செவ்வாய், 16 டிசம்பர், 2008

வாழ்தலின் நிதானம்

அடைக்கப்பட்ட ஆடுகளின் விடுதலை யாசகம்
விமர்சிக்கப்பட்டு முடிவதற்குள்ளாக
சலனமின்றி மூப்படைகிறது
சந்ததிகளின் ஆயுள்.

விடியலைப் பறைசாற்றும் நோக்கில்
ஆர்ப்பரித்த சேவல்களால்
வாழ்தலின் வேட்கை அதிகரித்து
உயிர்த்தெழுந்த போதெல்லாம்
சேவல்களின் தலைகள் பலியிடப்படுகின்றன.

சிறை மீட்பாளர்கள்
சிந்திக்கும் அவகாசத்தில்
கூண்டுக்குள் வேட்டையாடல்கள்
விஸ்தரிப்புடன் அரங்கேறி முடியும்.

கசாப்புக் கடைக்காரனின்
நீட்டப்பட்டிருக்கும் கைகளின் முடிவிலுள்ள
பிடியளவு தழைகளையும்

ருசித்துத் தின்னும் ஆட்டின்
இறுதி நிமிட வாழ்தலின்
நிதானத்திற்கு நிகரானது
ஆதிக்குடிகளின்
நம்பிக்கையும், தீர்மான நிராகரிப்பும், எதிர்ப்பும்.

ஓர்மத்துடன்
ஒவ்வொரு கத்திவீச்சுக்கும்
தலை மறுக்கும் ஆற்றலுடன்
ஆடுகள் துணியும்.

ஓர் தினம் பட்டி உடைக்கும்.
பச்சைப் பெருவெளிகள் தேடி
படையெடுக்கும்.

பின்னாக வயிறு புடைக்க மேயும்.
வெளி முழுவதும் உலவும்.
அவ்வெளியே
பின் நாளில் பட்டியாக்கப்படும்.

ஆடுகளுக்காக..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்