என்னுள் ஆழ அமிழ்ந்திருந்த நீ
மெதுவாக மிதந்து மேலெழுகிறாய்.
பரவாயில்லை தப்பித்துப் போ.
புத்திசாலித்தனமான முட்டாள் தனங்களைப் புரிதல் கடினம்.
இந்த பைத்தியக்காரத்தனமான அன்பு என்ன தான் செய்தது.
தவறுகளை புரிந்துகொள்ள முடியாத முட்டாள் ஆக்கியதைத் தவிர
நீயே வாழ்வென இருந்தாய்.
நானுன் வாழ்வில் இருக்கிறேன்.
தவிர
இன்னும் உன்னைக் கவர
என்னில் என்ன மிச்சம் ஒட்டியிருக்கிறது.
நீ சினந்து உமிழ்ந்த வெறுப்பின் அருவருப்பைத் தவிர
கலங்கிய என் கண்களில் மங்கித் தெளியும் உன் வட்ட முகத்தைத் தவிர
எண்ணங்களில் காய்ந்து போன எதிர்பார்ப்புகளும்
நீ உடைத்த ஒரு துண்டுக் கனவையும் தவிர
துளி நகைச்சுவையும்
நொடிளவு வெறுமையும் இல்லாத என்னிடம்
என்ன இருக்கிறது உன்னிடம் பேச.
விழி பிதுக்கும்
உன் ஒவ்வொரு வினாவிலும்
விடை அறியத் தோற்கிறேன்.
ஒவ்வொரு தடவையும் நீயே வென்று என்னை இழக்கிறாய்.
என்னை நீயும் உன்னை நானும் இழப்பதைத் தவிர
இந்த பைத்தியக்கார தனமான அன்பு என்ன செய்தது.
அதிபுத்திசாலியை முட்டாள் ஆக்கியதை தவிர
புரிதலின்றிப் போனது பற்றி புரிய முடிந்தது
புரிவது பற்றியே புரியாதுள்ளது.
நீ என்னை இழக்கிறாய்.
11/06/2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக