திங்கள், 27 அக்டோபர், 2008

அப்போதெல்லாம்


அப்போது நீ குமரிதான்.
அன்று நான் குமரனா
என்பது எனக்குத் தெரியாது.

ஆடையின்றிக் குளித்ததும்
நீ பார்க்க
அம்மா முதுகில் ஒளிந்ததும்
அப்படியே நினைவில் உண்டு.

அப்போதெல்லாம்
நானே என்
பல் துலக்கினேனா
என்பது என்
நினைவில் இல்லை.

நீ பேனா பிடித்து
படித்த நாட்களில்
எனக்கு உன்
பென்சிலைக் கொடுத்தது
நெஞ்சில் உண்டு.

அப்போதெல்லாம்...
நான் ஏதும் படித்தேனா
என்பது என்
நினைவில் இல்லை.

உன் இடையைக் கட்டிக்கொண்டு
உறங்கியதாயும்
விரலைப் பிடித்துக்கொண்டு
வீதியில் சுற்றித் திரிந்ததாயும்
ஞாபகம்.

அப்போது அதில்
விரசம் இருந்ததாக
நான் நம்பமாட்டேன்.

தவணை விடுமுறையில்
என்னைப்பிரிந்து நீ
உன் தாயோடு போய்விடுவது
தெரியும்.

அப்போதெல்லாம்
ஏன் விடுமுறை வருகின்றது
என்பதே அறியாமல்
மண்ணில் புரண்டு அழுததுண்டு.

நீ எச்சில்படக்
கடித்துக்கொடுத்த
மாங்காய்த்துண்டும்

உன்னோடு உப்புச்சேர்த்து
கல்லில் உரசித்தின்ற
புளியம் பிஞ்சும் அமிர்தம்.

அப்போது நீ குமரிதான்.
நான் குமரனா என்பது தான்...

ஆனால் அப்போதே
உன்னை நேசிக்கிறேன்
என்பது தெரியும்.

அன்று நீயும் என்னை நேசித்தாயா
என்பது தான்
இப்போதும் எனக்குத் தெரியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்