுங்குடன் இடம்பிடித்தும்
இருக்கை இல்லாமல்
இடித்துக்கொண்டும் தொங்கிக்கொண்டும்

வாந்திக்கு மத்தியில்
வயிற்றுக் குமட்டலுடன் வந்துபோனாலும்

பால் சுரக்காத தாய்மடியில்
பால் உறிஞ்சும் குழந்தை போல
சில நாட்கள் படகில்லாமல் பதறுவதுண்டு.

அரச சேவை என்பதாலோ என்னவோ
அதுவும் தராளமாய்
விடுமுறை எடுப்பதுண்டு.
அந்த நாட்களில் தனியார் விசைப்படகில்
வீடு நோக்குவோம்.

புட்டிப்பாலை நேசிக்கும்
நெல்லிவிருட்சக் குழந்தைபோல.

அப்போதும்
ஊர் சேரும் வரையில்
படகினுள்ளே
உப்புச்சத்தியாக்கிரகம் இருப்போம்.
கோரிக்கைகள் ஏதும் இல்லாமல்

அரசசேவகன் மீண்டும்
ஆயத்தமாகும் நாள்வரையில்.

குமிழ் உடைந்த பேனா


முழுச்சூரியனை
விழுங்கிச் செரித்த இறுமாப்பு.
அழகாய் நிலவைப்
பெற்றெடுத்த பூரிப்பு.
கோடி நட்சத்திரங்கள்
துணைக்கு வந்த தெம்பு.

இப்படியே கட்டி இருளைக்
கக்கிக்கொண்டே
ஒரு இரவின் உறக்கம்.

சட்டென எஜமான் போட்ட
மொத்த உப்பின் உரப்பையும் திரட்டி
விசுவாசத்தின் வெளிப்பாட்டுடன்
ஊர் நாய்களின் மிரட்டும் அதட்டல்.

எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு.
மனித நடமாட்டங்கள் இன்றி
இப்படி உணர்வு
ஊர் நாய்களுக்கு வராது.

காதுகள் விரிந்து கிடந்தன.
இன்னும் சில நிமிடங்களில்...

ஏதோ ஒரு திசையில்
வேட்டு ஒலி கேட்கலாம்.
எங்கோ ஒரு வீட்டில் அழுகுரல் முனகலாம்.

குப்பி விளக்கொன்று
வீட்டுப் படலை நோக்கி கண்சிமிட்ட
சில முண்டங்கள்
சிணுங்கலுடன் நகர்ந்தன.

தழுதழுத்த குரலில்
அடுத்த வீட்டு அம்மா.
என்னுடைய மகனை
எவரோ வந்து கூட்டிப்போராங்கள்.

கதவோரம் நசுங்கிய விரலாய்
பதற்றத்துடன் அழுதாள்.

எங்கோ ஒரு திசையில்
சில வேட்டொலிகள்.
எல்லோருக்கும் நெஞ்சுக்குள் கனத்தது.

ஞாபகத்திற்கு வந்தது.

எப்போதும் அவர் கையில்
பேனா இருக்கும்.

நடைமுறை

ஊருக்குப்
போய்வந்தேன்.

மரங்கள் இன்னும்
பச்சையாகவே.

சிலுவையில் ஏற்றிய சமூகம்




பேசாமல் போ.
இது வல்லூறுகள் வட்டமிடும்
வடக்கு... கிழக்கு... தேசம்.

வாய் திறந்தால்...
உன் தலையும் துண்டிக்கப்பட்டு
தசைகள் கிழிபட்டு
இரை தூவப்படலாம்.
பேசாமல் போ.

உனக்கு வாக்களிக்கும்
உரிமை மட்டுமே.
நாட்டில் வாழும் அருகதையோ
வாய் பேசும் சுதந்திரமோ இல்லை.

பேசாமல் போ.
மீண்டும் மீண்டும்
கல்லறைகளையே எண்ணிக்கொண்டிரு.

கவனமாய் இரு.
இன்றிரவே உன் கதவும்
தட்டப்படலாம்.

தட்ட திறபடவும்
கேட்க கொடுபடவும்
தேடியது கிடைக்கவும்
இது கிறிஸ்து வாழும் பூமியல்ல.

