இப்போது எல்லாமும் மாறிவிட்டது.
கண்களில் படிந்திருந்த தேவதையின் வடிவு.
மௌனத்தில் பதறும் மனோநிலை.
கைகோர்த்து நடக்கும் கற்பனை.
வாழ எண்ணிய கனவு நாட்கள்.
ஓயாது பேசி மகிழும் ஓய்விடம் .
சிரிப்பொலி கேட்டு பொலிந்திருந்த முகம்.
இப்போது எல்லாமும் மாறியிருக்கின்றன.
உயிராகிப் போயிருந்த அற்புதம்.
நேசிப்பதற்கான
நிகழ்தல்களின் ஆச்சரியம்.
பிரிந்தால்
சாவதாகச் சொன்ன சத்தியம்.
தனித்துவிட்டாய் என்று அழுத பொய்.
விலகிவிடமாட்டோம் என்றிருந்த நம்பிக்கை.
எல்லாமும் மாறிவிட்டது.
உன்னில் சுமப்பாய் என்ற உள்ளுணர்வு.
ஆயுள் நிறைவுறும் வரை நீளூம் இவ்வுறவென்ற வீறாப்பு.
காதை நிரப்பும் முழுநாள் தகவல்.
காத்திருந்து சோர்வடைத்த சில மாலைப்பொழுதுகள்.
ஆசைகள் உணர்வுறுத்தும் சிலிர்ப்புகள்.
உணவை நினைவூட்டும் குறுஞ்செய்தி .
வேலை நேரத்தில் குறுக்கிடும் அழைப்பொலிகள்.
உறங்க வைக்கும் இரவு வணக்கம்.
இழப்பின் கவலைகளை கரைத்து
அவ்வப்போது ஒழுகும் நீர்த்துளிகள்.
அத்தனையும் காலச்சுழற்சியில்
காணாமல் ஆக்கப்பட்வைகளாயின.
இப்போது எல்லாமுமே மாறியிருக்கின்றன.
(06/12/2025. 07:48 pm)
சம்பூர் வதனரூபன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக