புதன், 17 டிசம்பர், 2008

மனநோயாளர்களின் பிரக்ஞையும் மாறுபடும் கருத்தியலும்

என்னிடம் நெருங்கும் சில
மனநோயாளர்களின் பிரக்ஞைகள்
வினோதமானவை.

அத்தகையவர்களிடம்
நெருங்குவதும் பழகுவதும்
துணிவுடையதும் சுவாரசியமானதும் கூட.

வாய்ப்புள்ள போதெல்லாம்
கத்தத் தொடங்கி
அர்த்தமில்லாத உளறல்கள் போல
ஏதேதோ பேசுவார்கள்.

தாம் பேசுவது எல்லாமும்
செய்வது முழுவதும்
மிகச் சரியானவை.
என்பதே அவர்களின் நம்பிக்கை.

தம்மை பெருமையுடன் பேசுவதிலும்
மற்றவர் அதை ஆமோதிப்பதிலும்
அசட்டுத்தனமான ஆனந்தம்
அவர்களுக்கு.

கையில் கிடைப்பனவற்றையெல்லாம்
தாம் விரும்புகின்றபடி
மாற்றமுடியும்.
என்ற எண்ணத்துடன் முயற்சிப்பார்கள்.

அல்லாதபோது
மாறவேண்டுமென
வரட்டுத்தனமாக அடம்பிடிப்பார்கள்.

தம் குளறுபடிகளையெல்லாம்
சகித்துக் கொள்பவர்களை
சேர்த்துக் கொள்வதும், சேர்ந்து கொள்வதும்

மாறானவர்களிடமிருந்து
விலகி நடப்பதும், விலக்குவதும்
அவர்களின் அறியாமைத் தனங்களின்
அடையாளங்களாயிருக்கின்றன.

என்னை நோக்கி நகரும்
மனநோயாளர்களின் பிரக்ஞைகளும்
கருத்தியலும் கூட
இன்னும் வினோதமானவை.

முன்பொரு தடவை ஏற்றதை
மறுத்துரைப்பதும்.
மறுத்திருந்ததை ஏற்பதும் என...
தருணத்திற்கு ஏற்ப
கருத்துக்களுடன் முரண்படுவார்கள்.

அவர்கள் மீதான நம்புதல்கள்
அசாத்தியமானதும் அசாதாரணமானதும்.

அற்புதமானவற்றை தூற்றி
தூக்கியெறிந்துவிட்டு
கழிவுகளை சிலாகித்துப் பேசுவார்கள்.

கழிவுகளோ அற்புதமானவையோ
யார் கொடுத்தார்கள் என்பதே முக்கியம்.
நாற்றம் பற்றிய
துல்லியமான பிரக்ஞையிலிருந்து
அறுந்துபோய்க் கிடக்கிறார்கள்.

அவ்வப்போது
அவர்களின் நடத்தைகள்
கேள்விக்கும், கேலிக்கும் உரியவையாகும்.

பாராட்டல்கள் பற்றிய ஏக்கங்கள்
அவர்களுக்குள்
நிறைய அமிழ்ந்து கிடக்கின்றன.

துரதிஸ்டம்...

தாம் மனநோயாளர்கள் என்பதை
அவர்களால் எப்போதும்
உணர்ந்துகொள்ள முடிவதில்லை.

2 கருத்துகள்:

 

விழியோடல்கள்