திங்கள், 27 அக்டோபர், 2008

மாறிப்போன வாழ்வு

மாறியிருக்கும்.
உன் உடலும். முகமும்.

இப்போதெல்லாம்...

மஞ்சள் பூசியிருக்கமாட்டாய்.
கைவிரல்
மருதாணியையும் கைவிட்டிருப்பாய்.
மாறியிருக்கும் உள்ளமும் உணர்வுகளும்.

மறந்திருப்பாய்...
சிறுவயதில் வாங்கித் தின்ற
பலவண்ண சீரகப்பல்லி மிட்டாய்களை.
நானும் நீயும் பக்கமாய் இருந்து
சுவைத்த பாலும் பழமும்
குச்சு மிட்டாயோடு சேர்த்து
பார்த்து நெடுநாளாகிப் போய் விட்ட
என் முகத்தையும்.

இப்போது இல்லைதான்.

நீ ரசித்த என் அரும்பு மீசை.
நீ மாற்றச்சொன்ன முன்கோபம்.
தவிர
இன்னும் சிலவும்.

ஆனால்...

இன்னும் மாறாமல்
உன்னை நேசித்த உள்ளமும்
உனக்கு மட்டும் தெரிந்த  மிளகளவு மச்சமும்
மீதமாக.

அழுதிருப்பாய்
நீ அம்மாவானபோது.
நம் ஆசைகளைக்
காலம் நிராகரித்திருப்பதை நினைத்து...
இப்போது நானும்.

நீ அம்மாவாய்த் தட்டிக்கொட்டிய
கிண்ணிப்பிட்டின் மண்ணும்
நான் அப்பாவென்று
கட்டித் தந்த மணல் வீட்டு மண்ணும்
மாறாமல்
இன்னும் மணலாகவே.

சிரித்திருப்பாய்.
நீ என்னை தின்னச்சொல்லி தென்டித்த
சிரட்டைக்கறிச் சோற்றையும்
நாம் கடற்சிப்பிகளாய் சேகரித்த பணத்தையும்
எண்ணி.

தவறாக இருக்கலாம்.
என் நினைவுத்திணிவுகளை
நெஞ்சில் வளர்க்கிறாய் என்றும்
ஆசைக்காகவே  இடைவரை
நீளக்கூந்தல் வளர்க்கிறாய் என்றும்
நினைத்தது.

சிலவேளை நீ சிந்தித்திருப்பாய்.
தூரமானதால் துயரில்லை
அல்லாவிட்டால்
சிறகொடிந்திருக்கும் மனம் என்று.

மன்னித்துவிடு.
மன்னிக்கச்சொல் உன் கணவனையும்.
இன்னும் உன் நினைவுகள்
எனக்குள் இருப்பதால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்