சனி, 14 ஆகஸ்ட், 2010

நாயாக மட்டுமே இருப்பதன் சாத்தியம்


கதவோரம் தாழ்வாரம் அடுப்படிச் சாம்பல் மேடு.. என
சுருண்டு கிடந்த நாய்கள்
ஒன்றாய்க் கூடி குமைந்து கிடந்தன

ஒன்றைச் சினைப்படுத்த..

தமக்குள் தாமே.. தம்மை முறைத்தும்
தமக்குள்ளே தம்மையே கடித்தும்
ஒன்றை ஒன்று விரட்டியும் முந்தியடித்தும்
முதன்மைப்படவும் முதலில் ஏறவும்

போராடுவது போலவும்
போட்டியிடுவதாகவும்
தமது உரிமையை விடாது தாமே காப்பதாகவும்
அதற்காய்
முழுவதையும் இழந்தாயினும் புணர்வது
எனவும் போல
தம்மையே முறைத்தும் கடித்தும் விரட்டியும்
குறிகள் விறைத்து குமையும்
ஒன்றையே புணர.

சினைக்குள் சாத்தியம்
நிமிர்ந்த வாலுடனோ
சுருளும் விதமாகவோ
குரைக்கக் கூடியதாகவோ
உறுமிக் கடிக்கத் தக்கதாகவோ
வேட்டைத் தனத்தோடோ
வெகுளியாகவோ
சில நாய்கள்.


நாயாக மட்டுமே இருப்பது சாத்தியம்.

இனியவை
விரும்புவதும்
ஏற்பதுவும்
எவரும் பல்லிடுக்கிலிருந்து கிளறி துப்பும்
எச்சில் இறைச்சித் துண்டாயிருக்கலாம்.
ஏப்பங்களின் பின்னாக தூக்கிப் போடும்
எலும்பு மீதமாக இருக்கலாம்.

இந்த நாய்கள் காத்திருக்கும்.

சொச்சமாகவேனும்
எதை வீசினாலும்
கவ்விக் கொள்ளும்.
விருந்தெனச் சண்டையிட்டு
அதையும் சகதியில் வீசும்.
பின்

வீராப்போடு வெறுங்குடலைக் கழியும்.
கடைசியில் எச்சிலூறி
எவரேனும் கால்களை நக்கிக் கிடக்கும்.
நாய்கள்.

வேட்டைப் பற்களிருந்தாலும்
விரல் நகம் நீண்டிருந்தாலும்
அவ்வப்பொழுதுகளில் உறுமினாலும்
எலும்புகள் தானென்றில்லை 
எது கிடைத்தாலும்
நாக்கொழுகித் தின்னும்.

தமக்குள் தாமே
முந்தும்..கடிக்கும்..
இவை
நாய்கள்.. நாய்கள்.. நாய்கள்.

இனி நாய்கள் மட்டுமே.

2 கருத்துகள்:

  1. நாய்கள் என்பவை எங்காவது விழுவதை பொறுக்கித் தின்னவும் கிடைக்கும்போது படுத்து எழவுமே காத்துக் கொண்டிருப்பன. விருந்தென வரும்போது அடுத்தவரைப் பற்றி யோசிக்காது தன்னைப் பற்றிய சிந்தனையோடு மட்டுமே காவிக்கொள்பவை... அவை பற்றி எழுதுவதென்பது சிரமம் தான் ரூபன்... ஏதோ எழுதிவிட்டாய்... இனி நாய்களின் பக்கம் போகும்போது சற்றுக் கவனமாகப் போ... கடிக்கக்கூடும்...

    பதிலளிநீக்கு

 

விழியோடல்கள்