திங்கள், 7 மார்ச், 2011

தேர்தல் பற்றி தெளிதல்


பால்ய நண்பன் தேடி வந்தான்.

அக்காளுக்கு அருகிடத்திலொரு இடமாற்றமும்
அண்ணனுக்கு அலுவலகத்தில் பதவியுயர்வும்
அடுத்த கோட்டாவிலேயே அவனுக்கொரு வேலையும்
செய்துதருவதாக கூறிய வேட்பாளரை நம்பி..
தேர்தலின் முக்கியத்துவம் பற்றியும்
ஓட்டுக்களை செகரிப்பதெவ்விதம் செல்லுபடியாக்குவதெப்படிஎனவும்
ஏதோவொரு இலக்கத்தையும் நபரையும்
வெல்லச்செய்தால்.. வேண்டிய உதவிகள் பெறலாம்.
என எனையும் தெளிவாக்கினான்.

நானவனை அமரவைத்து பேசினேன்.

அவனது தெளிவு என்பது..
வேட்பாளனின் இலக்கத்தை தெளிவாக தெரிந்து வைப்பதிலும்
மற்றவருக்கும் தெரியப்படுத்துவதிலும்
அவருக்காக ஆள் கூட்டுவதிலும்  
அவரது அல்லது அவர்களது பொய்களையும் போலி நடத்தைகளையும்
உயர்த்தி உத்தமமாக்குவதற்கு முனைவதிலுமிருக்கிறது.

சுவரொட்டிகளுக்கு பசை பூசுவதிலும்
பிரசாரக்கூட்டங்களுக்கு கதிரை அடுக்குவதிலும்
கோணம் கோணமாக நகல் படம் எடுப்பதிலும்
தேவைக்கு ஏற்ப வன்பானம் குடிப்பதிலும்
வறுத்த சோறும் புரியானியும் உண்பதிலும்
அவர்கள் பிடித்திருக்கும் வாடகை வண்டிகளில்
ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிட்டு உலவுவதிலும்
வேட்பாளர் வீட்டையும் கட்சி பணிமனையையும்
கொடிகள் கட்டி பரபரப்பாக வைத்திருப்பதிலும்

நாட்டில் இல்லாதவர்கள் 
நான்கு நாட்களுக்கு முன் செத்தவர்கள்.
வந்து ஓட்டுப்போட வசதியில்லாதவர்களின்
வாக்காளர் அட்டைகளை செகரித்தலிலும்
வாக்களிப்பு நிலையத்தில் ஏஜண்டாக 
நாள் முழுதும் வாக்காளரை எண்ணுவதிலும்
அல்லது 
கள்ள ஓட்டு போடுவதிலும் கலக்கம் செய்வதிலும் இருக்கிறது.


மக்கள் தெளிவாயுள்ளார்கள் போலும்..
அவர்கள் நினைக்கிறார்கள்
வாக்கெடுப்புக்களே அனாவசியமானது
வாக்களித்தல் நேர மெனக்கேடு..
தாங்கள் ஓட்டு போடாவிட்டாலும்
தங்களுக்கான பிரதிநிதிகள் தெரிவாவார்கள்
அல்லது தெரிவாக்குவார்கள் என்று.

மக்கள் தங்கள் அரசியலுக்காக அவாவோடு இருக்கிறார்கள்
இவர்கள் தத்தம் அரசுக்காக அலைகிறார்கள்.
போகட்டும்
எல்லாத்தமிழனுக்கும் கிடைக்காத 
வசதியும் சுதந்திரமும்
சிலருக்காக வாய்க்கிறதே போகட்டும்.
மற்றவருக்காக ஏதும் செய்யாவிட்டாலும்
அவர்களுக்காகவாவது ஏதும் சேகரிக்கட்டும்.

இன்னுமொன்று.. 
பூனைகள் வளர்க்கிறோம் 
அவை எலியை பிடிக்காவிட்டாலும்
பண்டங்கள் நடுவே கத்தி திரிந்தாலே போதும் 
எலிகள் பண்டங்கள் பக்கம் வர தயங்கும்.
அதுபோல
நாம் பூனையோன்று வளர்ப்பதற்காவது முன்வருவோம்.
கடிக்கும் பூனை இல்லாவிட்டாலும்
கத்தி திரியும் ஒன்றையாவது.

சனி, 5 மார்ச், 2011

அடையாளங்களற்றிருத்தலும் அன்னியமாகித் திரிதலும்

யூதர்களைத் தழுவியதான யுத்தத்தில் இணைந்திருந்தோம் என்பதில்..
நாசிகளுக்கு நடுங்கி
உரிக்கப்பட்ட குறிநுனியின் தோலை இழுத்துப் போர்த்தி
தன்னை பாதுகாத்துக் கொள்ளத் தவித்த
யூத இளைஞனைப் போல
தமிழர்களின் அடையாளங்களுடன் பயந்து நடுங்கி
தவித்து ஒடுங்கி.. ஒதுங்கி ஒழிந்த
துரதிஸ்ட துன்பியல் காலங்கள் முன்னே நகர்ந்து போயின.

