வியாழன், 23 அக்டோபர், 2008

நினைவுகளுடன் தொங்கியபடி

எந்தப் படுக்கையும்
மடி தருவதாயில்லை
உன் நினைவுகள்
என்னை விடுதலை செய்யாத
வரையில்

வீதியில் ஏதேனும்
சிரிப்பு ஒலி வந்து
காதுகளுக்கு அருக
கொலுசு கிலுக்கினால் போதும்

ஏதோ ஞாபகத்தில்
இப்போதும்
என் ஜன்னல் கதவுகள்
திறந்து கொள்கின்றன

ஆனால்...
அமாவாசை இரவில்
நிலா தேடிய குழந்தையாக
எப்போதும் போல

என்னைச் சுற்றி
வெறுமை மட்டுமே எஞ்சும்

யார் சொல்லியும்
முகத்தில் ஒட்டிய
உன் உதடுகளை

வழித்து எறிய முடியாமல்
தனிமை தேடி தாகமெடுத்து
அலையும் மனது

என் வீட்டுச் சமையலில்
மஞ்சல் சேர்ப்பதை
யாரும் நிறுத்தாத வரையில்

மனதில் இருந்து
உன் முகத்தை மட்டும்
எப்படி என்னால்
மறக்கடிக்க முடியப்
போகின்றது

இப்படியே
வீட்டுப் படலையின்
இலந்தை
மரத்தில் தொங்கிக் கிடக்கும்

கூழாங் கற்களாக
உன் நினைவுகளைத்
தேக்கிய படி

இன்னும் எத்தனை நாள்
நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்