அலைகளுக்கும் அழுகைகக்கும் நடுவே ஆச்சரியமும் தான்.
ஆண்டவன் பிரித்து வைத்த மனிதனை அலைகள் வந்து மனம் பிணைத்துச் சென்றன.
திக்கற்று நிர்க்கதியானவர்களைக் கண்போதும்
நெஞ்சடைப்பையும் தாண்டி நெஞ்சின் மூலையில் ஏதோ கொஞ்சம் நின்மதி.
எங்கள் குச்சி வீடுகளை குலைத்தெறிய முடிந்த உன்னால்
உறவுகள் எல்லாமாய் குழந்தையென்றும் பாராமல்
வளர்ந்த நாய்க்குட்டியையும் விலக்காமல்
கும்பிட்ட கடவுளையும் சேர்த்து
குதறிப்போட முடிந்தது உன்னால்.
எங்கள் சொத்துகளைத் தின்று சோற்றுக்கின்றி
அலைய விடவும் அலையே முடிந்தது உன்னால் தவிர..
இத்தனை நாளும் உன் அழகையே இரசித்த
எங்களின் ஆடைகளை இழுத்து அம்மணமாய் ஓடவிடவும் முடிந்தது உன்னால்.
ஆனால் ஆனால்
பிணம் விழுங்க முடிந்த உன்னால்
மரணங்களை மலையாக குவிக்க முடிந்த உன்னால்
எங்கள் மனித நேயத்தை சிதறடிக்க முடிந்ததில்லையே.
மாடிகளை மதில் சுவர்களை இடித்து இழுத்துப் போட முடிந்தது உன்னால்
மனவுறுதியை உடைத்து அடித்துப் போக முடியவில்லையே.
உன் துரோகம் கூட எங்களுக்குள் துணிவையே தூவிப்போயிருக்கிறது.
அழுகிறோம் உண்மை ஆனால் துடைப்போம்.மீண்டும் எழுவோம்.
உன் முதுகில் மீனவன் படகேற்றி வலைவீசி
அலைக்கூந்தலுக்கு உச்சி பிரிப்போம்.
மீண்டும் உன் கரைக்கு வருவோம்.
கால் நனைப்போம்.
தெரியும். அப்போது..
எம்மைப் பொங்கி அழித்த
உன் அலைக்குஞ்சுகள் புதிதாய் பிறப்பெடுத்து வந்து
எங்கள் கால்களில் நுரைப்பூக்கள் தூவி நிச்சயம் மண்டியிடும்.
. - சம்பூர் வதனரூபன்(2005)
(சுனாமி பேரலை அனர்த்தமும் அதன் தாக்கமும் மக்களின் வாழ்வியலை நிர்க்கதிக்குள்ளாக்கி மீள்ழெழல் நடந்த 2004/2006 காலப்பகுதியில் நான் மட்/ஆசிரியர் கலாசாலையின் ஆசிரிய மாணவன். அக்காலத்தில் பாதிப்புக்குள்ளான ஆசிரிய நட்புகளதும் அவர்களது உறவுகளதும் துயரில் பங்கெடுத்தும் பல்வேறு அனர்த்த மீட்பு நடவடிக்கைகளிலும் புனரமைப்பு செயற்பாடுகளிலும் பங்காற்றிய வலி நீங்கா நினைவுகள் பல உண்டு. அக்காலத்தில் ஆசிரியர் கலாசாலையின் 'கலைச்செல்வி- 2005' ஆண்டு நிறைவு மலரில் வெளிவந்த பதிவுக் கவிதையே இது.கவிதையின் போக்கு ,கனதி,நவீனம், வடிவம், உன்னதம் போன்ற சிலாகிபிற்கும் பரிசோதனைக்கும் புறத்தே வலிகளுக்கும் உணர்வு வெளிப்பாட்டுக்குமான பதிவுப்பிரதியாக மட்டும் கொள்ளலாம்)