கரடுமுரடான என்னில் ஒன்றை கரைத்து
ஓய்வு தேநீர் இடைவெளி முழுவதும் குடித்தோய்வதானது உன் அன்பெனினும்..
புரிந்து பின் அதில் மீதி மண்டிமண் வழித்து மீண்டும் கல்லாய் இறுக முயல்வதானது என் சிலபொழுது மௌனம்..உணர்.
நீ.. ருசிப்பதாக சிறுக சிறுக நொறுக்குவதான தீனி
என் உணர்வுகளின் சுருள் முறுக்கொன்று என்பதாம்.
கட்டியெழுப்ப முடியாது தோற்றோ கைவிட்டோ கிடக்குமொரு கல்லடுக்கின் இடைகளை இறுக நிரப்பும் கலவையான உறவொன்றின் பிணைப்பு.
உருப்பெறுமா? பாசிபரவ பாழடையுமா?
குறிவிறைத்த கனவொன்றை கலைத்த சிறுநீர் முடுக்குப் போல
உன் மனவோட்டங்களால் அடித்தோடி தொலையுமோ
வியர்ப்பு பொழுதில் வீசி
சிறு காற்றாய் ஓய்வு ஒழிமோ
அவ்வவ் கர்வம் வெல்ல அதுவரை சேமித்த காதல் மொழிகள் கொலையுறுமோ ?
மரணம் தொடும் முன்
மனிதவுடல் உணர்வறும் நிலைவரை
மன்னிப்புகள் நிறைவுறுமோ?
இந்த உறவில் சுதந்திரம் என்ன?
தெருவில் புணர்ந்து மகிழ்ந்திருக்கும் நாய்களை
இழுத்து விலக்கி விரட்டுவதான
எல்லை மீறலா?
முகிழ்ந்து முகிழ்ந்து சிதையும் நீர்க்குமிழி சந்தோசங்களா?
அப்படியானால்
உன் சிலுவைக் கம்புகளை
நீயே சுமப்பதாக ஒப்புக்கொள்.
31/05/2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக