வியாழன், 23 அக்டோபர், 2008

நான் தான் நம்பு

உனக்குப் பிடிக்கும் என்றும்
உன்னைப் பிடிக்கும் என்றும்
கவிதை எழுதியவன்

உனக்கு உறவானதால்
என் எதிரிகளையும்
நண்பர்கள் ஆக்கியவன்

உன்னைத் தவிர
எந்தப் பூக்களுமே அழகில்லை
என்றவன்
உன்னோடு பேசியே
தமிழ் மறந்து போனவன்

உன் மடியில் உறங்கி
மீண்டும் என்
தாய்மடி சுகம் கண்டவன்

உன்னைப் பிரிந்ததற்காய்
வெட்ட வெளியில் நின்று
தனியே வாய்விட்டு அழுது பார்த்தவன்

நீ வாழ்வதற்காகவும்
நான் வெல்வதற்காகவும்
தோற்றுப்போனவன்

உன் கூண்டுக்குள்
நுழைவதற்காய்
சிறகுகள் நறுக்கிக் கொள்ளவும்
உன் குடிசைக்குள் வாழ
தலை குனியவும் தயாரானவன்

நீ சிரிப்பாய் என்றால்
எவர் முன்னும் கோமாளி ஆகி
கோழையாகத் துணிந்தவன்

எல்லாமே
நான்! நான் மட்டும் தான்
நம்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்