வியாழன், 23 அக்டோபர், 2008

பிள்ளைக்கால விளையாட்டுத்தனம்

நீ விடைபெற்ற சில நொடியில்
சிதறிப்போன என் சுயத்தைத்
தேடிப்பொறுக்கி சேமிப்பதற்குள்ளாக

எனக்குள்
ஆயிரம் சிலுவைகளை
சுமந்து தவி்த்த உணர்வு
தவறு ஒன்றுக்காய்
நீ தவித்த பொழுதுகளில்
மழை நேரத்துத் தாழ்வாரப்பீலியாக
மனம் அழுது வடித்தது பற்றி
நீ அறியமாட்டாய்

என் மௌனத்தைக் கலைப்பதற்காக
நீ மனநோயாளியாகி
என் பின்னே பிதற்றித் திரிந்ததும்
உன்னை மாற்றத் துணிந்த
என் அத்தனை முயற்சிகளும்

பிள்ளைக்கால
விளையாட்டுத்தனம் என்றாலும்
அவை என் மனதை பிசைந்து
உன்னை என் மனதிற்குள்
கல்வெட்டாய் வார்த்துவிட்டுப் போனது
என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்