திங்கள், 24 நவம்பர், 2008

சதுரக் கண்ணாடி முட்டை

காக்கைகளால் சூழப்பட்டுள்ளது
எனது வெளி.
நீ
ஒரு குயிலின்
எல்லாத் தவிப்புகளுடனும் உள்ளாய்.

 கையில்
ஒரு சதுரக் கண்ணாடி முட்டையைப் போல்
 காதலைத் தந்துள்ளாய்.

இப்போது
அஜாக்கிரதையாக என்னால்
இருந்துவிட முடிவதில்லை.
உறங்குகையில்..வீதிவலம் போகையில்..

மடியில் கட்டிக்கொண்டே தான்
மலங்கழிக்கவும்
வேண்டியதாயிருக்கிறது.

பாதியில் விழித்துக்கொண்ட
பின்சாமத்து
நிர்வாணக் கனவைப் போல
ஒரே இரவில்
அதை அவசரமாக கலைத்துவிட
யாரையும் அனுமதிக்க முடியாது.

அவித்த முட்டையைப் போல
இனியதை
ஒருபொழுதின் உணவில் சேர்க்கவோ
பலருமதைப் பகிரவோ முடியாது.

அதை நானே சினைப்படுத்தி
எனதன்பை
உயிர்ப்பிக்க விரும்புகிறேன்.

மழைக்கால முற்றத்தில் குமிழும்
நீர்க்குமிழிகளைப் போல
நீளக்கண்ணாடிக் குவளையில்
நிறைந்து வழியும்
பியரின் நுரையைப் போல
எனக்கது மிக அழகானதும்.
விருப்பமானதும்.

பிச்சைக்காரனின்
கோவணத்தைப் போல
இன்னும்
பெண்மை பேசும் பெண்ணின்
சுருங்காத வயிறைப் போல
அதை நான் பாதுகாப்பேன்.

பின்பொரு தடவை

பல வண்ணக் காட்டுண்ணிப் பூக்களின்
சாயம் பூசிய பட்டாம்பூச்சியாகவோ
சிறு பராயத்து வெள்ளை முயலாகவோ

வாய்க்கும் ஒரு நாளில்

குழந்தை பருவத்து
என்னைப் போலவோ அதை அன்பளிப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்