வியாழன், 23 அக்டோபர், 2008

மரணம் வரையில்

ஒரு மழை நாள்
உன் வாசலில்
நீ முகம் பார்த்த நீர்க் குமிழியில்

உன் முகத்தோடு
என் முகம் சோ்த்து
பார்க்க முனைந்தபோதே
உடைந்துபோன
மழைநீர்க் குமிழியை

உன் கடவுளுக்கு முன்
நீ தீவைத்த
சூடத்தின் சுவாலையை
அணையாமல்
என் கைவிரல்கள் மூடிக் காத்தபோது
தீபம் அணைந்து
கரி மட்டும்
என் கைநனைத்தபோது

உருகிய சூடம் போல
உன் முன் உருமாறி
நின்றேனே
மாமரத்து நிழலில் நீ
மண்டியிட்டு அழுதது அறியாமல்
உன் மண்டையில்
குட்டுவைத்து

தட்டில் வழிந்து தேங்கிய
உன் கண்ணீர்க் கரைசலை
தொட்டுத் தொட்டே மாங்காய் தின்றது

நீ தொலைத்த
இரண்டு ரிபன்களுக்காய்
கண்ணீர் வராமல் சிணுங்கியபோது

நான் கண்டெடுத்ததாய்
சொல்லி நான்கு ரிபன்கள் தந்தேனே
வீட்டில் புதுகறுப்புக்
குடையை கிழித்ததற்காய்
அடிபட்டேனே

உனக்காய் எழுதிக்கொடுத்த
கவிதைநோட்டின் கடைசித்தாளில்

கடற்கரையோர கடையில்
கடலை மடித்துக் கொடுத்தபோது
கடலைப் போலவே
கலங்கிநின்றேனே

நீயே... என் கனவில்
வருவதாய்ச் சொல்ல
காத்திருந்த என்னிடம்

என் நண்பனை விசாரித்தபோது...

போலியாய் சிரித்தேனே
‘போங்கோ அண்ணா’ என்றாயே
மறப்பேனா
என் உயிர் மரிக்கும் வரையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்