இன்றைய நாளில்
வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.
வெயில் ஈரமானதைச் சுட்டெரிக்கிறது.
அளவுக்கு மீறிய அமுதநீர் நிலமெங்கும்
நஞ்சாகித் தெகிட்டித் தேங்கிக்கிடக்கிறது.
பலருக்கு
இருந்த வாழ்க்கையும்
சிலருக்கு மனிதர்களும் இன்றில்லை.
காலமும் இடங்களும் காரணங்களும்
பொதுவில் வேறுபட்டாலும்
அவல வாழ்வுநிலை மாறிவிடவில்லை.
நாட்கள் சில நகர
வெள்ளநீர் வடிந்தோடிப் போகும்.
கண்களில் ஈரம் காய்ந்தும் விடும்.
தேக்கமெங்கும் கடலிலும்
மீன்கள் சிக்கிட நாரைகள் குவியும்.
கடைத்தெரு சன நெரிசலாகும்.
வாகனம் இழந்தவர் காப்புறுதியால் மீள்வர்.
வீதிகள் இரைந்து
விபத்துகளும் இயல்பாகும்.
பகிர்ந்த உலர் உணவுகளும் தீர்ந்துவிடும்.
பசித்த வயிற்றை அமிலம் தின்னும்.
பள்ளி தொடங்கி
பை,பொத்தகம்,சட்டை,,சப்பாத்தென்று
தேடுவார்கள்.
தொழில்கள் ஒழிந்திருக்கும்.
விதியென
வாழ்நாள் வெறுமையோடு கழியும்.
காலம் எளிமையானவர்களையும்
ஏழைகளையுமே மீள மீள வதைக்கிறது.
[02/12/2025,08:47am]
சம்பூர் வதனரூபன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக