புதன், 18 பிப்ரவரி, 2026

முன்பு நான்

 சுவரேறித் தப்பித்த பொழுதெல்லாம்                 

உன் சிறைக்கதவுகள்

என் மீள்வருகைக்காக 

நம்பிக்கையோடு திறந்து கிடந்தன.

நான் வழியறியாதவன் என்பதை 

நீ மட்டுமே அறிந்திருந்தாய்.

இப்போது 

அந்தக் கதவுகள் மூடிக்கிடக்கின்றன.

திறவுகோல்களை எப்போதோ 

நானே தொலைத்துவிட்டதாகச் சொல்கின்றாய்.

அதுவல்ல...

உண்மையில் நீ இப்போது  

காவலாளியாக இல்லை.

அன்று 

கவிதைகளின் சொற்களாய் 

நீ இருந்தாய்.

இன்று என் வலிகளின் 

காயங்களாகிப் போய்விட்டாய்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

பிராயச்சித்தம்.

தூணிலும் துரும்பிலுமாகத் தேடி

காணாது 

கடவுளை  சந்திக்க கருவறைக்கே சென்றேன்.

முக்காரமிட்டு வழிமறித்த மாடு 

மதிய உணவு முடித்த சுவாமி இப்போது தான் துகில் கலைத்துத்    துயில்கிறார் என்றது. 

தகவலை சொல்லி அர்ச்சிக்கத் தேட பல்லிடுக்கிருந்த பருப்பை கிளறித் துப்பி

நெய் முதுகில் வழிய குரு மடப்பள்ளி அறையுள் புகுந்தார்.

திரும்ப 

வாசலில் தகாதென கழன்ற செருப்புகள் சிரிக்கதலை குனிய அணிந்து வேறோரு கருவறைக்கு ஓடினேன்.

மறுநாள் பரீட்சை .

 

விழியோடல்கள்