ஞாயிறு, 11 ஜனவரி, 2009

சித்தார்த்தனும் வீதி வலமும்

கண்ட இடத்தில் நிறுத்தும்
சட்டப் புத்தகங்கள்
காக்கிகளால் உறையிடப்படுகின்றன.

நீங்கள் முன்பே அறிந்தும் இருக்கலாம்.

ஒவ்வொருவரது சுதந்திரமும்
இன்னொருவரது மூக்கு நுனிக்குப் புறத்திலுள்ள
நூலிழை இடைவெளியுடன்
நிறுத்தப்பட்டுவிடுகிறது என்பதை.

ஒவ்வொருவரதும் ஒவ்வொன்றும்
தற்காலிகமாக மறுக்கப்படலாமே ஒழிய
நிராகரிக்க முடியாதவை.

ஒருவரின் முன்னுள்ள
கோப்பையிலும் குவளையிலும் நிரப்பப்பட்டிருக்கும்
ஒவ்வொன்றும்
எல்லோருடையதிலும் நிரப்பத் தகுந்தவை.

இன்றுள்ளவர்கள் வேலி விரித்திருக்கும்
மிக வசதியான அடைப்புக்குள் தான்
நேற்று இருந்தவர்களின் படுக்கையும்
கழிப்பறையும் கூட
ஆதியாகவும் நிரந்தரமாகவும் அமைந்திருந்தது.

கழிப்பறையின் கதவுகளை மாற்றவும்
புதிதாக ஒரு படுக்கை விரிப்பால்
அங்குள்ள தொட்டிலை
மெருகூட்டி வைத்திருக்கவும்
இலகுவாக மிக இலகுவாக
இப்போது உள்ளவர்களால் முடியும்.

தனது தொன்மங்களை பாடிவரும்
காற்றை வரவேற்று திறந்திருந்தன
முன்னுள்ளவர்களின் ஜன்னலும் கதவுகளும்.

ஆனால்...

திறந்த வீட்டினுள் நுழையும்
'அது' போல இப்போது உள்ளவர்கள்
நுழைந்துகொண்டார்கள் என்பதை
எவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

இனி எந்த வீதியிலும்
புத்தர் மீண்டும் கவச வண்டிகளில்
சித்தார்த்தனாக வலம்வர முடியும்.

3 கருத்துகள்:

  1. தல தமிழ் மணத்தில பதிவு செய்யுங்க என்டு சொன்ன கேட்கிறீங்க இல்லையே சரி கவிதை தன்குரிய வெளிப்பாட்டை எட்டிவிட்டது. இனி உங்கள் வெளிப்பாட்டுமுறை சொல்லாடல் முறை உத்திகள் மாறவேண்டும் இல்லாவிட்டால் தேங்கும்


    சத்தியன்

    பதிலளிநீக்கு
  2. சத்தியன் சொல்வது உண்மை நண்பரே, நானேகூட யதார்த்தமாகத்தான் பார்க்க நேரிட்டது. இதனை எல்லோருக்கும் தெரியும்படியாக விளம்பரமாக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

 

விழியோடல்கள்