வியாழன், 23 அக்டோபர், 2008

நிலவுசுட்ட நாட்கள்

உன் கொஞ்சல்
மொழிகளுக்காய் கொஞ்சக்காலம்
நான் கெஞ்சித்
திரிந்த அந்த நஞ்சு நாட்கள்

கொட்டக் கொட்ட
விழித்து உறக்கம் விரட்டி
பக்கம் பக்கமாய்க் கவிதைகளைக்
கொட்டிக் கிறுக்கிய
சில கொள்கையுள்ள நாட்கள்

யாருக்கும் தெரியாமல்
என் இரகசியப் பெட்டகத்தில்
நீ ரசித்தவை
எல்லாம் சேமித்த
சில செல்லாத நாட்கள்

ஊருக்கு வெளியே
உன்னைக் காண்கையில்
உள்ளத்தின் உண்மைகளை
உரக்கக் கத்தி
உன்னிடம் உளரத் தோன்றிய
அடடா!
அந்த உத்தமமான நாட்கள்

என் காதல் வேருக்கு
நானே...
நீர் ஊற்றிக் கொண்டிருக்கையில்

உன் பெயருக்குப் பின்னும்
நெற்றிக்கு மேலும்
எவனோ இடம்பிடிக்க
கன்னத்தைக் கண்ணீரும்
நெஞ்சை உன் நினைவுகளுமாக

எரிமலைக்குழம்பாக
குமுறி சுட்டுப்போன
அன்றைய சூடான நாட்கள்
நினைவுகள்
சுடும் நாட்கள் மட்டுமல்ல

அவைதான் எனக்கு
நிலவுசுட்ட நாட்கள் கூட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்