தமிழினை பேசுவோரெல்லாம் தமிழராயிருந்த அடையாளம் போக
பயங்கரவாதிகளெல்லாம் தமிழர்கள் எனும்
அடையாளமிடுதலின் பின்
எங்களினது சகோதரர்கள் போரிடப் புகுந்த போது
புறநானூற்றுத் தமிழனென்று புகழ்ந்தவர்களும்
சகோதரிகளிடம் ஆயுதங்களைக் கொடுத்து
குட்டையாக வெட்டிய தலைமுடியுடனும்
நீளக்காற்சட்டையும் கனத்த சப்பாத்துக்கால்களோடும்
பொட்டிட்டிராத நெற்றிகளோடும்
போராளிகளாயுலவவிட்ட பொழுதுகளில்..
தமிழர் நிலமெங்கும் பால்நிலை சமத்துவம் தலையெடுத்துள்ளதாக
தொடை தட்டியவர்கள்
பிறகு கள நிலங்களில்
தமிழச்சியின் நிர்வாணத்தையும் தமிழனின் சாவையும்
ஊர்வலமாக்குகையில் ஊமைகளானார்கள்.
பெரும்பான்மைகளென்றுரைக்கும் சிறுமை குணத்தார்
குமைந்து ரசித்து சிரித்து மகிழ்தனர்.

போராளிகளெல்லொரும் எப்போதோ இறந்துவிட்டனர்.


அப்பாவிகள் அதிகமாய் அழிந்து போயினர்
அரைகுறை முண்டங்களாயினர்
நிலம் பறிக்கப்பட்டு நீர்ப்புழுக்களுடன் வாழ பழக்கப்பட்டனர்
மறச்சிகள் மானமிழந்தனர்
வாழ்வை ருசிக்கவென்றில்லாது சாவைத் தவிர்க்கவே
சதை விற்கவும் துணிந்தனர்.

வரலாறுகள் பேசுகின்றன
உரோமப் பேரரசில் கிறீஸ்துவின் மீதான குற்றம்..
ஏரோது மன்னனுக்கெதிரான பேரரசை நிறுவ முயன்றதான
அரச குற்றமவாளி என்பதே
விடுதலை கேட்டவர்கள் விமர்சிக்கப்பட்டு குற்றவரளிகளாயினர்
ஆயுதங்களை பிடிகொடுத்தவர்கள்
ஏரோது வகை அரசொன்றில் ஆளுகையில் அமர்ந்தனர்
சந்தர்ப்பவாதிகள் தலையாட்டித் தப்பினர்
காட்டிக் கொடுத்தவரெல்லாம் கௌரவம் பெற்றனர்
முடமான போராளிகள்
முன்னாள் போராளி சான்றிதழ்களுடன் வீடுகளில் முடங்கினர்.

சாப்பிடக் கொடுத்தவர்களென்றும்
மரியாதை அழைப்புக்களில் மாலையிட்டவர்களென்றும்
மக்களின் கூட்டங்களில் உரத்துப் பேசியவர்களும்
பலசரக்கு சாமான்கள் வாங்கிக் கொடுத்தவர்களென்றும்
கசிப்பு வடித்த குற்றத்தில் தண்டிக்கப்பட்டு பங்கர் வெட்டியவர்களும்
மண்பொதிகள் அடுக்கியவர்களும்
தங்களிடமிருந்த மாட்டு வண்டிகளிலும் கூட
ஆயுதங்களை எடுத்துச்செல்ல இடமளித்தனரென்று சந்தேகிக்கப்பட்டவர்களும்
முன்னரங்கின் முன்வீட்டுக்குரியவரும் முகாம்கள் அமைந்திருந்த நிலக்காரரும்
பதுங்கியிருந்து சுட்டோடிய பின் பற்றைகள் வளர்ந்திருந்த காணிக்காரரும்
வீதிச்சோதனையின் போது வீதியில் போனதாலும்
சுற்றி வளைப்புகளில் ஓடியொழியாது வீட்டிலிருந்த நோயாளிகளும்
தற்பாதகாப்புக்கென முன்னே அழைத்துச்செல்லப்பட்ட வயதாளிகளும்
முக்காட்டுக் காட்டிகளால் தலையசைத்தவர்களும்
விசாரணையின் பின்னாக விடுவதாக அழைத்துப்போனவர்களுமென..

சிறையில் செத்தவர்கள் போக..
சந்தேக கைதானோர்களேயின்னும் அடைக்கப்பட்டிருக்கின்றனர்
பயங்கரவாத தடுப்புச் சிறைகளில்

இன்றெங்கள் தேசியம்
தாய் நிலமற்றது. தனிக் கலாச்சாரமற்றது. தொன்மங்களைத் தொலைத்தது.
தோற்றும் போனது.
தமிழைப் பேசுவதனால் மட்டுமே தமிழர் என்றுமானது
ஆதனால்
பலரின்று முன்னாள் தமிழராயும் ஆயினர்.

குர்தீஸ்களைப் போலவே
நாமுமின்று நாடற்று நாடுகள் முழுவதிலுமுள்ளோம்.
டொலர்களையும் பவுண்களையும் யூரோக்களையும் பிறவும் சேகரிக்க
நாடோடிகளாகி இரவல் சுகதாரிகளாயுமுள்ளோம்.
தத்தம் அடையாளங்களை விரும்பாமலும்
அதை மறந்தும் மறுத்தும் மாறியும் இன்னொன்றாயும் வேறுமாயும்
இலங்கைக் குடியேற்றவாசிகளென்றும் ஈழத்தமிழகதிகளென்றும்
யுத்தமில்லாத யுத்தகாலத்தில்
தமிழராயும் முன்னாள் தமிழராயும் தங்ளிஸ்களாயும்
வேறொன்றான அடையாளங்களோடும் அடையாளங்களற்றும் இருக்கின்றோம்.

 

விழியோடல்கள்