வியாழன், 23 அக்டோபர், 2008

நம்பிக்கையோடு

வீட்டு முற்றத்தின்
முருங்கை மரக் கிளையில்

ஒவ்வொரு நாளும்
பார்க்கிறேன்
அந்த ஒற்றைப் புறாவை
ஒரு வகையில்
இங்கு நானும்
சிலவேளை அங்கு நீயும்
இப்படித்தான்

அண்ணார்ந்தபோது
வெளிறிய முகத்தோடு
ஒட்டிப்போகும் மேகங்களில் ஒன்று

எனக்காக சில துளிகள்
அழுது விட்டுப் போனது
இப்போதெல்லாம்
இரவுப் படுக்கையில்
சில் வண்டுகளின்
சீட்டி ஒலி அதிக அலறல்

ஜன்னல் விசாரிக்கும்
வறண்ட காற்றின்
வாசமற்ற சுவாசம்
சொல்லிக்கொள்வது கேட்கும்
நீ என்னில் இருந்து
தொலைவாகி விட்டாய் என்று

ஏன் எப்போதுமே மணியடிக்கும்
என் ஊரின் தபால்க்காரன்
என் படலைப் பக்கம்
எட்டியும் பார்ப்பதில்லை

என் முனகல் சொல்லப் போகவும்
உன் முகவரியை யாரும்
அறிந்திருக்கவும் இல்லை
இரண்டொரு நாளாக
தெருக் கோடிப பலாமரத்தில்

காகம் ஒன்று
கரைந்து விட்டுப் போகிறது
சரி காத்திருக்கிறேன்
உன் காகித உறைக்காக
உள்ளே கடிதம்

இல்லையேல் கல்யாண
அழைப்பிதழ் ஒன்றையேனும்
அனுப்புவாய் என்ற நம்பிக்கையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்