என்றாலும்
அவரை சிலுவையில் ஏற்றிய
சமூகத்துடன்
நீ உறவு கொண்டிருக்கின்றாய்
ஞாபகத்தில் வைத்திரு.

அதனால் பேசாமல் போ.

உன் முன்னோர்கள்
சொல்லியிருக்கக்கூடும்.
அன்று நடுநிசியிலும்
பயமின்றி தனியே
வீதியில் இறங்கினோம் என்று.

சுதேசிகளாய்
தாய் நிலத்தில்
அவர்களின் ஜீவிதம் தாய்மடி சுகம்.

இப்போது அப்படி
தெருநாய்களால் கூட
நடமாட முடியாது என்று
அவர்களிடம் கூறு.

விளக்கம் எதுவும் சொல்லாதே.
நம்மைப் போலவே
அவர்களுக்கும் விளங்காது.

பேசாமல் போ.

நான் யாருமல்ல.


நான் யாருமல்ல.
என்னால்
எந்தக் கடவுளையும்
படைக்கவும் முடியவில்லை.

நான் யாருடையவனும் அல்லன்.
எனக்குள் எந்த மதமும்
ஏவப்படவில்லை.

அதனால் நான்
எவனுமே அல்லன்.
எனக்குத் தெரியும்.
எப்போதும் என்னால்
மனிதனாக வாழமுடியாதென்று.

அதுபோல் எனக்கு நன்கு தெரியும்
வேறு எந்த மனிதர்களும்
இங்கு இல்லையென்றும்.

நான் யாருமல்ல.
எப்போதும் மனிதனும் அல்லன்.
ஆனால்...

மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
கடவுள்களைப் படைத்த சிலரை
எனக்கு பிடிக்கும்.

ஆனால் நான்...

காதலன்


படைப்பாளி ஒருவன்
பழிக்கப்பட்டான்.

வேசியின் காதலன் என்று.

புலத்தில் வாழும் (சுதேச) நண்பனே


நம் தேசக்காற்றை
சுவாசிக்க ஏங்கும் தேசவிசுவாசியே.

சுதேசம் பறிக்கப்பட்ட
தேசத்தின் ஓரத்தில் நின்றபடி
உனக்கெழுதும் ஓலை இது.

உரிமை மறுக்கப்பட்ட தேசத்தில்
வசிப்பதால்
நான் நலமில்லை.
சம்பிரதாயத்துக்காக...
உன் நலமறிய ஆவல்.

நம் பள்ளி நாட்களில்
நம்மை சுமந்த
அத்தனை வீதிகளையும்
அன்று நமக்கு இனிப்புத் தந்த
அத்தனை தெருக்கடைகளையும்

இன்று
தொலைத்துவிட்டு நிற்கிறேன்.

அந்த இடத்தில்

இப்போதும்
நீயும் நானும் உண்ண விரும்பிடாத
தேன்குழல் இனிப்பு வடிவத்தில்
ஏதேதோ பெயர்ப் பலகைகளையே
பார்க்க முடிகிறது.

என்னை
அடையாளம் கண்டு கொள்ளாத
எத்தனையோ மனிதர்கள்.

எனக்குப் புரியாத
ஏதோவொரு மதலைப் பாசையை
பேசிக்கொண்டு.

என்னால் அடையாளப்படுத்த முடியாத
என் வீடும்
அயல்வீட்டுப் பிள்ளைகளும்.

அவர்கள் பார்வையில்
அன்னியன் தோரணையில் நான்.

நண்பனே...

என் தேசத்தில்
நானே அன்னியப்படுத்தப்படுகிறேன்.
விருந்தாளிகளால் விசாரிக்கப்பட்டேன்.

ஓர் நாள் நீ
என்னைத்தேடி நம் தேசம் வந்து
என் கல்லறையை தூசுதட்ட
மயானத்தையே தேடி அலையப்போகிறாய்.

நம் இனம் வாழ்ந்ததை
அடையாளம் காட்ட
நாளை அதுவும் மீதப்படப்போவதில்லை.

என் சுதேச விசுவாசியான நண்பனே...

நாளை நம்தேசம் தேடி
சமாதான நகரில் அலையாதே.
 

விழியோடல்கள்