வியாழன், 23 அக்டோபர், 2008

பய மயம்

எனக்கு பயம்
எங்கே
உன்னைக் காதலித்து
விடுவேனோ என்று...

நான் நானாகவே
நிசப்தமானபோதும் கூட.

எனக்குள் குளவிகள்
கூடுகலையும்
இரைச்சல் எழும்பும்

எனக்குப் பயம்
உன் ஆசைகள்
எனக்குள்
புற்று வளர்க்கிறதோ என்று

எப்போதும் என்
எண்ணங்களுக்கு மறுதலையாக
மொழி பெயர்க்கும்
உன் அணுகு முறைகள்
எனக்கு அவ்வளவாகப்
படிப்பதில்லை

நீ அழகியா என்றாலும்
அதில் எனக்கு
உடன்பாடில்லை
பிறகென்ன எனக்கு உன் மீது
இப்படியொரு பித்தலாட்டம்
புரியாது

உன் மதலை வார்த்தைகளை
நான் ரசிப்பதுண்டு
உன் தமிழ் எனக்கு
இனிப்பூட்டுவதும் உண்டு

எனக்கு பயம்
உன் வாய்மொழியை
அசைபோடுவதால.
என் தாய் மொழியை
தவறவிட்டு விடுவேனோ என்று

ஒற்றைப் பூவைத்
தொட்டு
மொய்க்கும் மட்டும் கூச்சலிட்டு
சுற்றிச் சுழலும்
ஏராளம் வண்டுகளுக்கு
நடுவே...

மௌனமாக வந்து
வண்ணம் பூசி தேன் குடித்துப்
போகும் வண்ணப்
பூச்சிகளுள் ஒன்றாக
இருந்து விடவே
நான் எப்போதும் எண்ணுவதுண்டு

ஆனாலும்...

எனக்கு பயம்
ஏதாவது வண்டுக்கு
கொடுக்கு நீண்டு
உன் மடியில்
தேன் தின்றுவிட்டுப்
போய்விடுமோ என்று

இருந்தாலும்
எனக்குத் தெரியும்
நீ எப்போதும்
வண்ணத்துப் பூச்சிகளையே
அதிகம் விரும்புகிறாய் என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்